1 தெசலோனிக்கேயர் 4:13-18

  1. அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.
  2. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
  3. கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
  4. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
  5. பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
  6. ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

“அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர் களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்” (1 தெச 4:13-18).

சபைகளில் கள்ளப்போதனை என்பது ஒரு புதிதான பிரச்சனையல்ல. அப்போஸ்தலரும் இந்தப் பிரச்சனையை சந்தித்தார்கள். சபையின் ஆரம்ப காலத்திலேயே போலி உபதேசங்களைச் செய்கிறவர்கள் எழும்பினார்கள். தெசலோனிக்கேய சபையிலேயும் இந்தக் காரியம் காணப்பட்டது. பொய்யான போதகர்கள் எழும்பி இயேசு கிறிஸ்து இரண்டாவது முறை ஏற்கனவே வந்துவிட்டார் என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்கள். ஏற்கனவே மரித்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையை தவற விட்டுவிட்டார்கள் என்று போதித்தார்கள். இந்தக் காரியமானது சபை மக்களை அதிக வருத்தத்திற்குள்ளாக்கியது. ஏற்கனவே மரித்தவர்கள் இயேசுகிறிஸ்துவை தவறவிட்டார்களா என்றும் அவர்களைக் குறித்த காரியமென்ன என்ற எண்ணம் எழும்பியது. அப்படியெனில் நாம் இனி அவர்களைக் காணப்போவதில்லையா என்று அவர்களின் இருதயத்தில் சோர்வும், தளர்வும், வருத்தமும் எழும்பிற்று. இந்தப் பிரச்சனையைப் பரிசுத்த பவுல் அந்த மக்களுக்கு சரிப்படுத்த வேண்டியதாக இருந்தது. இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை இதுவரைக்கும் நேரிடவில்லயென்றும், ஏற்கனவே மரித்தவர்கள் தேவனோடுக் கூட பரலோகத்திலிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து இரண்டாம் முறை வரும்போது அவரோடு கூட அவர்களும் வருவார்கள். அப்பொழுது நாமெல்லாரும் எழும்பி வானத்தில் அவரை சந்திப்போம். இயேசுகிறிஸ்து மறுபடியும் வரும்போது எல்லாரும் ஒன்றாக இணைக்கப்படுவார்கள். அவரின் இந்த இரண்டாம் வருகையின் போதனை பல காரணங்களினால் இன்று புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அநேக குழப்பங்களால் இந்தக் காரியங்கள் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் இந்த சத்தியத்தைக் குறித்து நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இது ஒரு அற்புதமான சத்தியம்.

கிறிஸ்துவின் முதலாம் வருகை:

இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து நாம் படிக்க வேண்டுமானால், அவரின் முதலாம் வருகையைக் குறித்து வாசிக்கவேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்துப் படிக்க இது நமக்கு பிரயோஜனமாக இருக்கும். அவரின் முதல் வருகையைக் குறித்த முதலாவது வாக்குத்தத்தம் ஆதியாகமம் 3:15 நாம் பார்க்கிறோம். ஆதாம் ஏவாள் பாவம் செய்தபொழுது, தேவனிடத்திலிருந்து தங்களை ஒளித்துக்கொண்டார்கள். தேவன் அவர்களை அழைத்து முதலாவது ஆதாமினிடத்தில் பேசினார். பிறகு ஏவாளிடத்திலும் பேசினார். பின்பு சர்ப்பத்தை சபித்தார். தேவன் ஆதாமினிடத்திலும் ஏவாளிடதிலும் கேள்விகளை கேட்டார். ஆனால் சர்ப்பத்தினிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஏனென்றால் மிருகத்திற்கு பேசும் தன்மையை அவர் அளிக்காததினால், அவர் கேள்வி கேட்கவில்லை. தேவன் அந்த சர்ப்பத்தின் மேல் நியாயத்தீர்ப்பைச் சொன்னார். இதன் மத்தியிலே ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. அது இரட்சிப்பின் வாக்குத்தத்தம், நம்பிக்கையின் வாக்குத்தத்தம். ஆண்டவர் வருவதற்கு ஏறக்குறைய 6000 ஆண்டுகளுக்கு முன்பாக இவை கொடுக்கப்பட்டது. அது என்னவென்றால், உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன், அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். அவர் அந்த சர்ப்பத்தைத் தோற்கடிக்கிறது மட்டுமல்லாமல் அதின் தலையை நசுக்குவேன் என்று சொல்லுகிறார். இந்த இடத்தில் சர்ப்பம் என்பது சாத்தானைக் குறிக்கிறது. தேவன் இதை சர்ப்பத்திடம் மட்டும் பேசவில்ல, சாத்தானிடமும் பேசினார். நீ செய்த இந்த காரியத்தை சரிபடுத்தும்படியாக ஒருவர் மறுபடியும் வரப்போகிறார் என்றும், வந்து உன் தலையை நசுக்குவார் என்றும் சொன்னார். இயேசுவின் வருகையைக் குறித்து முதலாவது கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் இது.

