seven words of jesus on the cross in tamil
சிலுவை என்னும் முழுமை
இயேசுவின் 7 வார்த்தைகள்
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,
இச்சிறு நூலை எழுதுவதற்கு கிருபை பாராட்டின திரியேக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது. ( 1 கொரி. 1:18) என்ற கர்த்தரின் வார்த்தை எக்காலும் உண்மையாகும். இந்த விசுவாச வார்த்தைகள் சில வருடங்களாக குன்னூர், அட்டடி இங்கிள்டீன் சுவிசேஷ ஆலயத்தில் போதிக்கப்பட்டதாகும். புத்தக வடிவில் வெளி வந்தால் பலருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும் என்று குடும்பத்தாரும், சபையாரும், பாப்திஸ்து சபை போதகர்களும், நண்பர்களும் உற்சாகப்படுத்தியதால் இது சாத்தியமாயிற்று எனலாம். இதற்காக அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஜெபிக்கிற அனைவருக்கும் இத்தருணத்தில் ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊழியத்தில் பல ஆண்டுகள் உறுதுணையாயுள்ள மனைவி ஈடித் ஹெலன் பியூலா, பிள்ளைகள் ஷேரன், சவானிடா மற்றும் சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்காக இத்தருணத்தில் கர்த்தருக்கு நன்றி சொல்கிறேன். வாசிக்கவும், எழுதவும் அவ்வப்போது ஊக்கமளிக்கும் கனத்திற்குரிய அருள்திரு. பிலிப்.கே மல்லி அவர்களுக்கும், ஊழியத்தின் ஜெபப்பங்காளராகவும், பாரங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பராகவும் பல ஆண்டுகள் இணைந்து பயணிக்கும் மைத்துனர் திரு.ஞா.அன்புராஜ் அவர்களுக்கும் நன்றிகள் பல.
இந்நூலில் காணப்படும் சத்தியத்தின் சாராம்சங்களை சிறுவயதில் கற்றுக் கொடுத்து, கர்த்தருக்குள் மரித்த எனது அன்பான தகப்பன் திரு. ஜே. இஸ்ரவேல் அவர்கள் நினைவையும், இந்த சத்தியத்தில் வாழ்ந்து நித்திய இளைப்பாறுதலில் பிரவேசித்துள்ள உடன்பிறவா சகோதரி ஜே.ஜெசி ரோஸ்லிண்ட் மற்றும் எனது பாசத்திற்குரிய தங்கை அன்னாள் ரீட்டா துரைராஜ் நினைவுகளையும் ஏந்தி இது வெளியிடப்படுகின்றது.
நூல் அறிமுகம்
சகோதரரே இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தை பிரசங்கிக்கிறவனாய் இருந்தால் இதுவரைக்கும் என்னத்திற்கு துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப் பற்றிய இடறல் ஒழிந்திருக்குமே? (கலாத்தியர் 5:11)
விருத்தசேதனம் போன்ற கிரியைகள் மூலம் இரட்சிப்பை பெறமுடியுமென பவுல் போதிப்பதாக பக்க வழியாக நுழைந்த சிலர் சொல்லித் திரிந்த நிலையில், சிலுவையோடு, விருத்தசேதனமும் இரட்சிப்புக்கு அவசியம் என்று நான் பிரசங்கித்து வந்தால் யூதர்கள் மூலம் வரும் இடறல் இல்லாமல் இருந்திருப்பேனே! என்று எதிர்வாதிடுவதைத்தான் இந்தப் பகுதி நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது. இதைத்தான் சிலுவையைப் பற்றிய இடறல் ஒழிந்திருக்குமே? என்ற காலத்திற்கும் மாறாத கூற்றை பவுல் சொல்லியுள்ளார். கடவுளின் சத்தியம் மாறாததாகையால், 2021 ம் வருடத்தில் வாழும் நமக்கும் இந்த சவால் இருக்கிறதென்றால் இதில் ஆச்சரியம் ஏதுமில்லையே! ‘சிலுவை இல்லாத கிறிஸ்து என்னும் செழிப்பும்: கிறிஸ்து இல்லாத சிலுவை எனும் சடங்கும்.’ சுவிசேஷம் என்ற பெயரில் இன்று பிரசிங்கிக்கப்படுகிறது.
நாம் செய்யும் கிரியையின் மூலம் கடவுளின் இரட்சிப்பை சம்பாதிக்க முடியும் என்பது போன்ற தந்திரமான போதனைகள் பவுலின் காலத்தில் இருந்ததைப் போல் தற்போதும் மிகவும் பரவலாகிவிட்டது. இன்றைய போதனைகளின் தன்மையை ஆராயப் போனால் இது நன்கு புலப்படும். இதுதான் மெய்பக்தி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இன்று அநேகரை இந்த போதனைகள் கவர்ந்து இழுத்திருக்கிறது. பெரோயா பட்டணத்தாரைப் போன்று வசனத்தைக் கேட்டு ஆராய்ந்து, நற்குணசாலிகளாக மாற துக்ககரமாக இன்று பெரும்பாலானோருக்கு விருப்பமில்லையே? பிரசித்தி பெற்ற பிரசங்கிமார்களே இதைத்தான் போதிக்கிறார்களென அவர்களையும் தங்களுக்கு துணைக்கு சேர்த்துக் கொண்டு தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். நியாயப்பிரமாணம், அடிப்படையில் கிறிஸ்துவிடம் நம்மை வழிநடத்தும் உபாத்தியாய் இருக்கிறதென்றும், விசுவாசம் வந்த பின் நாம் உபாத்திக்கு கீழானவர்கள் அல்ல என்றும், கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் மட்டுமே அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் எனவும் கலாத்திய விசுவாசிகளுக்கு பவுல் சொன்னதை கலா. 3:24-26 வசனங்களில் நாம் தெளிவாகப் படிக்கிறோமல்லவா?
மேலே குறிப்பிட்டதைப் போல கிறிஸ்து இல்லாத சிலுவை-சிலுவை இல்லாத கிறிஸ்துவை உள்ளடக்கிய போதனைகள் உலகெங்கும், குறிப்பாக தமிழ் பேசும் கிறிஸ்தவ உலகிலும் மலிந்து கிடக்கிறது. இந்தப் பின்னணியில் சிலுவை எனும் முழுமை என்ற இந்த சிறிய நூல், பாவத்தில் முற்றும் வீழ்ந்த மனிதனின் மீட்புக்காக கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றின இரட்சிப்பின் முழுமையை எடுத்தியம்பும் அவரது ஏழு வார்த்தைகளை தியானித்து ஆசீர்வாதம் பெற கர்த்தர் கிருபை செய்வாராக!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த 7 வார்த்தைகளையும் வேத வல்லுநர்கள் ஆராய்ந்து வரிசைப்படுத்தியுள்ளார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்வது நல்லது. இவைகளை நாம் தியானிக்கும் போது கவனிக்க வேண்டிய இரண்டு அத்தியாவசியமான அம்சங்கள் பின்வருமாறு:
1. வேதம் முழுவதற்குமான பொதுவான விதியாகிய, மற்ற வேத வாக்கியங்களோடு ஒப்பிட்டுத்தான் சிலுவை மொழிகளையும் தியானிக்க வேண்டும் எனும் கோட்பாடு. (ஏசாயா 34:16.17: ஒப்பீடு ஏசாயா 53:12. // மாற்கு 15:28: மற்றும் மத்தேயு 27:40)
பழைய ஏற்பாட்டிலும், ஏன்? வேதம் முழுவதிலும் சிலுவையைப் பற்றிய அடையாளங்கள், தீர்க்க உரைகள் மற்றும் உருவகங்கள் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆதி 3:15ம் வசனத்திலேயே, இந்த செய்தியின் சாராம்சம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது மறுக்க முடியாத உண்மையாகும். இந்தப் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இதை தியானிப்பது சரியானதாக இருக்கமுடியாது. வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும். எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது. (2 தீமோ. 3:16,17)
2. இந்தப் பகுதியைத் தியானிக்கும் போது உணர்ச்சியை மட்டும் சார்ந்து அணுகாதபடி உணர்வின் அடிப்படையில் நாம் தியானித்து பயனடைய வேண்டும்
இதற்கு உதாரணமாக, லூக்கா 23:27.28 வசனங்களில் தம்மை பின் தொடர்ந்து அழுது கொண்டிருந்த ஸ்திரீகளை பார்த்து ஆண்டவர் எருசலேமின் குமாரத்திகளே. நீங்கள் எனக்காக அழாமல் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று சொன்னதை சிலுவையின் சம்பவத்தோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். ஆண்டவர் எனக்காக பாடுபட்டபடியால் நானும் சில நாட்கள் விரதம் இருந்து பாடுபடுவது அல்லது சில நாட்கள் குறிப்பிட்ட வகை உணவு வகைகளைத் தள்ளி வைத்திருப்பது மட்டும் வேத பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்லவே
இந்தப் பின்னணியில் கிறிஸ்துவின் மரணத்தின் மூன்று தன்மைகளை நாம் வேதபூர்வமாக அணுகுவது மிகவும் அவசியமாகும் அவையாவன
1. முன் குறிக்கப்பட்ட மரணம் அல்லது நித்திய கோணம் (PRETERNATURAL DEATH)
திரியேக தேவனின் நித்திய தீர்மானத்தின் சாரம்சமாக கிறிஸ்துவின் மரணம் முன் தீர்மானிக்கப்பட்டது என்பதை வேதம் நமக்கு பல கோணங்களில் எடுத்துக் காட்டுகிறது. வெளி 13:8ம் வச: உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்று சொல்வதும்: அப்.2:23ம் வச: தேவன் நிர்ணயித்த ஆலோசனையின்படியும், அவருடைய முன்னறிவின்படியும் கிறிஸ்து ஒப்புக் கொடுக்கப்பட்டவர் என்று பேதுரு யூதர்களுக்கு ஞாபகப்படுத்துவதும்; அப், 3:18ம் வச தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் இந்த அடிப்படையில் அல்லது இதை மையமாக வைத்து முன்னுரைத்ததும் நாம் கூர்ந்து கவனிக்கத் தவறக்கூடாத இந்த சத்தியத்தை கூறுகிறது. சொல்வதென்றால், தீர்க்கதரிசிக்காகத்தான் தீர்க்கதரிசனங்கள் முன்வைக்கப்பட்டது எனலாம். அந்தத் தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துதான் என்பதை வேதம் நமக்கு சுட்டிக் காட்டுகிறதே? (அப் 3:22.23: லூக்கா 18:31) – பழைய ஏற்பாடு கிறிஸ்துவை நிழலாகவும், புதிய ஏற்பாடு அதன் நிறைவேறுதலாகவும் சித்தரிக்கிறது என்பது தெளிவு. எனவே. கிறிஸ்துவின் மரணம் நித்தியத்தில் முன் குறிக்கப்பட்ட மரணமாகும்.
2. செயற்கை மரணம் அல்லது நீதியின் கோணம் (UNNATURAL DEATH)
இயேசு கிறிஸ்து பரிபூரணராகையால், கடவுளின் ஆதி நியமப்படி அவர் பாவத்தின் விளைவான மரணத்தை எதிர்கொள்ள வாய்ப்பே இல்லை எனலாம். அதாவது, பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் என்பதும்: பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதும்தான் கடவுளின் நியதியாகும். இதைத்தான், முதல் ஆதாமிடம் கடவுள் பிரமாணமாக கட்டளையிட்டார் என்பதை ஆதியாகமம் 2 அதிகாரம் 17ம் வசனத்தில் தெளிவாகப் படிக்கிறோம். பிந்தின ஆதாமாகிய இயேசு கிறிஸ்து பாவம் அறியாதவர் (2 கொரிந்தியர் 5:21: அவர் பாவம் செய்யவில்லை (2 பேதுரு 2:22); அவரில் பாவமில்லை (1 யோவான் 3:5). எனவே கடவுளின் மாறாத பிரமாணத்தின்படி கிறிஸ்துவானவர் மரிக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவு. ஒருவனும் என் ஜீவனை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள மாட்டான் என்று கிறிஸ்து சொன்னதை யோவான் 10:18ல் வாசிக்கிறோம். இந்தப் பின்னணியில்தான், அவர் தாமே முன்வந்து தமது ஜீவனை ஆடுகளுக்காக கொடுத்ததை பற்றி வேதத்தின் பல இடங்களில் படிக்கிறோம். உதாரணமாக, யோவான் ஸ்நானகன் கிறிஸ்துவைப் பற்றி சொல்லும் போது இதோ; உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1:29) என்று குறிப்பிட்டார் மேலும் யோவான் 10:10,15-17 வசனங்களில், தாம் ஆடுகளுக்காக தமது ஜீவனை கொடுக்கும் நல்ல மேய்ப்பனாக தம்மை சுட்டிக் காண்பித்திருக்கிறார். ஆகவே. இது கடவுளின் நீதியை நிறைவேற்ற அவர்தாமே ஏற்றுக் கொண்ட மரணமாகும்.
3. இயற்கை மரணம் அல்லது வீழ்ச்சியின் கோணம்: (NATURAL DEATH)
கிறிஸ்து உண்மையாகவே மரிக்கவில்லை என்னும் ஒரு கோட்பாடு பல கோணங்களில் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவரது பாடுகளும் அதைத் தொடர்ந்த அவரது மரணமும், ஒரு இயற்கை மரணத்திற்கு ஒத்த எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியது என்பதை கீழ்வரும் வசனங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். அவர் பாடுபட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டார் என்பதை பல ஆண்டுகளாக சபை விசுவாச அறிக்கையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பது இங்கு நினைவு கூறப்பட வேண்டிய அம்சமாகும். (ஏசாயா 53: மத்தேயு 27:57-60. யோவான் 1:29, அப்.2:23, 20:28: பிலி.28)
முதல் வார்த்தை
பிதாவே, இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23:34
பொதுவாக, ரோமா காலத்தில் சிலுவையில் அறையப்பட்டவர்கள் சாப வார்க ளானால் பிரயோகிப்பது வழக்கம். தங்கள் நண்பர்கள், வorlகம் மற்றும் பிராய அரசாங்கம் என்று எல்லோரையும் குறை சொல்வார்கள் அல்லது அவர்கள் பெரிய சாபமிடுவார்கள். இதற்கு பெரும்பாலும் யாரும் விதிவிலக்காக இருக்கமாட்டார்கள் முற்றிலும் கவிற்சியாசமாக, முதல் முறை மன்னிப்பு என்கிற வார்த்தையையும் அதோ) தொடர்புடைய ஆசீர்வாதமான செய்தியையும் இயேசு கிறிஸ்து ஒரு விண்ணப்பமாக பிதாவிடம் ஏரெடுப்பதை நாம் கவனிக்க வேண்டும். சாதாரண காலங்களில் மற்றவர்களுக்கு ஆசீர்வாத வார்த்தைகளைக் கூறுவது இயல்பு தான். ஆதலால் சாபத்தின் மையத்திலிருந்து, பாடுகளின் உசரத்தில் கிறிஸ்து இந்த வார்த்தைகளை சொல்லியிருப்பதை நாம் ஆமாக சிந்திக்க வேண்டும், மனாதன் பாவத்தில் நித்திய மரணத்தையும் அதன் பிம்பமாக இவவுலகிய சாபத்தையும் சம்பாதித்து வைத்து இருக்கிறான் எனவேதான், கிறிஸ்து சாபத்தின் உச்சமாகிய சிறுவையிலிருந்து ஆசிர்வாதத்தை கூறுகிறார் என்பது நற்செய்தியின் உச்சகட்டமாகும். மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமானார் என்பது எத்தகைய ஆசீர்வாதமான செய்தியாகும். (கலாத்தியர் 3 13).
