சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:

     ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களை அனுப்பும் பொழுது, “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:19) என்று கட்டளையிட்டதை வேதத்தில் வாசிக்கிறோம். இங்கு தேவன் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அவர்களை சீஷராக்குங்கள் என்று சொல்லுகிறார். ஆகவே ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லுவதற்கும், சீஷன் என்று சொல்லுவதற்கும் வித்தியாசமில்லை. ஒரு சீஷன் தான் கிறிஸ்தவன், ஒரு கிறிஸ்தவன் தான் சீஷன். மேலும் அவர்களை எப்படி சீஷராக உருவாக்க வேண்டும் என்றும் வேதத்தில் சொல்லியிருப்பதைக் காணலாம். வேதத்தில் அநேகர் ஆண்டவரிடத்தில் வந்து உம்மை நான் பின்பற்றி வருகிறேன் என்ற சொன்னபொழுது, அவர்களை சரி வாருங்கள் என்று ஆண்டவர் சொல்லவில்லை. மாறாக, அவர் சொன்ன பதில் அவர்களை அதைரியப்படுத்தக்கூடிய விதத்தில் காணப்பட்டது. இதைப் பார்க்கும்பொழுது விந்தையான காரியமாகக் காணப்படுகின்றது. பொதுவாக இன்றைய சபைகளில் மறக்கப்பட்டு போன சத்தியம் சீஷத்துவம். அநேக சபைகள் இன்றைக்கு ஆட்களை சேர்க்க வேண்டும் என்று வெகு தீவிரமாய் செயல்படுகின்ற காரியமுண்டு. ஆனால் சீஷத்துவத்துக்குள் வழிநடத்தக் கூடிய சபைகள் அற்பசொற்பமே. அவ்விதமான சபைகளுக்கு ஜனங்கள் அதிகம் போவதில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் உம்மைப் பின்பற்றி உம் சீஷர்களாக வருகிறோம் என்று சொன்னவர்களிடத்தில், அவர் அதைரியப்படுத்தக்கூடிய விதத்தில் பதிலுரைத்தார். அவரிடத்தில் வந்தவர்களை அவர் தைரியப்படுத்தி, உற்சாகப்படுத்தி சீஷராக்கி இருந்தால் நலமாயிருக்குமே என்று நாம் நினைக்கலாம். ஆனால் தேவனுடைய பார்வையில் சீஷத்துவம் என்பது வித்தியாசமானது. சீஷத்துவம் என்பது நாம் நினைப்பதைவிட முற்றிலும் வேறுபட்டது. அந்த சீஷத்துவம் என்ன என்பதைப் பற்றி இந்த சிற்றேட்டில் பார்க்கலாம்.