பழைய ஏற்பாட்டில், ஆபிரகாமுக்கும் மற்றவர்களுக்கும் அநேக வாக்குத்தத்தங்கள் மறுபடியும் கொடுக்கப்பட்டதை நாம் பார்க்கிறோம். ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம், நீ இந்த உலத்திலுள்ள எல்லாருக்கும் ஆசீர்வாதமாக இருப்பாய் என்பது. இது ஆபிரகாமுக்கு மாத்திரமல்ல ஆபிரகாமின் மூலமாய் வருகிறவரான இயேசுவை குறிக்கிறது. ஏசாயா புத்தகத்தில் இவ்விதமான வாக்குத்தத்தங்கள் கொடுக்கபட்டிருக்கிறது. ஏசாயா 4:14 “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்”. மத்தேயு 1:23 – இல் இவை மறுபடியும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏசாயா 9, 11 ஆம் அதிகாரங்களில் இதே வாக்குத்தத்தங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலை நாம் சுவிசேஷத்தில் பார்க்கிறோம். மத்தேயுவும், லூக்கவும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். கன்னிகையிடத்தில் பிறக்கும்படியான ஒருவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் பெத்லகேமில் பிறந்து நாசரேத்தில் வளர்க்கப்பட்டார். நசரேயன் என்று அழைக்கப்படுவார் என்று எழுதியது நிறைவேறிற்று. ஒரு காரியத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கலாத்தியர் 4:5 இல் பார்க்கும்பொழுது, “காலம் நிறைவேறின பொழுது தேவன் தம்முடைய குமாரனை நியாயப்பிரமணத்திற்கு கீழாக அனுப்பி, நியாயப்பிரமணத்திற்கு கீழ்ப்பட்டவர்களை விடுவிக்கும்படிக்கு அனுப்பபட்டார்”. இதில் முக்கியமான காரியத்தை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன். காலம் நிறைவேறின பொழுது இயேசு கிறிஸ்து முதலாவது இந்த உலகத்திற்கு வந்தார். இந்த காலம் என்பது தேவனுடைய காலம். யூதர்கள் மேசியாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். அவர் வருகைக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இஸ்ரவேலில் உள்ள எல்லா வாலிப ஸ்திரீகளும் மேசியாவின் தாயாக தாங்கள் இருப்போம் என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் 1000 ஆண்டுகள் கழிந்த பின்பு மேசியா வந்தார். அது தேவனுடைய சரியான வேளையாயிருந்தது. அவர் மனிதனுடைய வேளையில் வரவில்லை. எல்லாம் சரியாக இருந்தபொழுது இயேசுகிறிஸ்து வந்தார். அதாவது உலகமெங்கும் சுவிசேஷம் பரவும்படியான ஒரு சூழ்நிலையில் அவர் வந்தார்.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை:

இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து நாம் பார்க்கும்பொழுது இதே சத்தியத்தை நாம் பார்க்கிறோம். அதுவும் தேவனுடைய சரியான திட்டத்தின்படி, சரியான நேரத்தில் வரும். பிதாவின் அதிகாரத்தின்படி அவரின் இரண்டாம் வருகையைக்குறித்து பிதா திட்டமிட்டிருக்கிறார் என்பதை இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். ஆனால் அந்தக் காலத்தை குறித்து அவர் நமக்கு வெளிப்படுத்தவில்லை. ஆகவே அவர் வருகையைக் குறித்து கணக்கிட்டு வீணாகக் காலத்தை செலவிட அவசியமில்லை. ஆனால் அநேக மக்கள் இப்படி செய்து, அநேக புத்தகங்களையும் எழுதுகிறார்கள். பிரசங்கங்களைப் பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து வரும்படியாக ஒரு காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார்கள். அவர்கள் கணிப்பு எல்லோமே தவறாகப் போகிறதை நாம் பார்க்கிறோம்.

இயேசுகிறிஸ்து தெளிவான ஒரு வாக்குத்தத்தை கொடுத்தார். யோவான் 14:3 அவருடைய சீஷரிடத்தில் சொன்னார், “நான் போவேனென்றால் மறுபடியும் வருவேன்” என்றார். இயேசுகிறிஸ்து தான் இவ்வுலகத்தை விட்டு போவதைக்குறித்து தம்முடைய சீஷரிடத்தில் பேசுகிறார். அவர்கள் குழப்பமடைந்து மனம் சோர்ந்து போனார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களுக்கு சொன்னது, உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, நான் மறுபடியும் வரப்போகிறேன். இப்பொழுது நான் உங்களை விட்டுப் போவது உங்களுக்கு நல்லது. நான் திரும்பவும் வருவேன் என்று உங்களுக்கு வாக்குச்சொல்லுகிறேன் என்றார். இயேசு இவ்வுலகத்தை விட்டுப் போவது பிதாவிடம் போவதற்கு மாத்திரமல்ல, இதில் அவருடைய மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவை அடங்கியதாக இருக்கிறது. ஆகவே தான், நான் இவ்விடத்தை விட்டு போவது உங்களுக்கு நல்லது என்று சொன்னார்.