சிலுவையிலிருந்து மற்றவர்களைப் போல சாபமான வார்த்தைகளை சொல்வதற்கு இயேசு கிறிஸ்துவுக்கு எல்லா தார்மீக உரிமையும் உண்டு என்று சொல்லலாம். காரணம், குற்றம் கண்டுபிடிக்க முடியாத வாழ்க்கை வாழ்ந்த அவரை, மட்டுமல்ல நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்த அவரை அந்தியாக சிலுவையில் அறைந்தார்கள் என்பதுதான் உண்மை . என்றாலும், கிறிஸ்து நம்முடைய அக்கிரமங்களுக்காக தம்மை ஒப்புக்கொடுக்கும் வண்ணமாக சத்தமிடா ஆட்டைப் போல இருந்தார் என்பது நமக்கு பெரிய ஆசீர்வாதத்தின் செய்தி அல்லவா? இந்த சூழலில் யாரும் தங்களுக்காக ஜெபிக்கும்படி கேட்கவில்லையே? சொல்லப்போனால் யூதர்களானாலும், பரிசேயர்/சதுசேயர்
வேதபாரகரானாலும், சீஷரானாலும், ரோம சேவகரானாலும் அவரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அவர் தேவதூஷணம் சொன்னபடியால் தேவனுடைய சாபத்தை பெற்றவர் என்ற ரீதியில் தான் பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் செயலும் இதே வடிவத்தில்தான் இருந்தது என்றால் தவறல்ல. இந்த பின்னணியில்தான், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, பிதாவே இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்கிறது. இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று சொன்ன வார்த்தையை மூன்று முழுமைகளாக நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
1. பிதாவின் முழுமை
கிறிஸ்து மொழிந்த முதல் வார்த்தையை லூக்கா மாத்திரமே எழுதி இருக்கிறபடியால், இதே ஆசிரியர் பிதா என்ற பதத்தை எப்படி பயன்படுத்தியுள்ளார் என்பதை கவனிப்பது சரியாக இருக்கும் குறிப்பாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே, பிதாவுக்கும்-தமக்கும் உள்ள உறவைப் பற்றி சொன்ன விதத்தை கவனிப்பது இங்கு பொருத்தமானதாக இருக்கும். லூக்கா 10:21.22 மற்றும் 11:2 வானங்களை நாம் இதற்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம், பிதாவானவர் தாமே வானத்துக்கும் – பூமிக்கும் ஆண்டவர் என்றும், தம்முடைய சித்தத்தை முழுமையாக நிறைவேற்றுகிறவர் என்றும், தம்முடைய குமாரனிடம் யாவற்றையும் ஒப்புக் கொடுத்து இருக்கிறார் என்றும், குமாரன் மூலமாக மட்டுமே அவரை அறிய முடியும் என்றும், குமாரன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அங்கீகரிக்கிறவர் என்றும் ஆவியில் களிகூர்ந்து பிதாவிடம் கிறிஸ்து அறிக்கை செய்வதை நாம் தீர்க்கமாக படிக்கிறோம்
பொதுவாக யூதர்கள் கடவுளைத் தங்கள் பிதா என்று அழைக்கும்போது பொது நடையில்தான் அழைப்பது வழக்கம். அதாவது தங்களது பிறப்பின் அடிப்படையில் யெகோவாவை தங்கள் பிதா என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். இதை கிறிஸ்துவிடமே வைராக்கியமாக சொல்வதை யோவான் 8:41ல் நாம் படிக்கிறோம். ஆனால் கிறிஸ்து அவர்களை நோக்கி, அவர்கள் பிசாசின் பிள்ளைகள் என்றும் அந்த தங்கள் பிதாவாகிய பிசாசின் இச்சையை நிறைவேற்றுகிறவர்கள் என்றும் சொல்லி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இங்கேதான் பிதா என்று முதல் வார்த்தையாக கிறிஸ்து சிலுவையில் சொன்னதை இணைத்து சிந்திக்க வேண்டும்.
பழைய ஏற்பாட்டில் பிதா என்ற பதமானது இரண்டு தன்மைகளை உள்ளடக்கிய வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏசாயா 63:16:17 மற்றும் 64:8,9 ஆகிய வசனங்களில் அவர் சிருஷ்டிகராகவும், மீட்பராகவும் சொல்லப்பட்டதை நாம் பார்க்கிறோம். பிதாவானவர் சிருஷ்டிகராக தமது கிரியையெல்லாம் முடித்த பின்பு ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். ஆனால், அவர் மீட்பராக இன்றும் செயல்படுகிறாரெனெவும், நித்திய இளைப்பாறுதலை வாக்குத்தத்தம் செய்து இன்றும் தொடர்ந்து கிரியை நடப்பிக்கிறார் என்றும் அறியப்பட்டுள்ளார். யூதர்கள் கடவுளை மீட்பராக அறிக்கையிட்டாலும், தனிப்பட்ட மீட்பைப் பற்றி அக்கறை இல்லாமலே வாழ்ந்து வந்தனர். சிலுவை வரையில் பிதாவும் கிரியை செய்கிறார்: நானும் கிரியை செய்கிறேனென கிறிஸ்து சொன்னதை யோவான் 5:17ல் வாசிக்கிறோம். கிறிஸ்து பிதாவை சிருஷ்டிகராகவும், மீட்பராகவும் அவரது முழுமையை சொல்லும் வண்ணமாக இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.
2. கிறிஸ்துவின் முழுமை: இவர்களுக்கு மன்னியும்
நாம் ஏற்கனவே பார்த்தது போல் எந்த மனுஷனும், குறிப்பாக அவரை சிலுவையில் அறையக் காரணமாக இருந்தவர்கள் மன்னிப்பு கேட்கவும் இல்லை; மன்னிப்பை தேடவும் இல்லை. அவர்கள் செயல்கள் எல்லாம் அதற்கு முரண்பாடாகவே இருந்தது என்பது மனித வீழ்ச்சியின் முழு அடையாளமாகும். இந்நிலையில்தான், கிறிஸ்துவானவர் பிதாவுக்கும் மனிதனுக்கும் ஒரே மத்தியஸ்தரான நித்திய ஆசாரியராக இவர்களுக்கு மன்னியும் என்ற மன்றாட்டை ஏறெடுக்கிறார். மனிதனின் மற்ற தேவைகள் எல்லாவற்றையும் பெற்றோரோ (மத்தேயு 7:11; நண்பர்களோ ( யோவான் 3:11): பொது ஜனங்களோ லூக்கா 7:12); முன்பின் தெரியாதவர்களோ (லூக்கா 10:33.34); ஏன், எதிரிகளே கூட லூக்கா 23:12) சந்திக்க முடியும்: இல்லாவிட்டால் ஓரளவிற்கு நிறைவேற்றிட முடியும்.
ஆனால் இயேசு கிறிஸ்து மட்டுமே மனிதனின் அடிப்படைத் தேவையாகிய பாவமன்னிப்பை கொடுப்பதற்கு அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், அவர் செய்த அடையாள அற்புதங்கள் எல்லாம் அவர் பூமியிலே பாவத்தை மன்னிக்க அதிகாரம் பெற்றவர் என்பதை ரூபகப்படுத்தும் சம்பவங்களாகும் என்பதை வேதத்தை ஆராய்ந்து படித்தால் விளங்கிக் கொள்ளலாம். லூக்கா 5:20-24ல் எழுதப்பட்ட திமிர்வாதக்காரன் வாழ்வில் நடந்த அற்புதமனாலும், லூக்கா 7:48- 50 வசனங்களில் சொல்லப்பட்ட பாவியான ஸ்திரீயின் வாழ்வில் ஏற்பட்ட விடுதலையானாலும் இதை தெள்ளத் தெளிவாக படம் பிடித்து காண்பிக்கிறது. லூக்கா ஒரு மருத்துவராக இருந்தாலும், மற்ற தேவைகளை விடவும் மனிதனின் அடிப்படை தேவை பாவமன்னிப்பு என்று சுட்டிக்காட்டுவதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. அடிப்படையில் பாவம் சிருஷ்டிகருக்கு விரோதமானது என்றும். அதனடிப்படையில் சிருஷ்டிக்கு முன்பாக செய்யப்படுகிறது என்பதுதான் வேத போதனை. (காண்க. ஆதி. 39:9: லூக். 15:18,21), (SIN IS FUNDAMENTALLY AGAINST THE CREATOR), ஆம்; பாவத்தை மன்னிக்க தாம் அதிகாரம் பெற்றவர் என்பதை தமது வாழ்வில் காட்டியவர், இப்பொழுது அதை சிலுவையில் முழுமையாக நிறைவேற்றியதைத்தான் இந்த வார்த்தை கோடிட்டுக் காண்பிக்கிறது.
அவர் சிலுவையில் ஒரே தரம் மரித்ததின் மூலம் தாம் நிறைவேற்றின நித்திய பரிகார இரட்சிப்பின் மாட்சியை எடுத்தியம்பும் வார்த்தையாக இதை நாம் அணுகவேண்டும். (எபி 7:27), கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து மனந்திரும்புகிறவர்களுடைய சகல பாவத்தையும் சுத்திகரிக்கும் வல்லமையை இயேசு கிறிஸ்து பெற்றிருக்கிறார். ஒரு மனிதனின் கடனாகிய அடிமைத்தனத்திலிருந்தும், அந்தக் கடன் சுமையோடு தொடர்புடைய அனைத்து விளைவுகளிலிருந்தும் பெறக்கூடிய விடுதலையைப் பற்றி குறிப்பிடும் வார்த்தையாகத்தான் மூல பாஷையில் மன்னிப்பு என்பது பொருள்படும். அப்படிப் பார்த்தால் மனிதனிடம் மன்னிப்பு என்பது சாத்தியமில்லைதான். நாம் மன்னிக்கிறோம் என்பதும் நிரந்தரம் கிடையாது: குற்றத்தின் விளைவுகளிலிருந்து மற்றவர்களை விடுவிக்கவும் நம்மால் முடியாது
3. மனித வீழ்ச்சியின் முழுமை: தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமலிருக்கிறார்களே
இவர்கள் நல்லவர்கள் என்றோ/ நீதிமான்கள் என்றோ கிறிஸ்து குறிப்பிடாமல் அறியாமையில் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார். ஒருவேளை இயற்கையாக ஒரு கேள்வி எழலாம். அதாவது, அறியாமையில் இருப்பவர்களுக்கு ஞானமும் புத்தியும் அறிவும்தானே தேவைப்படும். அதற்காகத்தானே கிறிஸ்து மன்றாடி இருக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்து இவர்களுக்கு மன்னியும் என்று சொன்னபடியால், அறியாமையை நாம் வேதப் பூர்வமாகத்தான் விளங்கிக்கொள்ள வேண்டும் லேவி 4:22ம் வசனம், அறியாமையும் பாவம் என்று சொல்லுகிறது. அப்படி என்றால் பாவத்தைப் பற்றிய வேத போதனை என்ன என்பது இங்கே முக்கியமானது? கட்டளை மீறுவதும் பாவம் (SINS OF COMMISSION), கடமை தவறுவதும் பாவம் (SINS OF OMISSION) என்பதை நாம் இங்கு குறிப்பிடும் சில வசனங்கள் மூலமாக விளங்கிக்கொள்ளலாம், பார்க்க: (1 சாமுவேல் 12:23: ஆதியாகமம் 39:9.). பத்து கற்பனைகளில் பிரதான கற்பனை என்னவென்றால், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும். உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்பு கூறுவாயாக உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக என்பதே. இப்படிச் செய்தால் களவு செய்ய மாட்டோம்; விபசாரம் செய்ய மாட்டோம் என்ற எதிர்மறை பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அறியாமையை வேதபூர்வமாக இன்னும் விளங்க வேண்டுமென்றால் இப்படி சொல்லலாம்:
1. இருதயக்கடினம் (எபேசியர் 4:18: எரே 17:9)
2. புத்தியில் அந்தகாரம் (எபேசியர் 4:18: லூக். 15:17)
3. மனித சித்தம் செயலிழந்து போன தன்மை (ரோமர் 7:20-25; 8:7)
இந்த மூன்று குணங்களும் ஆதாமின் கீழ்ப்படியாமையில் இருந்தபடியால் தான், முதல் மனிதனிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி: ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? என்பதாகும். மனுக்குலத்தின் நினைவின் தோற்றம் எல்லாம் நித்தம் பொல்லாதது என்பதை வேதம் வலியுறுத்திச் சொல்கிறது. ஏன்? என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள் என்று தாவீதும் சொல்கிறார்.
