கிருபை சத்திய தின தியானம்

ஜனவரி 19              தேவனுடைய வார்த்தை        (எரே 18:1-18)

      ‘ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும்,

தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை’ (எரேமியா 18:18).

      ஒரு கிறிஸ்தவனுடைய அஸ்திபாரம் தேவனுடைய வார்த்தையாக உள்ளது. தேவனுடைய வார்த்தையை விட்டு நாம் விலகிப் போவது மிக ஆபத்தானது. தேவனுடைய வார்த்தை தம்முடைய மக்களை விட்டு ஒருக்காலும் நீங்குவதில்லை என்று சொல்லபடுகிறது. ஆகவேதான் லேவியராகமத்தில் ‘கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்’ (லேவி 10:11) என்று  சொல்லப்படுகிறது.

        கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தை மட்டுமே வழிகாட்டியாக இருக்கிறது. நாம் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியும் படியான பிரமாணமாக நம்முடைய மனதில் மிக ஆழமாக அதை பதித்துக் கொள்ளுவது மிக அவசியமானது. எங்கு ஆண்டவருடைய வார்த்தையை விட்டு விலகிப் போகிறோமோ அப்பொழுது மெய்யான பாதுகாப்பை விட்டு விலகிப் போகிறவர்களாக இருக்கிறோம். அது ஒருக்காலும் நமக்கு நேரிடக்கூடாது. இன்னுமாக  வேதம்: ‘ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்’ என்று சொல்லுகிறது. ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் தேவனுடைய வேத அறிவை காத்துக் கொள்ளுவது மிக அவசியமானது, ஒரு மெய்யான கிறிஸ்தவன் தேவனுடைய வார்த்தையை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது அவன் கர்த்தருடைய தூதன் என்பதை நினைவில் கொள்.

       நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையைக் காத்துக்கொள்ள வேண்டும். அது மிக அவசியமானது. இல்லையென்றால் நாம், நம் வாழ்க்கையில் இருளில் நடக்கிறவர்களாகக் காணப்படுவோம். மேலும் நம் வாழ்க்கையில் கர்த்தருடைய வார்த்தையைப் பற்றிகொள்ளுவோம். நம்மைவிட்டு தேவனுடைய வார்த்தையையும் வசனமும் நீங்கிப் போகக்கூடாது.