நற்செய்தி என்பது அவர் நமது பாவங்களுக்காக மரித்து, நம்முடைய இரட்சிப்புக்காக அவர் மறுபடியும் எழும்பப்போகிறார். அவர் போன பின்பு பரிசுத்த ஆவியை நம்மிடத்தில் அனுப்பப்போகிறார். ஆகவே அவர் போவது நல்லது. ஆனால் அவருடைய வாக்குத்தத்தம் ‘நான் மறுபடியுமாக வர போகிறேன்’ என்பதே. மத்தேயு 24, 25 அதிகாரங்களில் இயேசுகிறிஸ்து அவருடைய வருகையைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் தெளிவாகப் பேசியுள்ளார். இந்த அதிகாரங்களை நாம் வாசிக்கும் போது தெளிவாக வாசிக்க வேண்டும். ஏனென்றால் இதில் இயேசுகிறிஸ்து 3 கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். ஒரு சில பதில்கள் ஆலயம் அழிக்கப்படுவதைக் குறித்தும், சில காரியங்கள் நடந்ததைக் குறித்தும், சில காரியங்கள் அவரின் இரண்டாம் வருகையைக் குறித்த பதில்களும் காணப்படுகிறது. வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை ஆண்டவர் யோவான் மூலமாகக் கொடுத்தார். இந்த புத்தகம் ஆண்டவருடைய இரண்டாம் வருகையைக் குறித்து தெளிவாய் காண்பிக்கிறது. அவர் மறுபடியும் வரும்போது வெற்றிச்சிறப்பதைக் குறித்துக் காண்பிக்கிறது. 1தெசலோனிக்கேயர் 4:13 முதல் 5:4 வரை, 2தெசலோனிக்கேயர் 1:3 முதல் 2:12 வரை. மற்றும் 2பேதுரு 3ஆம் அதிகாரம் முழுவதும்.

அப்போஸ்தல நடபடிகள் 1:11 இல் இயேசு தம்முடைய சீஷர்களுடன் கூடியிருக்கையில், ஏறக்குறைய 500 பேர்கள் இருக்கையில், அவர் அவர்களோடு பேசி முடித்த பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். சீஷர்கள் மேலே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கே இரண்டு தூதர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் அவர்களைப் பார்த்து “கலிலேயரே நீங்கள் ஏன் வானத்தை நோக்கி பார்த்து நின்றுக்கொண்டிருக்கிறீர்கள்? இந்த இயேசு கிறிஸ்து உங்களிடத்தில் எடுத்துகொள்ளப்பட்டத்தைப் போலவே மறுபடியும் உங்களிடத்தில் திரும்ப வருவார்” என்றனர். இங்குச் சொல்லப்பட்டதை கவனமாகப் பார்த்தால், இயேசுகிறிஸ்து முதலாவது ஒரு உதவியற்ற குழந்தையாக வந்தார். நம்முடைய பாவங்களுக்காக மரிக்கும்படியாக வந்தார். இரண்டாவது முறை அவர் குழந்தையாக வரப்போவதில்லை. அவர் ராஜாதி ராஜாவாக கர்த்தாதி கர்த்தராக வரப் போகிறார். அவர் எப்படி பரலோகத்திற்கு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டரோ, அப்படியே அவர் மீண்டும் வரப்போகிறார். நாம் எல்லாருமே அவரைப் பார்க்கப்போகிறோம். வேதம் அதை தெளிவாகச் சொல்லுகிறது. வேதம் ஒரு போதும் ஒழிந்து போவதில்லை என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். அவரின் வாகுத்தத்தம் உறுதியாயிருக்கிறது. அது நிறைவேற எவ்வளவு காலம் ஆனாலும் சரி, அது ஒரு போதும் ஒழிந்துபோவதில்லை. ஏனென்றால் தேவன் பொய் சொல்லுகிறவர் அல்ல. மத்தேயு 24:35 இல் “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” என்று சொல்லுகிறார். இயேசு கிறிஸ்து தம்முடைய இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசுகையில் இந்த வார்த்தையைக் கூறினார். அவர் முதலாவது வந்தபொழுது பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற வந்தார். அவர் இரண்டாம் முறை வரும்பொழுதும் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுபவராகவே வருவார்.

ஒருவரும் அந்த நாளை அறியார்கள்:

நாம் முன்பு பார்த்தபடியே பிதா, இரண்டாம் வருகையின் நாளை ஏற்கனவே தீர்மானித்து விட்டார். மேலும் மத்தேயு 24:36 அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள் என்று சொல்லுகிறார். ஏன் இயேசுவும் அந்த நாளைக் குறித்து அறியவில்லை என்கிறார்? ஏனென்றால் அவர் அப்பொழுது தன்னை ஒரு முழுமையான மனிதனாக வெளிப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை ஒரு ஆச்சரியமான காரியமாக இருக்கும். அதற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். அபோஸ்தலனாகிய பவுல் 1தெசலோனிக்கேயர் 5:2 “இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்” என்று சொல்லுகிறார். 2பேதுரு 3:10 “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்” என்று பார்க்கிறோம். திருடன் எப்போதும் சொல்லிவிட்டு வருவதில்லை. அவன் வருவதைக் குறித்து யாரும் அறியக்கூடாது என்று எண்ணுவான். இயேசுகிறிஸ்து திருடனைப் போல ஒருவரும் அறியாத வேளையிலே வருவார். “அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல என்றார்” (அப் 1:6,7). இயேசு அவர்களிடத்தில் சொன்னது என்னவென்றால், கர்த்தருடைய இரகசியம் அவருக்கே உரியதாயிருக்கிறது. அவைகளைக் குறித்து அறிவது உங்களுடைய காரியமல்ல என்றார். உபாகமம் 29:29-ல் மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள் என்று எழுதியிருக்கிறது. இரகசியங்கள் இரகசியங்களாகவே இருக்கும்.

இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக் குறித்து நம்முடைய பங்கு என்னவாக இருக்கவேண்டும்?

1. ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து வாழ்வது நம்முடைய அக்கறையாக இருக்க வேண்டும்.

2. சுவிசேஷப் பணியில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்வது அவசியமானதாகும். அப்போஸ்தலர் 1:7 -ஆம் வசனத்தில், நீங்கள் ஆண்டவருடைய இரகசியங்களைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்றும், 8 -ஆம் வசனத்திலே இவைகளை பார்த்து உங்கள் நேரங்களை வீணாக்காமல், சுவிஷேசத்தை பரப்பும்படியாக இருப்பது முக்கியமான காரியம் என்றும், நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்கவேண்டும் என்றும், நீங்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும் ஊழியத்தை செய்ய வேண்டும் என்றும், உலகத்தின் கடைசிமட்டும் நீங்கள் போய் சுவிஷேசத்தை பிரசங்கிக்க வேண்டும் என்றும் சொன்னார். இதுவே உங்கள் பணியாக இருக்கிறது என்றார். எப்பொழுது இயேசு வருவார் என்று நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க தேவையில்லை. சுவிஷேசத்தை பரப்பும்படியாக அக்கறையுள்ளவர்களாய் செயல்பட வேண்டும்.

3. நீங்கள் ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். இயேசுகிறிஸ்து நாம் எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

மத்தேயு 24:42 உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். நாம் எப்பொழுதும் ஆயத்தமாகவும் விழித்திருக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். பிரசங்கி ஒருவர் ஒரு பலகையிலே “ஒருவேளை இன்றாக இருக்கலாம்” என்று எழுதி வைத்திருந்தார். இது ஆண்டவரகிய இயேசுகிறிஸ்து இன்றைக்கும் வரலாம் என்ற ஒரு சிறிய அடையாளமாக அது இருந்தது. நாம் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். மத்தேயு 24:44 -வது வசனத்தில் “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்”. பத்து கன்னிகைகள் குறித்து அவர் பேசும் போது, ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் ஆயத்தமாயிருந்தார்கள் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். ஆனால் ஆயத்தமில்லாத மற்ற கன்னிகைகள் சேர்த்துக்கொள்ளப் படவில்லை. ஆதலால் மத்தேயு 25:13 இல் “மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்” என்று சொல்லுகிறார். ஆயத்தமாயிராதவர்கள் கைவிடப்படுவார்கள். லூக்கா 12:39, 40 -ல்“திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள் அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” என்றார். ஆகவே இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு நாம் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.

அடையாளங்கள்:

அவரின் வருகை எந்த நேரத்திலும் இருக்கும் என்று வேதம் சொல்லுகிறது. மத்தேயு 24, 25 இல் இயேசு கிறிஸ்து தான் மறுபடியும் வரப்போகிறத்தைக் குறித்து அநேக அடையாளங்களைச் சொன்னார். இவை ஒரு கர்ப்பவேதனை போல் இருக்கிறது. கர்ப்பவேதனை வரும்பொழுது ஒரு குழந்தைப் பிறப்பதற்கான அடையாளமாக இருக்கிறது. ஆனால் அந்த கர்ப்பவேதனை என்பது பிறப்பல்ல. அது அடையாளம் மட்டுமே. இந்த கர்ப்பவேதனை கடந்த 2000 ஆண்டுகளாக இருக்கிறது. இந்த உலகத்திலே அநேக காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இவை இயேசுகிறிஸ்து மறுபடியும் வரப்போகிறார் என்று நமக்கு உணர்த்துகிறது. நீங்கள் சரித்திரத்தைப் பார்க்கும்பொழுது, நடைபெறும் நிகழ்வுகள் மிகக் கடுமையாக காணப்படுகிறது. இயேசுகிறிஸ்துவின் வருகை மிக நெருக்கமாக இருக்கிறது என்று நமக்கு காண்பிக்கிறது. கர்ப்பவேதனை அதிகமாக வர வர குழந்தை பிறப்பதும் நெருக்கமாக வருகிறது. இந்த காலங்களில் அநேகர், சில அடையாளங்களைக் காண்பித்து இயேசுகிறிஸ்து இப்பொழுது வரப்போகிறார் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தை சொல்லி அப்போது வரப்போகிறார் என்ற சொல்லுவார்கள். ஆனால் இயேசுகிறிஸ்து தம் வருகைக்கு அடையாளமாக ஒரு காரியத்தை மட்டும் குறிப்பிட்டு சொல்லுகிறார். அது மத்தேயு 24:30, 31 இல் சொல்லப்பட்டிருகிறது. “அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். (31)வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்”. இந்த அடையாளங்கள் காணப்படும் போது அவர் ஏற்கனவே வந்துவிட்டார் என்று அர்த்தம். அப்போது தாமதம் என்பது இல்லை. அந்த அடையாளம் வரும்போது எல்லா மக்களும் அதை காண்பார்கள். உடனே எல்லா மக்களும் இயேசுகிறிஸ்து வந்துவிட்டார் என்று அறிந்து கொள்வார்கள்.