நல்லவன் ஒருவனும் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை ; உணர்வுள்ளவன் இல்லை என்பதை யூதர்கள் பட்சமாக திரும்பி பவுல் சொன்னதை ரோமர் 3:10-18 வசனங்கள் ஆணித்தரமாக சொல்கிறது. மனித செயல்பாடுகள் எல்லாம், தேவனை விட்ட தூரமான வாழ்வாகிய அறியாமையிலிருந்து புறப்படுகிறது என்றே நாம் நிதானிக்க வேண்டும். கீழ்வரும் பட்டியலில் உள்ள கூட்டத்தாரின் செய்கைகள் எல்லாம் ஏதாவது ஒரு வகையில் இந்த மூன்று தன்மையோடு பொருந்திப் போவதை நாம் காணலாம். இன்னும் அதிகமாக, நாம் எல்லோரும் இந்தக் கூட்டத்தில் நிச்சயம் சம்பந்தப்பட்டிருக்க முடியும் என்பதைத்தான் இயேசு கிறிஸ்துவின் மன்னிப்பின் வார்த்தையில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
அறியாமையின் பட்டியல் இதோ:
1. அவருடைய வார்த்தையை விசுவாசியாத சீஷர்கள் (லூக்.22:61-62)
2. தங்களுடைய உணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்தின பெண்மணிகள் (லூக்கா 23:27,48,49)
3. அதிகார மமதையால் செயல்பட்ட ரோமப் பேரரசும் அதன் வீராகளும் (லூக்கா 23:36,37)
4. எது சரியானது என்று அறிந்தும் மனுஷரை பிரியப்படுத்த விரும்பி செயல்பட்ட பிலாத்து (லூக்கா 23:4:15)
5. சத்தியத்தை காக்க வேண்டிய பொறுப்பைத் தள்ளின பரிசேயர் மற்றும் வேதபாரகர் (லூக்கா 23:5)
6. அவரை கன்னத்தில் அறைந்து, ஞானதிருஷ்டியால் அதை கண்டுபிடியும் என்று பரிகாசம் பண்ணி அவருடைய மனிதத்துவத்தை அசட்டை செய்த வீரர்கள் (லூக்கா 22:63,64)
7. நியாயத்தீர்ப்பு இல்லை என்பது போல், அவனை அகற்றும் என்று தங்களுடைய வார்த்தைகளால் கிறிஸ்துவை இழிவுபடுத்திய மக்களும், கள்வனும் (லூக்கா 23:39-41).
இப்படி அறியாமை என்னும் நிரந்தர பிரிவில் இருந்து நம்மை விடுவித்து பிதா என்னும் முழுமையான உறவில் நம்மை இணைக்கும் பரிபூரண மத்தியஸ்தராகிய கிறிஸ்துவின் வார்த்தைதான் இந்த முதலாம் வார்த்தையாகும். கிறிஸ்துவானவர் நமது பாவத்திற்குப் பரிகாரமாக நித்திய ஆசாரியத்துவம் உடையவர் என்பது இதில் விளங்குகிறது.
இரண்டாம் வார்த்தை
இயேசு அவனை நோக்கி : இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்.23:43).
லூக்கா சுவிசேஷகர் எழுதிய இந்த இரண்டாம் வார்த்தை, முதல் வார்த்தையோடும் மற்றும் கள்வர்கள் இடையே நடந்த சம்பாஷணையின் இறுதியில் கள்வனின் வேண்டுகோளுக்கு பதிலாகவும் இருப்பதால் அதன் அடிப்படையிலேயே நாம் இந்த வார்த்தையை தியானிக்க அழைக்கப்படுகிறோம்.
இந்த வார்த்தை சிலுவையில் தொங்கி சீக்கிரம் மரிக்கப் போகிற மூன்று நபர்களுக்கு இடையில் நடந்த சம்பாஷணை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மரணம் மனுக்குலம் எல்லோரையும் ஒரே நேர்கோட்டில் இணைக்குமானாலும், மரிக்கும் ஒருவரே மரணத்தை மேற்கொண்டு, மற்றவர்களுக்கும் வாக்குறுதியைக் கொடுக்கும் மாட்சியான வார்த்தையாகும். முதல் வார்த்தை கிறிஸ்துவின் ஆசாரியப் பணியின் மேன்மையை வலியுறுத்துகிறது என்றால், இந்த இரண்டாம் வார்த்தை அவருடைய ராஜ்யத்தையும், அவர் ராஜா என்பதையும் அதனுடைய அடிப்படையில் மனிதனுடைய முழுப்பொறுப்பையும் எடுத்துச் சொல்கிறது. கடினமான எதிரியை மேற்கொண்டு, அதன் வெற்றியின் பலனை தனது ராஜ்ஜியத்தின் மக்களுக்கு கொடுப்பதுதான் ஒரு ராஜாவின் மேன்மை, மரணமும் அப்படிப்பட்டதுதான்.
சிலுவையிலிருந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பலர் வார்த்தைகளை இகழ்ந்து பேசியதை மத்தேயு, லூக்கா சுவிசேஷங்களில் நாம் படிக்கிறோம். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நீ கிறிஸ்துவானால் சிலுவையிலிருந்து இறங்கி வந்து முதலாவது உன்னை இரட்சித்து கொள் என்ற அறைகூவலான வார்த்தைகளாகும். இதை, மத்தேயு 27:38-44, லூக்கா 23:35-37 வசனங்களில் பார்க்கலாம். முதலாவது இவர் தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும் என்கிற பரிகாச வார்த்தைகளை இவர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். மேலும், மத்தேயு 27:43ல் கடவுள் இவனிடத்தில் பிரியமாய் இல்லையே: ஆனால், இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்றல்லவா சொல்லிக்கொண்டிருந்தான் என்று அவருடைய வார்த்தைகளையே திரும்பச் சொல்லி பரிகாசம் செய்தார்கள். சிலுவையில் அவரோடு கூட அறையப்பட்ட இரண்டு கள்வர்களும் மற்றவர்களைப் போல், இவன் தன்னை முதலாவது இரட்சித்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்கள், (மத், 27:44).
இந்த இரண்டு கள்வர்களும் கீழே இருந்த மற்றவர்களை விட சில காரியங்களில் மாறுபட்டு இருந்தார்கள். அவையாவன:
இருவரும் குற்றவாளிகளென தீர்க்கப்பட்டவர்கள்:
இருவரும் வேதனையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்கள்:
இருவரும் எப்படியாவது தண்டனையிலிருந்து தப்பித்து விட முடியுமா? என்று வகை தேடினவர்கள்;
இருவரும் கிறிஸ்துவின் பாடுகளை மிக அருகிலிருந்து கவனித்தவர்கள்;
இருவரும் கிறிஸ்துவின் சிலுவையின் மேல் எழுதப்பட்ட, இவர் யூதருக்கு ராஜா என்ற வார்த்தைகளை படித்தவர்கள்:
எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டவர் சொன்ன மன்னிப்பின் முதல் வார்த்தையை மிக அருகிலிருந்து கேட்டவர்கள்.
ஆனால் இந்த இருவரில் ஒருவனுடைய மனமாற்றம் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. இவனுக்கு இப்பொழுது ஒரு பெயர் கொடுக்க வேண்டுமென்றால் மனம் திருந்திய கள்வன் (PENITENT THIEF) என்பது மிகப் பொருத்தமானதாக இருக்கும். தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ள முடியாதவர், என்று கிறிஸ்துவை ஏளனம் பேசிய இவன் திடீரென்று மற்றவனைப் பார்த்து பேசும் வார்த்தைகளை லூக் 23:40-42 வசனங்களில் எழுதப்பட்டுள்ளது.
வசனம் 40: நீ தேவனுக்கு பயப்படுகிறது இல்லையா என்று மற்றவனை நோக்கி மனம் திருந்திய கள்வன் கேட்கிறான். அவன் ஏன் அதைச் சொன்னான் என்பதற்கு 39 ஆம் வசனம் இங்கே அவசியமாகிறது. இதற்கு முன்பு தன்னை தானே இரட்சித்து கொள்ளட்டும் என்று கிறிஸ்துவைப் பார்த்து முதலில் பரிகாசம் செய்த இந்தக் கள்வன் திடீரென்று இயேசுவை நோக்கி: நீ கிறிஸ்துவானால் அல்லது மேசியாவானால் உன்னையும், எங்களையும் இரட்சித்துக் கொள் என்று அவரை இகழ்ந்தான். இதை செய்வதற்கு சிலுவையிலிருந்து நீ கீழே இறங்கி வரவேண்டும் என்பதை அவன் வலியுறுத்தி சொன்னதின் அடிப்படையில் மனம் திருந்திய கள்வன் 40ம் வசனத்தில் இப்படி சொல்லுகிறான். அதாவது, நீ இந்த ஆக்கினைக்கு உட்பட்டும் தேவனுக்கு பயப்படுகிறதில்லையா? பாவத்திற்கு தண்டனை நிச்சயம் உண்டு. சிலுவையில் நாம் தொங்குவது சரியானதே. அப்படியிருக்கும்போது, என்னை இறக்கி விடு என்று நீ சொல்வது நியாயமில்லையே? குற்றத்தை மறுதலித்து விடுதலை தேடுவது தேவனுடைய ராஜ்யத்தை அசட்டை செய்வதாகும் என்று சொல்லுகிறான். பாவத்தின் விளைவுக்கன்று; பாவத்திற்கு பயப்படுவதுதான் உண்மையான தெய்வ பயமாகும்.தீமையை வெறுப்பதே கர்த்தருக்கு பயப்படும் பயம் என்றே நீதி.8:13ல் வாசிக்கின்றோம்.
இவர்கள் என்ன தவறு செய்து சிலுவையில் அறையப்பட்டவர்கள் என்பது நேரடியாக நமக்கு தெரியாது. சிறு பிராயத்திலிருந்து இப்படிப்பட்டவர்களாய் இருந்தார்களா? அல்லது வாதி இல்லாதபடியினால் இப்படி ஆனார்களா? போன்ற விவரங்கள் நமக்கு கொடுக்கப்படவில்லை ஆனால், இவர்களைப் பற்றி ஏசாயா 53ம் அதிகாரம் 12 ஆம் வசனத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வாக்கியம் நமக்கு மிகவும் பொருத்தமுடையதாகும். அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்பது கிறிஸ்துவைப் பற்றியும், இந்த இரண்டு கள்ளரைப் பற்றியும் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தையாகும். கடவுளை விட்டு பாவத்தினால் பிரிக்கப்பட்ட எல்லாருக்கும் இந்த வார்த்தை பொருந்தும் என்பதை மற்ற வேத வாக்கியங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக, ஏசாயா 59:2ம் வசனத்தில் ஏசாயா, யூத ஜனங்களை பார்த்து சொன்ன வார்த்தை: உங்கள் அக்கிரமங்களே, உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்கிற்று என்பதாகும். மேலும், பிதாவின் சித்தத்தின்படி செய்யாதவர்களை கடைசி நாளில், அக்கிரமச் செய்கைக்காரர் என்று அழைக்கப்படுவார்கள் என்பதாய் மத் 7:21-23 வசனங்களில் நாம் படிக்கிறோம். எனவே கிறிஸ்து அக்கிரமக்காரர் நடுவில் மரித்தது சரித்திர உண்மையாய் இருந்த பொழுதும், நம்மையும் அந்த இடத்தில் வேதபூர்வமாக இணைத்து வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அநேக சமயத்தில் மற்றவர்களுடைய பாவங்களையும் நாம் கவனிக்கும் போது, அவர்களை நியாயந்தீர்ப்பதும், நம்மை நீதிமான்களாக்க முயற்சி செய்வதும் இயல்பானதே. ஆனால் மனம் திருந்திய கள்வன் மாறுபட்ட செய்தியை நமக்கு சொல்வதை கவனிக்கிறோம்.
ஒரு சமயம் இயேசு கிறிஸ்து சொன்ன முதலாம் வார்த்தை அவனுக்குள் ஆழமான பாதிப்பை உண்டு பண்ணி இருக்கலாம். இதுவரையிலும் சிலுவையிலிருந்து சாபமான வார்த்தைகள் வந்த நிலையில், முதன் முதலில் மன்னிப்பு என்ற வார்த்தையை இவன் கேட்ட பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வந்து தம்முடைய வல்லமையை இவர் நிரூபிக்காவிட்டாலும், மன்னிப்பின் செய்தியானது நித்திய ராஜ்யத்தின் வல்லமை பெற்றது என்ற அடிப்படையில் அவன் மன்றாடுகிறான். சிலுவையின் பாடுகள் மத்தியிலும் மன்னிப்பை வாக்கு பண்ணின கிறிஸ்துவின் வல்லமையை அவன் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டான் எனலாம். ஒருவேளை மற்றவர்கள் சொன்னதைப்போல கிறிஸ்து சிலுவையை விட்டு கீழே இறங்கி வந்து தம்மை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்குவது எளிதாக இருக்கும். கிறிஸ்து அதையும் செய்ய வல்லமை உடையவர்; மாறாக, மன்னிப்பை கொடுப்பது ராஜ்யத்தின் வல்லமையை காண்பிப்பது என்பதாலேயே அவனுடைய விண்ணப்பத்தை 42ம் வசனத்தில் இப்படி படிக்கிறோம்.
ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும். சிலுவையில் கிறிஸ்து தொங்கிக் கொண்டிருந்தாலும் அவர் ராஜா தான் என்பதை அவன் ஏற்றுக்கொண்டு, ஒரு நாளில் அவருடைய நாமத்தின் கீழ் எல்லா கால்களும் முடங்கும். எல்லா நாவுகளும் அவரை அறிக்கை செய்யும் என்பதைப் போல இந்த வார்த்தையை பயன்படுத்துகிறான்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஆண்டவருடைய ராஜ்ஜியத்திற்கு புறம்பே இருக்கிறவன் என்பதை முதலாவது இவன் ஏற்றுக் கொண்டதாகும். அக்கிரமம் செய்து தண்டிக்கப்பட்ட தனக்கும், பாவமே செய்யாமல் பாடுபடுகிற இவருக்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளி பயங்கரமானது என்பதை இவன் உணர்ந்து இருக்கிறான். தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு வரவேண்டுமானால் தன்னுடைய அக்கிரமத்திற்கு தானே பொறுப்பெடுக்க வேண்டும் என்பதை அறிகிறான். மற்றவர்கள் பெயரில் நமது பொறுப்பைத் தட்டிக் கழிப்பது என்பது ஆதாமிடம் நாம் கற்றுக் கொண்ட அடிப்படை உணர்வாகும். நீர் தந்த ஏவாள் கனியை கொடுத்தபடியினாலே நான் அதை புசித்தேன் என்று ஆதாம் சொன்ன தன்மை மனித வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது எனலாம்.
