மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய பிரமாணம்:
மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய பிரமாணம்: இஸ்ரவேல் மக்கள் ஆபிரகாமின் சந்ததியாக ஆதியாகமம் புத்தகத்தில் இருந்த காலத்தில் தேவனுடைய பிரமாணம் தீர்க்கமாக கொடுக்கப்படாத ஒரு நிலை இருந்தது. இந்த ஜனங்கள் ஏறக்குறைய நானூற்று முப்பது வருடம் எகிப்தில் அடிமைகளாக இருந்தார்கள். மோசே அந்த மக்களை வெளியே கொண்டுவந்து ஆண்டவருடைய பிரமாணத்தைப் போதிக்கிறதை நாம் பார்க்கிறோம். இந்தக் காரியம் இஸ்ரவேல் மக்களின் சரித்திரத்தில் மிகப்பெரிய திருப்புமுனை என்று சொல்லலாம். கர்த்தர் இந்த ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தைப் போதிப்பதற்கு முன்னதாகவே நியாயப்பிரமாணத்தைக் குறித்த ஒரு எச்சரிப்பைக் கொடுப்பதை நாம் யாத்திராகமத்தில் பார்க்கிறோம். “கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது” (யாத் 13:9). அதாவது நியாயப்பிரமாணத்தை எழுத்து வடிவில் கொடுப்பதற்கு முன்பாக, நியாயப்பிரமாணம் உன் வாழ்க்கையின் மையமாகக் காணப்பட வேண்டும் என்று எச்சரிக்கிறார். இந்த எச்சரிப்பானது ஏதோ இஸ்ரவேல் மக்களுக்கு மாத்திரம் கொடுத்தது அல்ல. ஆரம்பத்தில் மனிதனை படைத்ததிலிருந்தே இந்த எச்சரிப்பை கொடுத்திருக்கிறார். இது எந்த காலத்துக்கும் பொருந்தும். மோசே இஸ்ரவேல் மக்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்து மறுபடியும் மறுபடியுமாக அதை நினைப்பூட்டினார். இந்த வேதப் பிரமாணத்தை மையமாக வைத்து வாழவேண்டும் என்று எச்சரிக்கிறார். “இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்” (உபா 4:1) நம்முடைய வாழ்க்கையிலும் இந்த பிரமாணமே மையமாகக் காணப்பட வேண்டும். இதிலிருந்து நாம் தவறும்பொழுது மாத்திரமே ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்னடைவை சந்திக்கிறோம். நாம் பிழைத்திருக்கும் படிக்கு தேவனுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவேண்டும்.