வெளிப்படுத்தல் 6ஆம் அதிகாரத்தில் பார்க்கும்பொழுது, இந்த அடையாளங்களைப் பார்க்கும் மக்கள் ஆயத்தமில்லாத போது, அங்குமிங்கும் ஓடி மலைகளையும் பாறைகளையும் தங்கள் மீது விழும்படிக் கதறுவார்கள். ஏனென்றால் இப்போது காலதாமதம் ஆகிவிட்டது, அவர்களோ இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக இல்லை. இதை விளங்கிக்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு அடையாளமென்ன? அவரையே இங்குப் பார்ப்பீர்கள். அவர் இன்னும் தூரமாக அல்ல, நமக்கு மிக அருகில் வந்திருக்கிறார். பவுல் சொல்லுகிறார், பிரதான தூதரின் எக்காள சத்தத்தைக் கேட்கும்பொழுது, வானத்தை நோக்கிப் பாருங்கள். ஏனென்றால் ராஜா வரப்போகிறார். மிகுந்த சத்தத்தோடும், சந்தோஷத்தோடும் எக்காள தொனியோடும், அவரின் வருகை அறிக்கைசெய்யப்படும். அதை நீங்கள் கேட்கும்பொழுது இயேசுகிறிஸ்து இங்கு வந்துவிட்டார் என்று அறிந்துகொள்வீர்கள். நீங்கள் அப்போது ஆயத்தமாக இல்லையென்றால், உங்களுக்கு வேறே தருணம் கொடுக்கப்படாது. முற்றிலும் கால தாமதமாகிவிடும். அவர் இந்த உலகத்தில் வந்ததும் எல்லாம் முடிந்து விடும். ஒருவேளை மக்கள் இது மனதிரும்புதலின் நேரம் என்பார்கள். ஆனால் வேதம் அவ்வாறு நமக்கு போதிக்கவில்லை. ஏதேன் தோட்டத்தில் நடந்ததுபோல, தேவனின் சத்தத்தை கேட்டு எவ்வாறு ஆதாமும் ஏவாளும் தங்களை ஒளித்துக் கொண்டார்களோ அப்படியே இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்துவிட்டார் என்ற செய்தி அறிவிக்கப்படும் பொழுது, ஆயத்தமில்லாதவர்கள் ஓடி ஒளித்துக்கொள்ள பார்ப்பார்கள்.

வேதம் தெளிவாகச் சொல்லுகிறது:

இயேசுகிறிஸ்து வரும்பொழுது இரண்டு காரியங்கள் நடைபெறும். 1. அவர் அவருடைய மக்களுக்காக வருகிறார். அவருக்கு சொந்தமானவர்கள் அவரால் இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அவர்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, இரண்டாவது காரியம் நடைபெறும். 2. தேவனுடைய பயங்கரமான அக்கினி ஊற்றப்பட்டு எல்லாவற்றையும் அழித்துவிடுவார். 2தெசலோனிகேயர் 1:7,8-ல் “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்”.

இவை நமக்கு என்ன காண்பிக்கிறது? நியாயத்தீரப்பு வருகிறதை வெளிப்படுத்துகிறது. 2பேதுரு 3:7, 10, 12 “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது, கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்”. இயேசுகிறிஸ்து தன் இரண்டாவது வருகையின் போது நியாயத்தீர்ப்போடு வருவார் என்று வேதம் தெளிவாக நமக்குச் சொல்லுகிறது. அவர் தமது மக்களுக்கு இரட்சிப்பை கொண்டுவருகிறார். ஆனால் அவரை புறக்கணித்தவர்களுக்கு நியாயத்தீர்ப்பைக் கொண்டு வருகிறார். அந்த நாளில் தப்பித்துக் கொள்ளும்படி வழியென்பது இல்லை.