இதனிடையே மனம் திரும்பிய கள்வன்: நான் பெலவீனமான ரோம சட்டத்தின் படி தண்டிக்கப்படுகிறேன். பாவம் செய்யாத இவர் பாவிகளுக்காக தண்டனையை ஏற்றுக் கொண்டார் என்பதால், அந்த இராஜ்யமே மேலானது என்று உணர்ந்து கொண்டான். ரோமப் பேரரசானாலும், மற்ற எந்தப் பேரரசுகள் ஆனாலும் நம்முடைய தவறை வெளியிலிருந்து சொல்லி, நம்மை தண்டனைக்கு உட்படுத்த வேண்டியதாயிருக்கிறது. ஆனால், கிறிஸ்துவின் ராஜ்யத்தை பொறுத்த அளவில், வெளியிலிருந்து என்னுடைய குற்றத்தை யாரும் சுட்டிக்காட்ட அவசியமில்லாமல் எனக்குள்ளேயே நடத்தப்படுகிற கிரியையினால் என்னுடைய அக்கிரமத்தை நானே ஒத்துக் கொள்ள செய்ய முடியும் என்பது தான் மேன்மை, ரோம சாம்ராஜ்யம் கள்வனை பார்த்து நீ குற்றவாளி‘ என்று சொல்லியது: கிறிஸ்துவின் ராஜ்யமோ: நான் குற்றவாளி என்று அந்த கள்வனையே அறிக்கையிட வைத்திருக்கிறது. இங்கே, நினைத்தருளும் என்ற வார்த்தையானது மூல பாஷையில் தகுதி இல்லாத எனக்கு இரங்கும் என்ற பொருளை உடைய அறிக்கையாகும். தான் இதுவரையிலும் நல்லவனாய் வாழ்ந்தேன் என்று சொல்லுவதற்கு மனம் திரும்பிய கள்வனுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. மட்டுமல்லாது. மற்ற கள்ளனை விட நான் சற்று உயர்ந்தவன்: உங்களைப் பற்றி நன்றாக பேசியவன் என்ற தகுதியையும் அவன் கணக்கில் எடுக்காமல், உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்தருளும் என்று விண்ணப்பம் செய்கிறான்.
அதற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பதிலானது: இன்றைக்கு என்று ஆரம்பிக்கிறது. இதே ஆசிரியர் லூக்கா, ‘இன்றைக்கு’ என்ற வார்த்தையை மனம் திரும்புதலோடு இணைத்து சொன்னதை பத்தொன்பதாம் அதிகாரம் பத்தாம் வசனத்தில் படிக்கிறோம். இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்றும் இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது என்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சகேயுவைப் பார்த்து சொன்னதை இங்கே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் கிறிஸ்துவின் ராஜரீக ஆளுகையை வலியுறுத்தும் வார்த்தைதான் இன்றைக்கு என்ற பதமாகும்
நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் அல்லது நீ என்னோடு இருப்பாய் என்ற செய்தி, அவர் பிறந்த பொழுது அடையாளப்படுத்தப்பட்ட இம்மானுவேல் என்ற தன்மைக்கு பொருந்தக் கூடியதாகும். ரோமர் காலத்தில் சிலுவையில் அறையப்பட்ட மனிதரை பொதுவாக, அவர்களுடைய குடும்பமும். நண்பர்களும் சொந்தம் கொண்டாட முன்வர மாட்டார்கள். மனந்திருந்திய கள்வனின் நிலைமையும் அதுதான். அவன் சார்ந்திருந்த தேசம் அவனுக்கு உதவி செய்ய முடியவில்லை: சொல்லப்போனால், அந்த தேச சட்டமே அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தது. அவனுடைய அக்கிரம செய்கைக்கு துணை போயிருந்த அவனுடைய நண்பனும் சீக்கிரம் அவனை விட்டு பிரியப்போகிறான்.
ரோம சாம்ராஜ்யத்திற்கு முன் அவன் சில காலம் குற்றம் செய்திருக்க முடியும்: நண்பர்களுக்கு முன் சில கால சூழ்நிலைகளில் அவன் தவறு செய்திருக்க முடியும். ஆனால், தனது வாழ்க்கை முழுவதும் யாருக்கு விரோதமாய் பாவம் செய்தானோ, அவர் இவனைப் பார்த்து சொல்லுகிற வார்த்தை: இன்றைக்கு நீ என்னுடனே கூட இருப்பாய். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கள்வனின் வேண்டுகோளும் கிறிஸ்து சொன்ன பிரதியுத்திரமும், கிறிஸ்துவினுடைய ராஜ்யம் நம்முடைய அக்கிரமத்திற்கு நாமே பொறுப்பெடுக்க வேண்டும்: அதனடிப்படையில் விடுதலை நிச்சயம் உண்டு என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லுகிறதை நாம் ஏற்றுக்கொள்ள அழைக்கிறது.
என்னோடு கூட பரதீசிலியிருப்பாய் என்பது பரலோகத்திற்கும், நரகத்திற்கும் இடைப்பட்ட இடம் என்ற தோரணையில் வியாக்கியானப்படுத்துவதற்கு மற்ற வேத வசனங்கள் நமக்கு இடம் கொடுப்பதில்லை. ஏனென்றால், பரதீசு என்கிற வார்த்தை பெர்ஷிய மொழியில் அழகிய தோற்றத்தை உடைய தோட்டத்தின் பொருளைக் கொடுக்கிறது. தோட்டத்தை பண்படுத்த மாத்திரமல்ல; அடிப்படையில், கடவுளோடு ஐக்கியத்தில் வாழவேண்டும் என்றுதான் ஆதாம் ஆதியிலே படைக்கப்பட்டான் என ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்தில் படிக்கிறோம். இழந்த ஐக்கியம் புதுப்பிக்கப்படுகிறது என்பதுதான் பரதீசிலிருப்பாய் என்ற வார்த்தையின் பொருளாக நாம் கருத முடியும். மாத்திரமல்ல, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்ற வார்த்தை – இயேசு கிறிஸ்து சத்தியமானவர், வழியானவர் மற்றும் ஜீவனானவர் என்பதை வலியுறுத்தும் கூற்றாகும். லூக்கா, மெய்யாகவே என்கிற வார்த்தையை ஒரு சில இடங்களில் மாத்திரம் தன்னுடைய சுவிசேஷத்தில் எழுதியிருக்கிறார். ஒருவன் குழந்தையைப்போல தேவனுடைய ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் மெய்யாகவே அதில் பிரவேசிக்க மாட்டான் என்று 18:17 இல் நாம் படிக்கிறோம். இந்த வேதப்பகுதியும் கள்வனுடைய மனமாற்றத்தின் தெளிவான தன்மையை நமக்கு விவரித்து சொல்கிறது.
கல்வாரியின் மூன்று சிலுவைகளும் சொல்லுகிற செய்தி:
1. ஒருவன் தன் பாவத்திலேயே கிறிஸ்துவோடு சிலுவையில் மரித்தான் (ONE THIEF DIED IN SIN).
2 மனந்திரும்பிய கள்வன் பாவத்திற்கு சிலுவையிலே கிறிஸ்துவில் மரித்தான் (ANOTHER THIEF DIED TO SIN)
3 கிறிஸ்துவோ பாவத்திற்காக சிலுவையில் மரித்தார். (CHRIST DIED FOR SINS)
கிறிஸ்து தொங்கின சிலுவையின் மேலே எழுதப்பட்டிருந்த வாசகம் அவர் ராஜா என்பதாகும். மனம் திருந்திய கள்வனுடைய இருதயத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம்: நான் அவருடைய ராஜ்ஜியத்திற்கு வெளியே இருக்கிறவன். இந்த இரண்டையும் இணைகிற பாலமாக இருப்பது கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தின் அழைப்பும் அதற்கான ஆயத்தமாகிய மனந்திரும்புதலுமே ஆகும். இனி, இவன் மனம் திருந்திய கள்வன் என்று அழைக்கப்படுவதை விடவும் ஆபிரகாமின் குமாரன் என்று அழைக்கப்படுவது சாலப் பொருத்தமாகும். ரோம சாம்ராஜ்யத்தின் பார்வையில் இவன் கள்வனாய் இருந்த பொழுதும், கிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியத்தை பொறுத்த அளவில் இவன் ஆபிரகாமின் குமாரனாகத்தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளான்… என்ன பெரிய இரட்சிப்பு?
மூன்றாம் வார்த்தை
அப்பொழுது இயேசு, தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு: தம்முடைய தாயை நோக்கி: ‘ஸ்திரீயே, அதோ உன் மகன் என்றார். பின்பு அந்த சீஷனை நோக்கி: அதோ, உன் தாய்‘ என்றார். (யோவான் 19:26,27).
இந்த வார்த்தை கிறிஸ்துவில் நமக்குள்ள ஐக்கியத்தின் முழுமையை விவரிக்கும் பதமாகும். இந்த வசனத்தை நாம் விளங்கிக் கொள்வதற்கு இந்த வார்த்தை சொல்லப்படு முன் நடைபெற்ற 3 சம்பவங்களைப் பார்க்க வேண்டும்.
முதலாவது, எல்லா சீஷர்களும் சிலுவையை விட்டு ஓடி விட்டார்கள் என்பதையும் அவருக்கு அன்பாய் இருந்த யோவான் மாத்திரம் சிலுவையின் கீழ் நிற்பதையும் கவனிக்க வேண்டும். யோவானுடன், மூன்று மரியாள்கள் மாத்திரம் சிலுவையின் அருகில் நின்று நடப்பது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாவது, காவலுக்கு நின்ற நான்கு போர் வீரர்களும், அவருடைய அங்கியை எடுத்து அதன்பேரில் சீட்டு போட்டு கொண்டு இருந்தார்கள், அந்த அங்கி மேலிருந்து கீழாக ஒரே நூலினால் செய்யப்பட்டிருந்தது. இது தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டு, அதன்படியே நிறைவேறியது என்பதை மறந்து விடக்கூடாது. (சங்.22:18).
மூன்றாவது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூன்று மணி நேரம் அந்தகாரத்துக்குள் செல்வதற்கு முன்பு பேசிய வார்த்தை இது என்பதையும் கவனிக்க வேண்டும்.
மேற்கண்ட மூன்று பின்னணிகளும்- அதாவது, அவரை விட்டு ஓடிய சீஷர்கள், சிலுவைக்கு அருகில் இருந்தாலும் செயலற்ற நிலையில் இருந்த ஸ்திரீகள், சிலுவைக்கு அருகில் இருந்து கொண்டே தம்முடைய அங்கியை சீட்டு போட்டு எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இருந்த வீரர் ஆகியோர், ஒரு அசாதாரண சூழ்நிலையை நமக்கு படம்பிடித்துக் காண்பிக்கிறார்கள். சிலுவைக்கு அருகில் இருந்தவர்களானாலும், சிலுவை விட்டு தூரமாக இருந்தவர்களானாலும், எந்த வகையிலும் கிறிஸ்துவோடு ஐக்கியத்தில் இணைக்கப்பட முடியாத நிலைமையில் இருந்ததைப் பற்றி நாம் படிக்கிறோம். குறிப்பாக மரியானைப் பற்றியும், யோவானை பற்றியும் கண்டிப்பாக நாம் இங்கு சிந்திக்க வேண்டும். ஏனென்றால் இந்த வார்த்தை அவர்கள் இருவரையும் பார்த்து சொல்லப்பட்டதாகும்.
யூத கலாச்சாரத்தில், தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நேர்த்தியான ஆடைகளை அவர்களுடைய மத வழக்கத்தின்படி வடிவமைத்து கொடுப்பது இயல்பு ஆகும். இயேசு கிறிஸ்துவினுடைய தாயாகிய மரியாளும் இப்படி நேர்த்தியாக இந்த ஆடையை வடிவமைத்து, தைத்து கொடுத்ததாக இருக்க வேண்டும். காவல் நின்ற வீரர்கள் அந்த ஆடையை சீட்டுப் போட்டு தங்களுக்காக எடுத்துக் கொள்ள முயற்சித்த காட்சியை தற்சமயம் மரியாள் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது எப்படிப்பட்ட மனவேதனையை மரியாளுக்கு கூட்டிக் கொடுத்திருக்கும் என்பதை நாம் யூகிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் பிரதான ஆசாரியனுக்கென்று பிரத்யேகமாக அங்கி வடிவமைக்கப்பட வேண்டும் என்பது மோசேயின் மூலம் கடவுள் கொடுத்த கட்டளை என்பதை யாத்திராகமம் 28:39ல் படிக்கிறோம், எனவே, இந்த அங்கியை பொறுத்த அளவில் பரலோக கோணமும், பூலோக பங்களிப்பும் இருந்ததை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, தேவதூதன் அவரை பற்றி மரியாளிடம் சொன்னது: அவருடைய ராஜ்யம் வல்லமையுள்ளது; அவருடைய சிங்காசனம் நித்தியமானது என்ற வாழ்த்துதலாகும். கிறிஸ்து பிறந்ததற்கு பின்பு சிமியோன், யோசேப்பையும், மரியாளையும் ஆசீர்வதித்து சொன்ன வார்த்தை: மரியாளின் ஆத்துமாவை ஒரு பட்டையம் ஊடுருவிச் செல்லும் என்பதாகும். (லூக்.2:30-33). இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் யாதெனில், இது சிமியோன் ஆசீர்வாதமாக கூறிய வார்த்தை என்பதாகும். ஆசீர்வாதத்திற்கும், ஆத்துமாவை பட்டயம் ஊடுருவிச் செல்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்பதைத்தான் சிலுவையிலே நாம் பார்க்கிறோம். கிறிஸ்து ராஜா என்றாலும், அவரது சிங்காசனம் நித்தியமானது என்றாலும் – அது சிலுவையிலே தான் நிறைவேறியது என்பதை மரியாள் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. மரியாளுக்கு சொல்லப்பட்ட ராஜரீகம் என்ற வாழ்த்து சிலுவையில் தான் ஆசீர்வாதமாக பரிணமித்திருக்கிறது.
மற்ற சீஷர்களைப் போல அல்லாமல், யோவான் சிலுவைக்கு அருகிரலேயே கடைசிவரையிலும் இருந்துவிட்டான். இயோசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட சகோதரர்களும் கூட சிலுவையின் அருகில் இல்லை என்பதை நாம் கவனிக்கிறோம். இந்த செய்தியானது சிலுவைக்கு மிக அருகில் இருந்த யோவானுக்கு கொடுக்கப்பட்டதே அல்லாமல், சரீர உறவில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது அல்ல என்பது இங்கே கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய செய்தியாகும். அதிலேயும், ஆண்டவருக்கு அன்பாயிருந்த சீஷன் என்று யோவானைப் பற்றி சொல்லும்போது ஐக்கியத்திற்கும், அன்பின் செயல்பாட்டுக்கும் இடையே உள்ள நெருக்கம் விவரித்து சொல்லப்படுகிறதல்லவா? இதனடிப்படையில் மூன்றாம் வார்த்தை சொல்லுகிற கிறிஸ்துவின் 2 ஐக்கியங்களின் முழுமையை பற்றி நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
1. பிதாவோடு கிறிஸ்துவுக்கு இருந்த பூரணமான ஐக்கியம்:
பிதாவோடு கிறிஸ்துவுக்கு இருந்த பிரிக்க முடியாத பூரணமான ஐக்கியத்தின் சுவிசேஷங்களில் நாம் பார்க்கிறோம். தமது 12 வயதில் தேவாலயத்தில் தமது உலகப்பிரகாரமான பெற்றோரிடம் இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தையாவது: நான் என் பிதாவுக்கு அடுத்தவைகளில் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்பதாகும். மேலும், லூக்கா 2:49ல்: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்பதும், நான் எப்பொழுதும் பிதாவுக்கு பிரியமானவைகளை செய்கிறபடியால் அவர் என்னை தனியே விட்டு விடுவதில்லை என்பதும் கிறிஸ்து தாமே சொன்ன வார்த்தைகளாகும். யோவான் 8:29: 10:30 என்று பல்வேறு நிலைகளில் கிறிஸ்து தாமே மற்ற உறவுகளை விட தமக்கு பிதாவிடம் இருந்த ஐக்கியத்தின் வலிமையை வலியுறுத்தி கூறியதை படிக்கிறோம். கானாவூர் கல்யாணம் என்னும் தம்முடைய முதல் அற்புதத்தில், இயேசு மரியாளிடம் கூறிய வார்த்தைகளும் இதற்கு சான்றாகும். ‘ஸ்திரீயே, உனக்கும் எனக்கும் என்ன என் வேளை இன்னும் வரவில்லை’ என்றார். (யோவான் 2:4), மத்தேயு 12:50 இப்படி வாசிக்கிறோம். ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே எனக்கு தாயும் சகோதரருமாய் இருக்கிறார்கள்’. மரியாளுக்கும், தம்முடைய சகோதரர்களுக்கும் இதை அவர் வலியுறுத்தி சொல்லி உள்ளார். இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனை பிதா என்று விசுவாசத்தினால் அழைக்கும் பாக்கியத்தை பெற்ற நாம் இந்த ஐக்கியத்தை ஆழமாக, கவனம் பேணிக்காப்பது அவசியமல்லவா? எந்த நிலைமையிலும் அவருடைய சித்தத்தை செய்வதே என் விசுவாசத்தின் ஆதாரம் என்று அறிக்கையிடுவது ஒவ்வொரு விசுவாசியின் கடமை அல்லவா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர் பிதாவோடு வைத்திருந்த உறவின் மூலம் துமை நமக்கு கொடுக்கப்பட்ட சிலாக்கியம் எவ்வளவு பெரியது என்பது இந்த வார்த்தையின் முதல் பகுதியாகும்.
2. கிறிஸ்து நமது மக்களோடு வைத்திருந்த முழுமையான ஐக்கியம்:
நமக்கு உலகத்தில் பல உறவுகள் இருந்தாலும் நம்முடைய பிரதான ஐக்கியம் என்பது இயேசு கிறிஸ்துவின் மூலமாக வரையறுக்கப்பட்ட சபையின் ஐக்கியமாகும். நித்திய மகிமையிலே பிதாவோடு சேர்க்கப்படுகிற வரையில் இந்த உலகில் சபை என்னும் ஐக்கியத்தை நாம் மேன்மையாக கடைப்பிடிக்க வேண்டும். அப்படியானால், உலக உறவுகள் நமக்கு முற்றிலும் அவசியமில்லை என்பது அதனுடைய அர்த்தமல்ல. ஏனென்றால், இயேசு கிறிஸ்து தமது 30 வயது வரையிலும் நாசரேத்து ஊரில் தாய் தகப்பனுக்கு கீழ்ப்படிந்து தமது கடமையை நிறைவேற்றி, தகப்பனையும் தாயையும் கனம் பண்ண வேண்டுமென்ற கற்பனையை நிறைவேற்றியிருக்கிறார். பொதுவாக, மரணத்திற்குப்பின் சரீர உறவுகள் எதுவும் நமக்கு இல்லை என்பது வேதத்தின் போதனையாகும். அந்த அடிப்படையில் நம்முடைய ஐக்கியம் கிறிஸ்துவை மையமாக வைத்ததாக காணப்படவேண்டும். பவுல் இதை 2 கொரிந்தியர் 5:16,17 வசனங்களில் எங்ஙனம் இதைத் தொடர்புபடுத்தி சொல்லுகிறார் என நாம் கவனிக்க வேண்டும். ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின என இந்த உறவின் மாற்றம் எதன் அடிப்படையில் வருகிறது என்பதை 16 ஆம் வசனத்தில் பவுல் ஆரம்பித்ததை நாம் மறந்து விடக்கூடாது. ஆகையால் இது முதற்கொண்டு நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒரு போதும் அவரை மாம்சத்தின்படி அறியோம். தொடர்ந்து, பதினெட்டாம் வசனத்திலே இவை எல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது என்றும் அதை தொடர்புபடுத்தி சொல்லுகிறார். இந்த அடிப்படையில் விசுவாசிகளின் ஐக்கியம் என்பது போற்றப்பட வேண்டும்.
மரியாளுடைய மற்ற பிள்ளைகளாகிய இயேசு கிறிஸ்துவின் சகோதரர்கள் சிலுவையை விட்டு பின் வாங்கின சமயத்தில் சிலுவைக்கு அருகிலிருந்த அன்பான சீஷனாகிய யோவானைப் பார்த்து சொல்லப்பட்ட இந்த வார்த்தை தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுகிற கற்பனையோடு இணைந்து இருப்பதை நாம் பார்க்கிறோம். மரியாள் மற்றும் யோவானுடைய பின்னணி வித்தியாசமாக இருந்த போதும், யோவான் மரியாளை தன் தாயாக ஏற்றுக்கொள்வதும், யோவானை மரியாள் தனது மகனாக ஏற்றுக் கொள்வதும் கிறிஸ்துவுக்குள்ளான ஐக்கியத்தின் உச்சகட்ட அடையாளமாகும். இன்றைக்கு சிலுவையை மேன்மைப்படுத்துகிறோம் என்று சொல்லுகிறவர்களுடைய நடைமுறை செயல்பாடுகளை கவனித்தால் சாதி, அந்தஸ்து போன்ற பாகுபாடுகள் மாறாமல் இருப்பது என்பது, சிலுவையின் செய்தியை அவமதிக்கும் செயலாகத்தான் சொல்ல முடியும். இன்னும் சொல்லவேண்டுமானால். கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறையச் செய்கின்ற தூஷணத்திற்கு இது இணையாக இருக்கிறதல்லவா?
லூக்கா 11:27,28 வசனங்களில், யார் அதிக பாக்கியவான்கள் என்பதற்கு ஆண்டவர் சொன்ன விளக்கத்திலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கூட்டத்தில் இருந்த ஒரு ஸ்திரீ அவரை பெற்றெடுத்த மரியாள் பாக்கியம் பெற்றவள் என்று சொன்னபோது. தம்முடைய வார்த்தையை கேட்டு அதற்கு கீழ்ப்படிகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்று கிறிஸ்து சொன்னதை பார்க்கலாம். மரியாளுக்கு ஒரு விசேஷ அனுக்கிரகத்தை தேவன் கட்டளையிட்டது உண்மைதான் ஆனாலும், மரியாள் எப்படி கடினமான சூழ்நிலையில் கடவுளுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, இதோ நான் ஆண்டவருக்கு அடிமை என்று ஒப்புக்கொடுத்தாளோ, அதேபோல் கடவுளின் வார்த்தையை கேட்டு செவி கொடுக்கிறவர்கள் அதிக பாக்கியவான்கள் என்பதுதான் சத்திய வார்த்தையாகும். கடவுளுடைய பார்வையில் ஆணென்றும், பெண்ணென்றும் இல்லை: அடிமை என்றும் சுயாதீயினர் என்றும் இல்லை; மாத்திரமல்ல யூதர் என்றும் கிரேக்கர் என்றும் இல்லை. இந்த பெரிய சிலாக்கியத்தை கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சுதந்தரித்த நாம் மறக்காமல் இருக்கும்படி இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லலாம்.
கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம், கடவுளை விட்டு பிரிக்கப்பட்ட உறவு புதுப்பிக்கப்பட்டு, நமக்குள் இருக்கும் உறவில் பலப்பட வேண்டும் என்பதே இந்த மூன்றாம் வார்த்தையின் அடித்தளமாகும். தம்மை நேசித்த சீஷனை நோக்கி: அதோ உன் தாய் என்று சொல்லும் போது, தன்னிடத்தில் கொடுக்கப்பட்ட உறவை அவன் ஏற்றுக்கொண்டு நேசித்தான் என்பதுதான் இந்த செய்தியாகும் எபே.2:14,15 வசனங்களை நாம் படித்தால், சிலுவை பகையை மாற்றுவது மாத்திரமல்ல. அதற்கு அதிகமாக நேசிக்க ஆரம்பிக்கவும் நம்மை வழி நடத்துகிறது என்பது அதிசயமான செய்தியல்லவா? யோவானும் இந்த வார்த்தையை கேட்ட உடனே கீழ்ப்படிந்த விதத்தை நாம் இந்த வசனத்தில் பார்க்கிறோம். அதாவது, அந்நேரமே யோவான் மரியாளை தன்னிடம் சேர்த்துக் கொண்டான். சிலுவையில் மரிக்கும் ஒருவருடைய வார்த்தையை யோவான் கேட்டு கீழ்ப்படிந்தான் என்றால் அதுதான் விசுவாசத்தின் உச்சம் என்று சொல்லலாம். சிலுவையில் மரித்த ஒருவர் எப்படி நமக்கு நம்பிக்கை கொடுக்க முடியும்? என்பது ரோமர் காலத்தில் யாரும் கேட்கக் கூடிய கேள்விதான். இன்றைக்கு, சிலுவை கௌரவத்தின் அடையாளமாக மாறிவிட்ட படியினால் நமக்கு இந்த கேள்வி எளிதாகக் காணப்படலாம் ஆதலால், சிலுவையில் இருந்து வருகிற செய்தி கேவலமாயிருந்த காலத்தில் யோவான் அதை செயல்படுத்தினான் என்பது எவ்வளவு விசேஷம்! இன்றைக்கு சிலுவையிலிருந்து வருகிற செய்தியை கேட்பது கௌரவம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அதை செயல்படுத்துவதற்கு வெட்கப்படுகிறோம் எப்படிப்பட்ட முரண்பாட்டை இது காண்பிக்கிறது. பூர்வ காலத்தில் பங்குபங்காவும், வகை வகையாகவும் தீர்க்கதரிசிகள் மூமைாய் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி காலங்களில் தமது குமாரன் மூலமாய் திருவுளம் பற்றினார். (எபி.1:1,2). இது சிலுவையின் மூலம் நிறைவேறிற்று.
இந்த பின்னணியிலே, யோவானுடைய உடனடியான கீழ்ப்படிதல் நமக்கு சவாலான செய்தியை சொல்லுகிறது அல்லவா? சபைகளில் பிரிவினைகள் இருக்கும் பட்சத்தில், வெளித்தோற்றத்தில் மாத்திரம் நாம் சிலுவையை வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று கருத வேண்டி இருக்கிறது. மாறாக, மூன்றாம் வார்த்தையின் செய்தி, சிலுவைக்கு கீழாக கிறிஸ்துவில் நாம் ஒரே பரமபிதாவின் பிள்ளைகளாக, இந்த உலகில் நாம் கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்கும் அவரது ஆடுகளாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
நான்காம் வார்த்தை
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27:46).
கடவுள் கடவுளை கைவிட முடியுமா? நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று சொன்னவர் இந்த வார்த்தையை எப்படி சொல்ல முடியும்? இதன் பின்னணியில் எப்படி கிறிஸ்து கைவிடப்பட முடியும் என்பது வேதத்தின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த கேள்விக்கான விடை காண பல வேதவல்லுநர்கள் முயற்சி செய்து தோற்றுப் போனார்கள். மார்ட்டின் லூதர் இந்த வார்த்தையை குறித்துச் சொல்லும்போது, மூன்று மணி நேர அந்தகாரம் எப்படி இந்த வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கிறதோ. இதற்கான விளக்கமும் ஏறத்தாழ அப்படிப்பட்ட அந்தகாரத்தின் அடையாளமாகத்தான் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்
முதலாவது, பழைய ஏற்பாட்டு பாகமாகிய சங்கீதத்தில் இது விவரிக்கப்பட்ட பின்னணியை கவனிப்பது ஏற்றதாக இருக்கும், சங்கீதம் 22:1-3 என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும் நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாய் இருக்கிறீர்? என் தேவனே நான் பகலிலே கூப்பிடுகிறேன். உத்தரவு கொடீர்: இரவிலே கூப்பிடுகிறேன் எனக்கு அமைதல் இல்லை. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். இந்த சங்கீதம் முழுவதும் கிறிஸ்துவின் வருங்கால பாடுகளின் தீர்க்கதரிசனமாக தாவீது எழுதி வைத்துள்ளார் என்பதை முழு சங்கீதத்தையும் படிக்கும்போது நாம் விளங்கிக் கொள்ள முடியும். இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தராகையால், பாவியான மனுஷன் நிரந்தரமாக கடவுளை விட்டுப் பிரிக்கப்பட்டுள்ளான் என்பதே அதன் பொருளாகும். ஆகவே. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்றும் பகலிலும், இரவிலும் கூப்பிட்டாலும் நீர் எனக்கு செவி கொடுக்கவில்லை என்றும் மன்றாடுகிறான். மனிதன் கடவுளை விட்டு எந்த வகையிலும் சேர முடியாத நிலையில் உள்ளான் என்பதே இந்த சங்கீதத்தின் செய்தியாகும். இந்தப் பின்னணியில் இந்த வாத்தையில் இருந்து நாம் 2 பாடங்களைப் படிக்கலாம்.
முதலாவது இது முதல் ஆதாமின் நிரந்தர பிரிவின் அடையாளத்தை சுட்டிக்காட்டுகிறது.
அடிப்படையில், மனிதனுடைய வீழச்சியின் பலனாகிய மரணம் நிரந்தரமானது என்பது இந்த வார்த்தையின் மூலம் விளங்குகிறது. கிறிஸ்து நூற்றுக்கு நூறு மனிதன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவருக்கும் இந்த வார்த்தை பொருத்தமானதாகும். மரணம் என்ற ஒரே வார்த்தையை தமிழ் வேதம் பயன்படுத்தினாலும், மூன்று விதமான மரணங்களைப் பற்றி சத்தியம் சொல்வதை நாம் கவனிக்க வேண்டும்.