தவறான போதகர்களின் பிரச்சனை:

இயேசுகிறிஸ்து இப்படியான பொய்யான போதகர்களை வஞ்சகர்கள் என்று சொல்லுகிறார். அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள், ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லியிருக்கிறார். மத்தேயு 24:11, 24-ல் “அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்” என்று சொல்லுகிறார். 2தெசலோனிகேயர் 2:9 “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், வருவார்கள்” என்று பவுல் சொல்லுகிறார். இந்த நாட்களில் அநேகர் தங்களை தீர்க்கதரிசி என்றும் அப்போஸ்தலர் என்றும் சொல்லிக்கொள்ளுகிறார்கள். ஆனால் இயேசு அவர்களை பொய்யான தீர்க்கதரிசிகள் என்றும், பொய்யான அப்போஸ்தலர்கள் என்றும் சொல்லுகிறார். அவர்கள் அற்புதங்கள் செய்வதாக தங்களைக் காண்பிக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் அறுப்புதங்களை செய்வதில்லை. அவர்களால் அற்புதங்களை செய்ய முடியாது. அவர்கள் தாங்கள் அற்புதங்களைச் செய்கிறோம் என்று சொன்னாலும், அதை செய்வதற்கு அவர்களுக்கு வல்லமையில்லை. அவர்கள் நாங்கள் சுகமளிக்கிறவர்கள் என்று சொல்லுவார்களானால், அவர்கள் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கு இருக்கும் மக்களை சுகபடுத்தட்டும். குஷ்டரோகிகள் மத்தியில் சென்று கிறிஸ்து செய்ததைப் போல அவர்களை தொட்டு சுகப்படுத்தட்டும். ஆனால் அவர்களால் அதை செய்ய முடியாது. அவர்கள் பொய்யைப் பேசுகிறார்கள். அநேக மக்கள் அவர்களை பின்பற்றுகிறார்கள். ஏனென்றால் மக்கள் அடையாளங்களைத்தான் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பொய்யான தீர்க்கதரிசிகளும், போலியான அப்போஸ்தலர்களும் சாதாரணமானவர்கள் அல்ல, அவர்கள் சாத்தனுடைய தூதர்களாய் இருகிறார்கள். சாத்தானின் வல்லமையினால் தரிப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பெற்றிருக்கும் வல்லமை தேவனுடையது என்பார்கள். நீங்கள் அற்புதங்களை எதிர்பார்த்து, வரும்படியான தீர்க்கதரிசிகளை எதிர்பார்த்து இருப்பீர்களானால், நீங்கள் வஞ்சிக்கப்படுவீர்கள்.

ஒன்றைத் தெளிவாக அறிந்துக்கொள்ளுங்கள். வேதம் தெளிவாக சொல்லுகிறது, இனிமேல் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் கிடையாது. வேதத்தில் இரண்டு பணிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்று போதகர்கள் மற்றொன்று உதவியாளர்கள். ஆனால் இந்த உலகம் பொய்யான தீர்க்கதரிசிகளுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் ஆயத்தமாயிருக்கிறது. ஏனென்றால் மக்கள் அவர்களைத் தேடிப் போய்கொண்டிருக்கிறார்கள். பெந்தகோஸ்தே சபைகளை பார்ப்பீர்களானால் அங்கு மக்கள் நிரம்பியிருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் அற்புதங்களை விரும்புகிறார்கள். ஆனால் ஒருநாள் வரும்பொழுது, மனிதர்கள் வந்து, பிசாசுகளின் வல்லமைகளைக் கொண்டு மக்களை வஞ்சிக்கதக்க அநேக அற்புதங்களை செய்வார்கள். அவைகள் உண்மையான அற்புதங்கள் போலவே இருக்கும். உங்களுடைய வாழ்க்கை தேவனுடைய வார்த்தையின் மேல் கட்டப்பட வில்லை யென்றால், நீங்களும் வஞ்சிக்கப்படுவீர்கள். அற்புதங்கள் அடையாளங்களைப் பார்த்து நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்களானால், நீங்கள் வஞ்சிக்கப்படுவீர்கள். ஆகவே 2தெசலோனிகேயர் 2:4 -ல் “அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்” என்று பவுல் நம்மை எச்சரிக்கிறார். மக்கள் ஏமாற்றப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் அதற்கு தங்கள் மனதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்கள். அதை அவர்கள் நம்புகிறார்கள். நீங்கள் மக்களை எச்சரிக்கவேண்டும், எனினும் அவர்கள் அதற்கு செவிகொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களை திருப்தி செய்யக்கூடிய காரியங்களை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சரித்திரத்தில் நாம் பார்த்திருக்கிறோம், சில பொய்யான தீர்க்கதரிசிகள் எழும்பி இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாட்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு முறை கி.பி 500 -ல் அவர் வருகை இருக்கும் என்று சொன்னார்கள். பல நூற்றாண்டுகளில், அநேகர் எழும்பி நாட்களை குறித்திருக்கிறார்கள். ஏழாம் நாள் கொள்கைகாரர்கள், யேகோவா சாட்சிக்கார்கள் என எழும்பி அவரின் வருகையின் நாட்களை குறிக்கிறார்கள். முதலாம் உலகப் போருக்கு பின்னர் இவ்விதமான காரியம் அதிகமாகக் காணப்பட்டது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் இஸ்ரவேல் தேசமாக ஆன பின்பு, இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாட்களை குறிக்கும் காரியம் இன்னும் அதிகமாக காணப்பட்டது. 1970 இல், இந்த காரியம் தீவிரம் அடைந்தது. அநேக மக்கள் பலவிதமான கணக்குகளை செய்கிறார்கள். அநேக புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளது. ஒருவர் 1988 இல் வருவார் என்றார். இவ்விதமாக பலர் எழும்பி பல காலங்களை சொல்லி 1989, 1994, 1995, 2010 போன்ற காலங்களில் வருவார் என்று சொன்னார்கள். இப்போது 2020 மேலாக அவர் வருவார் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் எல்லாருமே தவறாய் சொன்னார்கள். இனிமேலும் தவறாகவே சொல்லுவார்கள். ஏனென்றால் இயேசுகிறிஸ்துவின் வருகை எப்போது என்று யாருக்குமே தெரியாது என்பதே உண்மை. பிதா ஒருவரே அதை அறிவார். இவ்விதமாக அவரின் வருகையைக் குறிக்கும் காரியத்தினால் பரியாசக்காரர்களுக்கு ஒரு இடமாக காணப்படுகிறது. 2பேதுரு 3:3, 4 “முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே” என்று சொல்லுவார்கள்.