முதலாவது ஆவிக்குரிய மரணம்: (SPIRITUAL DEATH).
இப்படி சொல்லும்போது லூக்கா 15:24.32 வசனங்களில் இளைய மகனுடைய நிலைமையைப் பற்றி தகப்பன்: அவன் மரித்தான்: மீண்டும் உயிர்த்தான் என்று சொல்லுகிறார். இது என்ன விதமான மரணம்? தகப்பனை விட்டு பிரிந்த மகனின் ஆவிக்குரிய மரணத்தை பற்றிய படமாகத்தான் இதைப் பார்க்கிறோம். அதாவது தகப்பனை விட்டுப் பிரியும் போது, தனது ஆஸ்தி முழுவதையும் எடுத்துச் சென்றது என்பது அந்த கலாசாரத்தில் தகப்பன்-மகன் உறவு முழுதும் முறிந்து விட்டது என்று தான் பொருள்படும். மகனும், நான் வீட்டிற்கு போனால் எனக்கு வேலைக்காரன் ஸ்தானம் தான் தகுதியானது. ஏனெனில், நான் மகன் என்ற அந்தஸ்தை இழந்து விட்டேனே என்று அங்கலாய்க்கிறதை பார்க்கிறோம். இதுதான் நித்திய பிரிவின் சாயலாகும். அதேபோல், நீ கனியை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று ஆதாமுக்கு ஆண்டவர் சொன்ன போது, அவன் கனியை புசித்து சரீரத்தில் உடனே மரிக்கவில்லை, ஆனால், கடவுளை விட்டு பிரிக்கப்பட்ட ஆவிக்குரிய மரணத்தை சந்தித்தான் என்று நாம் ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் படிக்கிறோம். சொல்லப்போனால், வியாதியினால் தான் நாம் மரிக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறோம் ஆனால், மரணத்தினால் தான் வியாதி வந்தது என்பது எத்தனை பேருக்குக் தெரியும் என்று தெரியவில்லை. அதாவது, ஆவிக்குரிய மரணத்தின் விளைவாகத்தான் சரீர மரணம் வந்தது சரீர மரணத்திற்கு வியாதி வித்தாகிறது.
இரண்டாவது சரீர மரணம் (PHYSICAL DEATH).
ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் எல்லோருக்கும் நியமிக்கப்பட்டு இருக்கிறது (எபி. 9:27) என்று சொல்லும்போது, எல்லோரும் சரீரத்தில் மரிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகிறது. இது நாம் எல்லோரும் அறிந்துள்ள காப்பான உண்மையாகும்.
மூன்றாவது நித்திய மரணம் என்னும் இரண்டாம் மரணம் (ETERNAL DEATH).
இது நியாயத்தீர்ப்புக்கு பிறகு வரும் நித்திய ஆக்கினையைப் பற்றி சொல்கிறது. (வெளி. 20:14, 15).
எனவே, என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்? என்று கர்த்தர் சொன்ன இந்த நான்காம் வார்த்தை மனிதன் எப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் இருக்கிறான் என்பதை எடுத்துக்காட்டும் வசனமாகும். முதல் வார்த்தையில், பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று சொன்ன கிறிஸ்து தற்போது, பிதா என்பதற்கு பதிலாக தேவனே, தேவனே என்ற வார்த்தையை பயன்படுத்துவதை பார்க்கும் போது கடவுளின் நித்திய பரிசுத்தத்திற்கு முன்பாக மனிதன் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறான் என்பதை சொல்லுகிறதாய் கவனிக்கலாம். இப்படி, ஆதாம் தொடங்கி அவரை விசுவாசிக்கிற அத்தனை பேருடைய பாவத்தையும், அதற்குரிய தண்டனையையும் தேவன் கிறிஸ்துவின் மீது வைத்தபடியினாலே அவர் கைவிடப்பட்ட ஸ்தானத்தில், நமது நிலைமையை எடுத்துரைக்கும் வார்த்தையாக சொன்ன மன்றாட்டு இது என விளங்கிக் கொள்ளலாம்.
இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து நமக்காக தோன்றியிராவிட்டால், நமது நிலைமை இதுதான் என்பது இந்த வார்த்தையிலிருந்து வரும் அழுத்தமான செய்தியாகும். மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்பது வேத பிரமாணமாகும். (கலா. 3:13), சாபம் என்பது கடவுளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பொருள்படும் வார்த்தையாகும். ஏனெனில், கடவுள் ஆசீர்வாதத்தின் ஊற்றாய் உள்ளார் என்பதே வேதத்தின் சாரம்சமாகும். கிறிஸ்து நமக்காக சாபமானார் என்று பவுல் சொல்லும்போது, நாம் எப்படி நிரந்தரமாக பிரிக்கப்பட்டோமோ, அதே அனுபவத்தை அவரும் பெற்ற அந்த அகோர நிலையைத்தான் இந்த வார்த்தை நமக்கு புலப்படுத்துகிறது. கிறிஸ்துவின் மூன்று மணி நேர போராட்டம் நம்மை நடுங்கச் செய்யும் செய்தியை சொல்லுகிறதல்லவா? மனிதனின் பாவம் கடவுளையே கடவுள் கைவிடும் நிலைக்கு கொண்டு சென்றதோ! இப்படி, அவர் எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட வேண்டியவராயிருந்தார்.
இரண்டாவது, பிந்தின ஆதாமாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நிரந்தரமான, முழுமையான பரிகார பலியின் அடையாளம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூன்று மணி நேர அந்தகாரத்திற்குப் பின், இந்த வார்த்தையை சொன்ன அந்தத் தருணம் தான், எருசலேம் தேவாலயத்தில் பழுதற்ற ஆட்டுக்குட்டி பலியிடப்பட்ட தருணமும் என்பதை நாம் இங்கு அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாயிருக்கிறது. அப்பொழுது தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து, கீழாக இரண்டாகக் கிழிந்த சம்பவம் நடந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். முந்தின ஆதாம் மனுக்குலத்தின் மேல் வருவித்த நித்திய ஆக்கினை மனிதனை ஆட்கொண்டபோது, ஒரே மத்தியஸ்தராக பாவமில்லாத பலியாக கிறிஸ்து ஒப்புக் கொடுக்கப்பட்டார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்: மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டார். (ஏசாயா 53:4-5)
நித்தியமான கடவுளுக்கு விரோதமாக செய்யப்பட்ட பாவத்தை நித்தியமான ஒருவர்தான் நிவர்த்தி செய்ய முடியும். ஆகையால், இயேசு கிறிஸ்துவே நித்திய பலியாக பாவத்திற்கு பரிகாரம் செலுத்தின வகையை இது சித்தரிக்கிறது. எருசலேம் தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே போடப்பட்ட திரையின் வழியாக வருஷத்துக்கு ஒரு முறை பிரதான ஆசாரியன் முதலாவது தன்னுடைய பாவங்களுக்கு பரிகாரம் செலுத்தி விட்டு, பின்பு ஜனங்களின் பாவங்களுக்காக பலி செலுத்துவது வழக்கமாகும். பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்தை அணுகும்போது மிகுந்த பயத்தோடு இதை நிறைவேற்ற அழைக்கப்படுகிறார். ஒருவேளை அவன் தன்னுடைய பாவத்திற்கு முறைப்படி பரிகாரம் செலுத்தாமல் அப்படி செய்ய முற்பட்டால், அங்கேயே அழிக்கப்படும் சூழல் உண்டே. எனவேதான், அவர்கள் கால்களில் சங்கிலி மாட்டி மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் அனுப்பப்படுவார் என்று பாரம்பரியம் சொல்கிறதாக நாம் புரிந்து வைத்துள்ளோம்.
ஆனால், இயேசு கிறிஸ்துவோ, அநேகருடைய பாவங்களை சுமந்து தீர்க்கும்படி ஒரே தரம் பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியானவராக தம்மை ஒப்புக்கொடுத்தபடியினால், இந்த ஒரே பலியினிலே தமக்கு காத்துக்கொண்டு இருக்கிறவர்களுக்கு நித்திய இரட்சிப்பை அருளும்படி அவர் மரித்தார். பழுதில்லாத ஆட்டுக்குட்டி அடிக்கப்படவேண்டும் என்று சொல்லும்போது, அந்த ஆட்டுக்குட்டியின் தனிமையை நாம் உணர்ந்து கொள்ள முடியும். பிறந்ததிலிருந்து அந்த ஆடு பலியிடுவதற்கென்று பிரத்யேகமாக நியமிக்கப்பட்டு, பராமரிக்கப்படுவது வழக்கமாகும். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை கவனித்தால், பிறப்பிலிருந்து அவர் பிரித்து எடுக்கப்பட்டவர் என்பதும், அவருக்கு சொந்தமானவர்களே அவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும், இறுதியில் குற்றமற்றவராக பலியிடப்பட்டு மரித்தவர் என்பதும் இந்த வார்த்தையின் மூலமாக வெளிப்பட்டது என்று சொல்லலாம் இப்படி, என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று கிறிஸ்து சொன்ன நான்காவது வார்த்தை, கடவுளும் மனிதனும் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறார்கள் என்றும் – அது முந்தின ஆதாமால் வந்த தாக்கம் என்றும், பிந்தின ஆதாம் தாமாக அந்த சாபத்தை ஏற்றுக்கொண்டு பரிகாரமாக மரித்ததின் மூலம் மனுக்குலம் எப்படிப்பட்ட ஆபத்தில் இருக்கிறார்கள் சொன்ன வார்த்தையாகத் தான் இதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஐந்தாம் வார்த்தை
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். (யோவான் 19:28).
இந்த வார்த்தை இயேசு கிறிஸ்து தேவனாக இருந்தபொழுதும் நூற்றுக்கு நூறு மனிதனாக இந்த உலகில் வாழ்ந்தார் என்பதை குறிப்பிடுகிறது.
இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும்; நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு ஒருக்காலும் தாகம் உண்டாகாது. நான் அவனுக்கு கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவ காலமாய் ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் யோவான் 4:14), இந்த வார்த்தைகளைச் சொன்ன கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே: தாகமாயிருக்கிறேன் என்று சொன்னது எப்படி என்று நாம் கேட்பது சரியானதுதான். இதற்கு விடையாக, கிறிஸ்துவுக்கு ஆவிக்குரிய தாகம் இருந்தது என்பது போன்று நேரடியான விளக்கத்தை மட்டும் கொடுக்க முயற்சி செய்வது வழக்கமாய் இருக்கிறது. இது ஒரு வகையில் உண்மையாயினும், நாம் மறுபடியும் பின்னணியோடு இந்த வசனத்தை தியானித்தால் ஆசீர்வாதமாய் இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. இந்த வார்த்தை யோவான் சுவிசேஷத்தில் மட்டும் எழுதப்பட்டு இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது. யோவான் சுவிசேஷத்தில் தண்ணீரைப் பற்றி சில சூழ்நிலைகளில் சித்தரிக்கப்பட்ட வகைகள் எழுதப்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்
பழைய ஏற்பாட்டில், முதல் முறையாக பஸ்கா பண்டிகையை ஆசரிக்கும் முறைமையை கர்த்தர் கொடுத்தபோது, தெரிந்தெடுக்கப்பட்ட குற்றமில்லாத ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை ஈசோப்புத்தண்டில் மாட்டி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக தங்கள் வீட்டு நிலைகளில் பூச வேண்டுமென்று சொன்னதை யாத்.12:21,22 வசனங்களில் வாசிக்கிறோம். இந்த அடிப்படையில்தான். தாவீதும் தன்னுடைய பாவத்தை அறிக்கையிடும் போது, நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும் அப்பொழுது சுத்தமாவேன் என்று ஈசோப்பு தண்டுக்கும், சுத்திகரிப்பிற்குமுள்ள நெருங்கிய தொடர்பை சொல்லியிருக்கிறார். இதேபோல், இயேசு கிறிஸ்து தாகமாயிருக்கிறேன் என்று சொன்ன பொழுது கடற்காளான் காடியை எடுத்து ஈசோப்புத்தண்டில் மாட்டிக் கொடுத்தார்கள் என்றும், இயேசு காடியை வாங்கினார் என்றும் யோவான் 19:29,30 வசனங்களில் நாம் படிக்கிறோம்.
எனவே, கிறிஸ்துவானவர் மனிதரில் இருந்து தேர்ந்தெடுக் கப்பட்டவர் என்பது இதிலிருந்து புலனாகிறது. அவர் நூற்றுக்கு நூறு மனிதனாகவும் நூற்றுக்கு நூறு தெய்வமாகவும், இப்படி இரு தன்மையும் சேர்ந்த இரட்சகராக வெளிப்பட்டார் என்று நாம் ஏற்றுக் கொள்கிறோம். இதைப்பற்றி தொன்றுதொட்டு அநேக முரண்பாடான கருத்துக்கள் பரவி வந்திருக்கிறது. அவர் 50 சதவிகிதம் தெய்வம் – 50 சதவிகிதம் மனிதன் என்றும் ஞானஸ்நானம் பெறும் வரையில் மனிதனாகவும், ஞானஸ்நானம் பெற்ற உடனே தேவனாகவும் விளங்கினார் என்றும் பல்வேறு கோட்பாடுகள் உலா வருகின்றன ஆனால், வேதம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளபடி, கிறிஸ்துவானவர் நூற்றுக்கு நூறு மனிதன் என்பதை மாற்றாமல் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். எனவே, தாகமாயிருக்கிறேன் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தை, அவர் நூற்றுக்கு நூறு மனிதராக வாழ்ந்து பாடுகளை ஏற்று மரித்தார் என்பதை அடையாளப்படுத்துகிறது.
சிலுவையில் அறையப்பட்டதால் ஏற்பட்ட தாக்கத்தால் ஒருவர் தாகத்தோடு தொங்கிக் கொண்டிருப்பது வினோதமான சூழல் கிடையாது. இது எல்லா மனிதருக்கும் வரும் பாதிப்பு ஆகும். ஏற்கனவே, அவர் சிலுவையை சுமந்து சென்ற போது வெள்ளைப்போளம் கலந்த திராட்சை ரசத்தை வாங்க மறுத்ததை மாற்கு 15:23ம் வசனத்தில் படிக்கிறோம் சிலுவையின் வேதனையைக் குறைப்பதற்காக இப்படிப்பட்ட பானங்கள் கொடுக்கப்படுவது அந்த காலத்து வழக்கம் என்று சொல்லலாம். ஆதலால் மேலே சொன்ன வசனத்தின்படி தம்முடைய வேதனையை குறைத்துக் கொள்வதற்காக கொடுக்கப்பட்ட பானத்தை சிலுவையை சுமந்து செல்லும் போது அவர் அங்கீகரிக்காமல் மறுத்திருக்கிறார். மெய்யாகவே, அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் மெய்யாகவே, அவர் அடிக்கப்பட்டார் என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதும் இந்த வார்த்தையின் அர்த்தமாகும். சங்கீதம் 69:2ம் வசனத்தில் என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியை குடிக்க கொடுத்தார்கள் என்று எழுதப்பட்ட வேதவாக்கியம் நிறைவேறும்படி இது நடந்தது என்பது உண்மைதான். தாவீதின் இந்த சங்கீதத்தை நாம் கவனித்துப் படித்தால், ஆத்தும வியாகுலத்தினாலே சரீரத்தில் அவன் அடைந்த வேதனைகளை படம் பிடித்து காண்பிக்கிறதை நாம் பார்க்கிறோம்.
அவர் மெய்யாகவே மனிதனாக வாழ்ந்தார் என்பதை வேத வசனம் பல இடங்களில் சுட்டிக் காண்பிக்கிறதை நாம் மறந்து விடக்கூடாது. அவர் எல்லா விதத்திலும் நம்மைப் போல ஆக வேண்டும் என்பதை வேதம் வலியுறுத்தி கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் கந்தைத் துணியில் சுற்றப்பட்டார். (லூக் 2:7), அவர் அழுதார் (யோவான் 11:35); அவர் அயர்ந்து தூங்கினார் (மாற்கு 4:38) பசி அடைந்தார் (மத் 4:2); ஆச்சரியப்பட்டார் (மாற்கு 6:6) போன்ற வசனங்கள் அவர் எல்லா விதத்திலும் மனிதனுடைய தன்மைகளை உடையவராய் இருந்தார் என்பதை சுட்டிக் காண்பிக்கிறது. (1 பேதுரு 5:7 எபி.2:17,4:15 ஏசாயா 53:4).
இங்கு, யோவான் 7ம் அதிகாரம் 37 முதல் 40 வரை உள்ள வசனங்களில் எழுதப்பட்ட சம்பவத்தையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இது கூடார பண்டிகையின் நாட்களில் நடந்ததாகும். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வனாந்தரத்தில் அலைந்து திரிந்ததை நினைவுபடுத்தும் வண்ணமாக, வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தில் சேர்ந்த பொழுதும். வருடத்தில் 7 நாட்கள் கூடாரங்களில் அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார். இந்தப் பண்டிகை அறுப்பு காலம் முடிந்த பின், ஆண்டவர்தாமே மீண்டும் மழையை வருஷிக்கப் பண்ணி ஆகாரத்தை கொடுக்க வேண்டும் எனும் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதாகும். ஒருவார கால இந்தப் பண்டிகையின் கடைசி நாளில் பலிபீடத்தைச் சுற்றி தண்ணீர் ஊற்றுவார்கள். தங்களுடைய சரீர நன்மைகளுக்காக குறிப்பாக, அறுவடைக்கு தண்ணீர் கொடுக்கிற சிருஷ்டி கர்த்தர் என்பதை நினைவுபடுத்துவதற்காக இப்படி செய்வார்கள்.
இப்படி, கடைசி நாளில் பிரதான ஆசாரியன் எருசலேமின் பலிபீடத்தை சுற்றி தண்ணீர் ஊற்றிய அதே வேளையில், இயேசு கிறிஸ்து: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணக்கடவன் என்று சத்தமிட்டு சொன்னார். இது அவர்தாமே சிருஷ்டிகர் என்றும், அவர் மேசியா என்றும் அடையாளப்படுத்தும் அழைப்பின் அம்சமாகும். எனவே, இயேசு கிறிஸ்து தாகமாயிருக்கிறேன் என்று சொன்னது, அவர் அருவிகளை உண்டாக்கினவர் என்பதும் அதேசமயம் அவர் தாமே தாகத்தை தணிக்கக்கூடிய மேசியாவாகிய மனுஷகுமாரன் என்பதும் இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. தாகம் என்பது எல்லா மனிதருக்கும் ஏற்படும் வேட்கையாகும். இதற்கு யாரும் விதிவிலக்கு இருக்கமுடியாது. இப்படி கிறிஸ்து எல்லா மனிதருக்கும் ஒரு அழைப்பை கொடுக்கிறார். அவரை விசுவாசிப்பவர்கள் ஒருக்காலும் தாகமடையார்கள் என்றும், அவரை விசுவாசியாதவர்கள் ஒருக்காலும் ஒருவராலும் தணிக்க முடியாத தாகத்தை உடையவர்களாக இருப்பார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒருவகையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் ஆத்ம தாகம் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஏனென்றால், அவர் நூற்றுக்கு நூறு மனிதனாக தாகம் அடைந்தவர், தம்மை சிருஷ்டிகராக மட்டுமல்ல, மீட்பர் என்றும் ரூபகப்படுத்தியதை நாமும் இந்த வகையில் அறிக்கையிட அழைக்கப்படுகிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எல்லா சோதனைகளையும் ஒரு மனிதனாக ஏற்றுக்கொண்டு முற்றும் முடிய தம்மை ஒப்புக் கொடுத்ததன் விளைவாக அவர் தாகம் அடைந்ததை போல, நாமும் ஜீவ ஊற்றாகிய அவருடைய தயவினால் பாடுகளையும், சோதனைகளையும் வேதனைகளையும் சகிக்கும் போது மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்போம் என்பதில் சந்தேகமில்லை.
ஆறாம் வார்த்தை
இயேசு காடியை வாங்கின பின்பு. முடிந்தது என்று சொல்லி தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார். (யோவான் 19:30).
இந்த வார்த்தை சிலுவையின் இன்னொரு முழுமையை சொல்வதாக இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முழு தெய்வதுவத்தின் அடையாளமாக இந்த சத்தத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
முடிந்தது என்னும் இந்த வார்த்தை மூல பாஷையான டெடிலெஸ்டாய் என்னும் வார்த்தையின் தமிழாக்கம் ஆகும். இந்த வார்த்தைக்கான அர்த்தம் நிறைவேற்றி முடிந்து இன்னும் அதே வல்லமையோடு முழுமை அடையும் என்ற அர்த்தத்தை உடையதாகும் இன்னொரு வகையில் சொல்வதென்றால், தாம் நிறைவேற்றின இந்த செயல் நிச்சயமாக அது தன் முழு நோக்கத்தையும் நிறைவேற்றி விட்டது என்ற பொருளுடன் சொல்லப்பட்ட வார்த்தையாகும். சிருஷ்டிப்பின் சரித்திரத்தில் ஒவ்வொரு நாளையும் நல்லது என்று கண்ட திரியேக தேவன், ஆறாம் நாளை மிகவும் நல்லது என்று சொன்னார். பின் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் எனும்போது எதையும் செய்யாதவராக இருந்தார் என்பதல்ல: அந்த சிருஷ்டிப்பின் நோக்கம் தொடருகிறதைப் பார்த்து ஓய்ந்திருந்து பூரித்தார் என்று யாத் 31:17ல் வாசிக்கிறோம். கிறிஸ்து சிலுவையில் சொன்ன, முடிந்தது எனும் வார்த்தையும் புது சிருஷ்டிப்பாகிய இரட்சிப்பின் திட்டம் தம்மில் நிறைவேறியது என்பதையே எடுத்து சொல்லியுள்ளார். அதன் விளைவு நித்திய இளைப்பாறுதல் இனி வரப் போகிறது என்பதை உணர்த்துவதாகும்.
உலக வழக்கில் இந்த வார்த்தையை நாம் பயன்படுத்தும் போது நான் செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டேன்: இனி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்பதாக பெரும்பாலும் அமைந்து விடுகிறது. உதாரணமாக, விவசாயிகள் தாங்கள் விதைத்து விட்டோம் எனவும், அதன் பலனை பார்க்க காத்திருக்கிறோம் என்று சொல்லுவதற்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள், அதாவது, எங்கள் பணி முடிந்து விட்டது. இனி இதற்கு மேல் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்ற நிலையை குறிப்பிடுவது தான் இந்த வார்த்தை இங்கே கிறிஸ்து அப்படி விரக்தியோடு இதைச் சொல்லாமல் இந்த இரட்சிப்பின் கிரியை தொடர்ந்து அதே வல்லமையோடும், தீர்மானத்தோடும் செயல்படுத்தப்படும் என்ற பொருளிலேயே சொல்லியுள்ளார். கிறிஸ்துவானவர் முடிந்தது என்று சொல்லும் போது அவர் தமது வேளையை பற்றியும் இணைத்தே இங்கு குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால், அடிக்கடி தமது வேளை வர வேண்டும் என அவர் சொன்னதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும்.
மகிமையானது சிலுவையோடுதான் எப்போதும் சம்பந்தப்படுத்தப் படுவதை வேதத்தில் பல இடங்களில் வாசிக்கிறோமே? கன்மலையின் வெடிப்பில் உன்னை வைத்து எனது மகிமையை காட்டுவேன் என்று கர்த்தர் மோசேயிடம் கூறிய இடத்தில், அவன் கடவுளின் மகிமையை காண வேண்டும் எனக் கேட்ட கேள்விக்கான பதில் தான் என்பதுதை யாத் 33:18-23 வசனங்களில் படிக்கிறோமே. அந்தக் கன்மலை கிறிஸ்துவே என்று பவுல் மோசேயுடன் சம்பந்தப்படுத்தி சொல்லியதை 1 கொரி. 10:1-4 வசனங்களில் தெளிவாக வாசிக்கிறோம். அதேபோல், மறுரூபமலை சம்பவத்தை லூக்கா 9ம் அதிகாரத்தில் படிக்கும்போதும் இதே கோட்பாட்டை பார்க்கிறோம். அன்றியும் மோசே, எலியா என்னும் இரண்டு பேரும் மகிமையோடே சம்பாஷித்த கருப்பொருளானது அவருடைய மரணம் என்பதாய் லூக்கா 9:30,31 வசனங்களில் காண்கிறோம் இன்னும் அநேக வசனங்களை சொல்ல முடியும்.
மூன்று சாட்சிகள் மூலமாக கிறிஸ்துவினுடைய கிரியை முடிந்தது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
முதலாவது தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழித்த சம்பவம்:
வேதத்தில் மற்ற இடங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்ட விதத்தை நாம் இதோடு இணைத்து படிக்க வேண்டும். கிறிஸ்துவானவர் ஒரே தரம் (எபி 7:27) மீட்பின் கிரயத்தை செலுத்தி தீர்த்துவிட்டார் என்று படிக்கிறோம். மனுக்குல மீட்புக்காக எந்தக் குறையுமின்றி அவர் நிறைவேற்றி முடித்திருக்கிறார். (ஏசாயா 53:6,12), யோவான் 5:36 ல் நான் நிறைவேற்றும் என்னுடைய கிரியைகளே சாட்சியாய் இருக்கிறது என்றார். பழைய ஏற்பாட்டில் பிரதான ஆசாரியன் வருஷந்தோறும் பிரதான நாளில் பாவத்திற்காக பலி செலுத்தி, எல்லாவற்றையும் கிரமமாக செய்து முடித்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்து வெளியே வந்து ஜனங்களுக்கு ஆசீர்வாதம் கூறும்போது சமாதானத்தை அறிவிக்கிறார். (லேவி 16:33) இயேசு கிறிஸ்துவும் தமது சொந்த ரத்தத்தினால் திரையில் பிரவேசித்து நித்திய மீட்பை உண்டு பண்ணி வைத்திருக்கிறார். கிறிஸ்துவினிடத்தில், அவர் இரத்தத்தை பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார். (ரோமர் 3:26) ரோமர் 3:22ல் சொல்லப்பட்டபடி, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும், எல்லார்மேலும் அது பலிக்கும்; வித்தியாசமே இல்லை. ஆடுகளுக்காக என் ஜீவானை கொடுப்பேன் என்று சொன்ன ஆண்டவருடைய வார்த்தை தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப் போகும் நித்திய இரட்சிப்புக்காக அவர் நிறைவேற்றி முடித்த கிரியை இதிலே அடங்கியிருக்கிறது என்று சொல்லுகிறார்.
அப்படியானால், மனிதனுடைய மீட்புக்காக நீங்களும் நானும் செய்ய வேண்டி எந்த கிரியையும் அவர் மீதி வைக்காமல் முழுமையாக நிறைவேற்றி விட்டார் என்பதைத் தான் தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. எபி10:19 நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு தமது மாம்சமாகிய திரையின் வழியாக அவர் வழியை உண்டு பண்ணி வைத்துள்ளார். பொதுவாக இன்றைக்கு எவரும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி குறை சொல்வது கிடையாது. ஆனால், பிரச்சனை எங்கே இருக்கிறது? நம்முடைய இரட்சிப்புக்கு இயேசு கிறிஸ்துவும் வேண்டும்; இன்னும் சில நற்காரியங்களும் வேண்டும் என்று சொல்லக்கூடிய கிறிஸ்து கூட்டம் என்கிற செய்தி இன்றைக்கு நம்பப்படுகிறது. ஆனால் கிறிஸ்து முடிந்தது என்று சொல்லும்போது மீட்பின் கிரயத்தை முழுவதும் செலுத்தி விட்டார் என்றும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பு இல்லை என்றும் ஒவ்வொரு விசுவாசியும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சிறப்பான செய்தியாகும். நான் உயர்த்தப்படும் போது உங்களை என்னிடம் சேர்த்துக் கொள்வேன் என்று அவர் தம்முடைய சிலுவை மரணத்தின் சம்பவத்தை சொன்னதை நாம் இங்கு நினைவு கூற வேண்டும். (யோவான் 12: 32, 33) இதுதான் சிலுவையிலே (படித்து வைக்கப்பட்ட ஆசீர்வாதம் ஆகும்.