நாம் இப்பொழுது எவ்விதமாக செயல்படுவது? அவரின் இரண்டாம் வருகைக்கு அமைதியாக இருக்க வேண்டுமா?

இந்த உலகத்தில் நடக்கும் பல காரியத்தின் மத்தியில், பரியாசக்காரர்கள் மத்தியில், பொய்யான அப்போஸ்தலர் போதகர்கள் மத்தியில், நாட்களைக் குறிப்பவர்கள் மத்தியில் நாம் என்ன செய்ய வேண்டும்? அமைதியாக இருக்க வேண்டுமா? அதற்கு பதில், நாம் இவைகளைப் பார்த்து அமைதியாக இருக்க கூடாது என்பதே. நாம் அமைதியாக இருக்கவும் முடியாது, ஏனென்றால் இயேசுகிறிஸ்துவும் அமைதியாக இருக்கவில்லை. அவர் தாம் திரும்ப வரப்போகிறேன் என்பதை அவர் தெளிவாய் சொல்லியிருந்தார். அப்போஸ்தலர்களும் அமைதியாக இருக்கவில்லை. அந்நாட்களில் அவர்களும் பொய்யான போதகர்களை எதிர்கொள்ள வேண்டியதாயிருந்தது. அப்போஸ்தலர்கள் அவர்களை எதிர்த்து, இயேசுகிறிஸ்துவின் வருகையைக் குறித்து தெளிவாய் பேசினார்கள். ஆகவே நாம் அமைதியாக இருக்க முடியாது. ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, கிறிஸ்தவர்களுக்கு நடக்கும்படியான முக்கியமான செய்தியாக இருக்கிறது. இந்த உலகத்தில் நாம் வாழும்படியான கடைசிகட்டமாக இது இருக்கிறது. நம்முடைய பாடுகளுக்கு கடைசியான காலம் இது. உபத்திரவம், இரத்தசாட்சிகளாக மரிப்பது, பாவத்தோடு போராட்டம், வியாதிகள் வருத்தங்கள் மரணங்கள். இவைகள் எல்லாம் இயேசுகிறிஸ்து வரும் போது முற்றிலும் தீர்க்கப்பட்டுவிடும்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:1-5:

“பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்”.

இங்கு அவர் சொன்னதை கவனித்து பாருங்கள். இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்று சொல்லுகிறார். ஆகவே நாம் அமைதியாக இருக்கக் கூடாது. ஏனென்றால் அவரின் இரண்டாம் வருகை குறித்து, இவை கிறிஸ்தவர்களுக்கு வாக்குத்தத்தமும் ஆறுதலுமான ஒரு செய்தி. 1 தெசலோனிகேயர் 4:18 வசனத்தில் பவுல், “ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்” என்று சொல்லுகிறார். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை ஒரு நம்பிக்கையின் செய்தியாய் இருக்கிறது. இது கிறிஸ்தவர்களுக்கும் உலகத்துக்கும் தேவை. தீத்து 2:13, 14 இல்” நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்”. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை உங்களுக்கு நம்பிக்கையின் எதிர்பார்ப்பாக இருக்கிறதா? உங்கள் பாவத்திலிருந்து விடுதலைபெற்ற ஒரு நம்பிக்கை இருக்கிறதா?. இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தால் உங்கள் பாவத்திலிருந்து விடுதலை அடைந்திருக்கிறீர்களா?

இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நீங்கள் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?