இரண்டாவது, உயிர்த்தெழுதலின் சம்பவமும் அதைப்பற்றிய சாட்சியும்:
எந்த ஒரு நல்ல முடிவும் புதிய துவக்கத்தை தரும் என்பது இயற்கை நியதியாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் முழுமையானது அநேகருடைய வாழ்க்கையில் செயலாற்றும் போது அது பலன் கொடுக்கிறது என்பதாக அர்த்தம் ஆகும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இந்த வார்த்தையை மெய்ப்பிப்பதாக நாம் ஏற்றுக் கொள்கிறோம். பவுல் சொல்வதைப்போல் கிறிஸ்து உயிர்த்தெழுந்தராவிட்டால் நம்முடைய விசுவாசம் விருதா: நாம் இன்னும் நம்முடைய பாவத்தில் நிலையில் இருப்போமே (1 கொரி. 15:17) கடைசி சத்துருவாகிய மரணம் சிலுவையில் மேற்கொள்ளப்பட்ட படியினால், நமக்கு எதிராகவும் கட்டளைகளால், நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தை குலைத்து, அதை நடுவில் இராதபடிக்கு எடுத்து சிலுவையின் மேல் ஆணி அடித்து துரைத்தனங்களையும், அதிகாரங்களையும், வல்லமைகளையும், வெளியரங்கமான கோலமாகி அவைகளின் மேல் வெற்றி சிறந்தார் என்பது திண்ணம். (கொலோ 3:14,15), ஆகவே, நீங்கள் கிறிஸ்துவுடனே கூட எழுந்ததுண் டானால் மேலானவைகளையே நாடுங்கள்; பூமிக்குரிய வைகளை அல்ல என்று கொலோசெயர் நிருபத்தில் பவுல் சொல்வதை நாம் படிக்கிறோம்.
மூன்றாவது பரிசுத்த ஆவியானவர் சபையின் மேல் ஊற்றப்பட்ட சம்பவம்:
இரட்சிப்புக்கான கிறிஸ்துவின் கிரியை முடிந்துவிட்டது என்றாலும் அவர் உயிர்த்தெழுந்து பரமேறிய உடனே பரிசுத்த ஆவியானவர் சபையின் மேல் பற்றப்பட்டது மெய்யாகவே அவர் தான் மேசியா என்பதை உறுதிப்படுத்துகிறது. ஏனென்றால், நான் போவேனேயாகில் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவார் என்று ஏற்கனவே கிறிஸ்து வாக்கு பண்ணியிருந்தார். இப்படி, பரிசுத்த ஆவியானவர் சபையில் ஊற்றப்பட்டது கிறிஸ்து தம்முடைய கிரியை யாவையும் முழுமையாக நிறைவேற்றி விட்டார் என்பதற்கான உறுதி என்பாதாக நாம் பொருள்படுத்துகிறோம். இன்றைக்கும் வாக்குப் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்து வரும்வரையில் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நீயாயத் தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்தி ஜனங்களை அவருடைய மந்தையில் சேர்க்கக் கூடிய பணியை செய்து கொண்டிருக்கிறார். ஆகவே, கிறிஸ்து முடிந்தது என்று சொன்னது இன்றைக்கும் விசுவாசிகளின் வாழ்வில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
கிறிஸ்து சிலுவையில் சொன்ன ஆறாம் வார்த்தையின் சாராம்சம்: மனிதனின் இரட்சிப்புக்காக கிறிஸ்து எல்லாவற்றையும் நிறைவேற்றி முடித்து விட்டாரென்பதும், மீட்பின் ஆதாரமாக சபை இன்றைக்கு அடையாளமாக இருக்கிறது என்பதும், பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதும் இணைத்துப் பார்க்க வேண்டிய அம்சங்களாகும்.
எழாம் வார்த்தை
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார் இப்படி சொல்லி ஜீவனை விட்டார். (லூக்: 23:46).
பொதுவாக, யூதர்கள் தங்கள் பிள்ளைகள் படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக இப்படிப்பட்ட ஜெபத்தை ஏறெடுக்க கற்றுக் கொடுப்பது மரபாக இருந்தது. (சங்கீதம் 31:5) ஆனால் அவர்கள் பயன்படுத்தாத ஒரு வார்த்தையை இயேசு கிறிஸ்து இங்கே பயன்படுத்துகிறார். அதாவது, பிதாவே என்ற இந்த வார்த்தையை சங்கீதத்தில் நாம் வாசிப்பது கிடையாது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சொன்ன கடைசி வார்த்தை: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்பதாகும். அவருடைய சரீரம் பலவகைகளில் ஏற்கனவே பாதிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டதை நாம் சுவிசேஷங்களில் படித்திருக்கிறோம். இந்தப் பின்னணியில் கிறிஸ்து என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று சத்தமாய் சொன்னது குறிப்பிடத்தக்கது. இதன் அர்த்தத்தை நாம் கூர்ந்து ஆராயலாம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவைக்கு செல்வதற்கு முன்பாக பிதாவோடு தமக்குள்ள ஐக்கியத்தை பல கோணங்களில் சொல்லி இருக்கிறதை சுவிசேஷங்களில் வாசிக்கிறோம். அந்த உறவை உறுதிப்படுத்தும் வண்ணமாக உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று அவர் சொல்லி ஜீவனை விடுகிறதை நாம் மறந்து விடக்கூடாது. ஏனென்றால், உயிர்த்தெழுந்த ஆண்டவர் மரியாளிடம் சொன்ன வார்த்தை: ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும் ஏறியப் போகிறேன்’ என்பதாகும். இந்தப் பின்னணியில் இயேசு கிறிஸ்து தம் ஆவியை பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுத்து சிலுவையில் மரித்து ஜீவனை விட்டது இங்கே கவனிக்கப்பட வேண்டியது. (யோவான் 20:17)
இந்த வாத்தையை விளங்கிக்கொள்ள கிறிஸ்தவின் ஆவியைப் பற்றி மற்ற வேத பகுதிகள் சொல்லுகிறதை அடிப்படையாகக் கொண்டு 2 தன்மைகளை பார்ப்பது அவசியமாகிறது.
1. கிறிஸ்து தமது ஆவியை பிதாவினிடத்தில் ஒப்புக் கொடுத்தபோது விசுவாசிகளையும் இணைத்து பிதாவிடம் ஒப்புக்கொடுத்தார் என்பதை இந்த வார்த்தை வலியுறுத்திக் கூறுகிறது.
சங்கீதம் 31:5ல் கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக் கொண்டீர்; ஆகவே, என் ஆவியை உம் கையில் ஒப்புவிக்கிறேன் என்பது பக்தரின் வேண்டுகோள். விசுவாசிகள் நீர் என்னை மீட்டுக் கொண்டபடியால் என்னுடைய ஆவியை உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொல்லுவார்கள். நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடப்பண்ணுகிற தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார் என்று கிறிஸ்துவின் ஆவி, நம் ஆவியோடு இணைக்கப்பட்டுள்ளதை பவுல் கலா 4:6ல் குறிப்பிடுகிறார் விசுவாசிகளை விடுதலையோடு பிதாவைக் கூப்பிடும்படியான ஆசிர்வாதத்தை கிறிஸ்துவின் ஆவி கொடுத்திருக்கிறது. எனவே, இது கிறிஸ்துவின் மூலமாக பிதாவோடு நமக்குள்ள நித்திய ஐக்கியத்தின் அடையாளத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது எனலாம். கொலோசெயர் 1:19,20ல், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி பூலோகத்தில் உள்ளவைகள் பரலோகத்தில் உள்ளவைகள் யாவையும் அவர் மூலமாக தமக்கு ஒப்புரவாக்கி கொள்ளவும் அவருக்கு பிரியமாயிற்று. இது ஒரு நிச்சயமல்லவா?
மேலும், கிறிஸ்து இயேசுவின் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலை ஆக்கிற்று என்று கிறிஸ்துவின் ஆவியால் நமக்கு உண்டான மேன்மையை ரோமர் 8:2ல் படிக்கிறோம். இது கிறிஸ்து தமது ஆவியை ஒப்புக்கொடுத்ததால் ஏற்பட்ட விடுதலையின் அனுபவமாகும். நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும் ஏறிப் போகிறேன் என்று சொன்னது, விசுவாசிகளுடைய ஆவியையும் கிறிஸ்து பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுத்து இருக்கிறார் என்னும் உறுதித்தன்மையை காட்டுகிறது. (யோ.20:17) ஏனென்றால், அவர் சிலுவையில் சிந்தின இரத்தம் உடன்படிக்கையின் இரத்தத்தினாலாகிய ஐக்கியம் என்று வேதம் சொல்லுகிறது. எபி. 13:20.21 வசனங்களில், நித்திய உடன் படிக்கையினுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறி வரப்பண்ணின சமாதானத்தின் தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தம்முடைய கிரியையை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றி உங்களை ஆசீர்வதிப்பாராக என்று படிப்பது எவ்வளவு பெரிய மகிழ்ச்சியின் செய்தியாகும்! எனவேதான், விசுவாசிகளின் மரணம் சரீரப்பிரகாரமாக துக்கத்தை கொண்டு வருகிறதாயிருந்தாலும், கர்த்தரிடத்தில் இருப்போம் என்ற நிச்சயத்தை கொடுத்திருக்கிறபடியினால் இது பாக்கியமான அனுபவம் என்று சொல்லப்படுகிறது. கர்த்தருக்குள் மரித்தவர்கள், இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது என்ற சத்தம் வானத்திலிருந்து கேட்டதை நாம் வெளி 14:13ல் படிக்கிறோம். இங்கே, விசுவாசிகள் கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் என்று சொல்லப்படுவதை கூர்ந்து படிக்க வேண்டும். அதாவது, அவருடைய சிலுவை மரணத்தின் வாசனையோடு இணைக்கப்பட்டவர்கள், அவருடைய உயிர்த் தெழுதலாகிய ஐக்கியம் என்ற நிச்சயம் பெற்றவர்களாகின்றனர். ரோமர் 6:5 சொல்கிறது: கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல. அவருடைய ஆவியை பெற்றவர்கள் எந்த சக்தியும் பிரிக்க முடியாத ஐக்கியத்தை பெற்றவர்கள் என்று ரோமர் எட்டாம் அதிகாரம் முழுவதும் இரட்சிப்பின் நிச்சயத்தை சொல்லுகிற வகையில் பவுல் நினைவூட்டுகிறார். மேலும், இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரணத்தினின்று எழுப்பினவர் தம்முடைய ஆவியினாலே உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார் என்ற வாக்கைப் பற்றியும் இதே அதிகாரத்தில் சொல்லியுள்ளார். இப்படிப்பட்ட புத்திரசுவிகார ஆவியை பெற்ற அனுபவத்தை கிறிஸ்து தமது ஆவியை ஒப்புக் கொடுத்ததன் மூலமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.
2.கிறிஸ்து தம்முடைய ஆவியை பிதாவினிடத்தில் ஒப்புக் கொடுத்ததினால் நாம் இந்த உலகத்தில் பாடுகளையும் கஷ்டங்களையும் கடந்து வர முடியும் என்பதை இந்த வார்த்தை வலியுறுத்திக் கூறுகிறது:
1 பேதுரு 1:11ல் தீர்க்கதரிசிகளுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், பின்வரும் மகிமையையும் அறிவித்தார்கள் என்று சொல்லுகிற இடத்தில் பாடுகளில்லாமல் மகிமை இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவும் பாடுபட்டு சிலுவையை சகித்து, மரித்து தமது ஆவியை ஒப்புக்கொடுத்தார். அவருடைய ஆவியைப் பெற்ற நாமும் நம்முடைய ஆவி இப்பொழுது பாதுகாப்பாக இருக்கிறது என்ற நிச்சயத்தை பெறுகிறோம். பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; ஆனாலும், கிறிஸ்துவுடன் பாடுபட்டால் அப்படியாகும் என்பதுதான் நமக்கு கொடுக்கப்பட்ட அழைப்பாகும்.
பாடுகளை அனுபவிப்பது நமது விசுவாசத்திற்கு முரண்பாடல்லவே? ஏனெனில், கிறிஸ்துவும் சரீரத்தில் பாடுகளை அனுபவித்தார்; ஆனால், அவரது ஆவி முற்றிலும் கறைபடியாததாய் இருந்தது என்று சொல்லலாம். சரீரத்தைக் கொல்ல வல்லவர்களுக்கு பயப்படாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லும்போது, நமது சரீரத்தில் இந்த உலகில் பாடுகள் இருக்கும் என்பதை குறிப்பிட்டு சொல்வதாய் தானே ஏற்றுக் கொள்ள வேண்டும். முதல் இரத்த சாட்சியாகிய ஸ்தேவானின் சம்பவத்திலும் இது விளங்குகிறதல்லவா? அவனை கல்லெறிந்து கொல்ல யூதர்கள் விரைந்தபோது; என் ஆவியை ஏற்றுக் கொள்ளும் என்று கர்த்தரை தொழுது கொண்டு பார்க்கலாம். சரீரத்தின் பாடுகள் அவருக்கு ஒரு பெருட்டே அல்ல என்பதை இங்கு நமக்கு மாதிரியாய் ஸ்தேவான் காட்டிச் சென்றுள்ளார். தன் இரட்சகருடைய அடிச்சுவடை பின்பற்றி, ஸ்தேவானும் இவர்கள்மேல் இந்தப் பாவத்தை சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டு சொல்லி நித்திரை அடைந்தான். (அப்.7:59.60), கிறிஸ்துவின் முதல் வார்த்தையாகிய மன்னிப்பின் செய்தியும், கடைசி வார்த்தையான கிறிஸ்துவுக்குள்ளான வெற்றியின் முழக்கமே சிலுவை வீரனாகிய ஸ்தேவானின் வாழ்க்கை பாதையாகும். கிறிஸ்துவின் இலவசமான மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றவர்கள், சரீரப் பாடுகளுடன் தங்களது ஆவியை தேவனிடம் தினமும் ஒப்படைத்து வாழ்கிறவர்களாவர். கிறிஸ்துவும்: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்று நம்மை அழைத்திருக்கிறாரே!
‘லாசருவே, வெளியே வா! என்று உரத்த சத்தமாய் கூப்பிட்டவர். விசுவாசிகளின் ஆவியை நித்தியமாய் பிதாவிடம் பாதுகாப்பாக ஒப்புக்கொடுத்து, இவ்வுலகில் பாடுகளைக் சகித்தால் – அவரோடு கூட அரசாளும் பாக்கியத்தை சிலுவையில் முழுமையாக நிறைவேற்றினபடியால், சிலுவையைப் பற்றிய உபதேசம் எனக்கு தேவ பெலனாயிருக்கிறது என்று திடநம்பிக்கையோடு சொல்லலாமே? ஆமென்.
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.