இந்த உலகத்தில்மேல் வரும் பயங்கரமான நியாயத்தீர்ப்புக்கு நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா? ஆமோஸ் 4:12 இல், “உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு” என்று வேதம் சொல்லுகிறது. தேவன் மறுபடியும் வரப்போகிறார். அவரை சந்திக்க நீ ஆயத்தமாயிருக்கிறாயா? கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படும் முதல் கேள்வி நீங்கள் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? 2பேதுரு 3:10, 11, 14 “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்”. இவைகள் அழிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கையில், நாம் எவ்விதமாக காணப்பட வேண்டும்? பரிசுத்த நடக்கையிலும், தெய்வ பக்தியிலும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். பேதுரு சொல்லுகிறார், இயேசு கிறிஸ்து வரும்போது, இந்த உலகத்தில் எல்லாமே அழிக்கப்பட்டுவிடும். ஆகவே நாம் தெய்வ பக்தியுள்ளவர்களாகவும், பரிசுத்தமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். தெய்வபக்தி என்றால், நாம் தேவனை ஆராதிக்கிறவர்களாக இருக்க வேண்டும். பரிசுத்தம் என்பது தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ்வதே. “ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்” என்று பேதுரு சொல்லுகிறார். அவருடைய வருகைக்கு ஆயத்தமாயிருங்கள். ஆனால் நீங்கள் இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்றால் உங்களை ஒன்று கேட்கிறேன், இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நீ ஆயத்தமாய் இருக்கிறாயா? நாம் தெளிவாய் பார்த்திருக்கிறோம், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது, அதுவே முடிவாயிருக்கும். மறுபடியும் மனந்திரும்புதல் என்பது இல்லை. இயேசுவை நம்புகிறேன் என்று சொல்லும்படியான காரியம் அப்போது இருக்காது. பத்து கன்னிகைகள் குறித்த உவமைகளை நினைத்துக்கொள்ளுங்கள். மணவாளன் வந்தபொழுது, 5 புத்தியுள்ள கன்னிகைகள் உள்ளே பிரவேசித்தார்கள். அப்போது கதவு அடைக்கப்பட்டது. எக்காள சத்தம் கேட்டவுடனே, கதவு மூடப்படும். அந்த நாளிலே பூமியின்மேலே நியாயத்தீர்ப்பு வரும்.

நாம் எவ்வாறு ஆயத்தமாக இருப்பது?

இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாகும் நேரம் இப்பொழுதுதான். இன்றே இரட்சணிய நாள் என்று வேதம் சொல்லுகிறது. அவரை இன்றே விசுவாசியுங்கள். உங்களுடைய பாவங்களுக்காக இன்றே மனந்திரும்புங்கள். பாவத்தை விட்டு தேவனிடத்தில் திரும்புங்கள். அவர் உங்களை இரட்சிக்கும்படிக்கு உங்கள் நம்பிகையை அவர் மேல் வையுங்கள். மத்தேயு 24, 25 அதிகாரங்களில் அவரின் இரண்டாம் வருகையைக் குறித்தும், கடைசி நியாயத்தீர்ப்பைக் குறித்தும் பேசிவிட்டு, 25 அதிகாரத்தின் கடைசி பகுதியில், இரட்சிக்கபடாதவர்களுக்கு இரண்டு வாக்குத்தத்தைச் சொல்லுகிறார். மத்தேயு 25:41 ஆம் வசனத்தில் நித்திய நரகத்தைக் குறித்து சொல்லுகிறார். 46 வசனத்தில் நித்திய தண்டனையைப் பற்றி சொல்லுகிறார். நரகம் இல்லை என்று சொல்லுகிறவர்கள், அல்லது நரகம் ஒரு குறிபிட்ட காலம் வரைக்கும் என்று சொல்லுகிறவர்கள் உண்டு. ஆனால் இயேசு கிறிஸ்து அப்படி சொல்லவில்லை. அவர் நரகம் உண்டு என்பதை சொல்லியிருக்கிறார். ஏனென்றால் அவரே நரகத்தை உண்டாக்கினார். முதலாவது பிசாசுக்கும் அவனின் தூதர்களுக்கும் ஆயதப்படுத்தினார். இரட்சிப்பு நித்தியமானதைப் போல நரகமும் நித்தியமானது. நாம் இயேசு கிறிஸ்து சொன்னதை விசுவாசிக்கிறோம். நரகத்தில் தப்பும்படியான வழி இல்லை. நீங்கள் தப்பும்படியான வழி இப்போது மட்டும் தான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நம்புங்கள். இரட்சிப்பு அவரின் மூலமாக நமக்கு இலவசமாக கொடுக்கபட்டிருக்கிறது. நீங்கள் அதற்கான கிரயத்தை செலுத்த முடியாது. நீங்கள் செய்ய வேண்டிய காரியம் உங்கள் கரத்தை நீட்டி அதைப் பெற்றுகொள்ளுங்கள். நீங்கள் இப்போதே அப்படிச் செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நீங்கள் கிறிஸ்தவனாக இருந்தால் சந்தோஷப்படுங்கள். உன் இரட்சகர் மறுபடியும் வரப்போகிறார். அது எப்பொழுது என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் இப்போது அவருடைய மகிமைக்காக வாழுங்கள். மேலான குறிக்கோளோடே வாழுங்கள். நீங்கள் ஒருவேளை மரித்தும் அவர் வராமல் இருக்கலாம், பவுல் சொன்னப்படி நீங்கள் கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருக்கும்படிக்கு இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கு முன்பாக நீங்கள் முந்திக்கொள்ளலாம். ஆனால் நம்பிக்கையோடு வாழுங்கள். அவர் முதலாவது வந்தது போலவே மறுபடியும் வரப்போகிறார்.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா ? Are you born again ?

யோவான் எழுதின சுவிசேஷம் மூன்றாவது...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.