ஜனவரி 5              பரிசுத்தம்          லேவி 22:17-33

“நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்” (லேவி 22:32).

      தேவன் தம்முடைய மக்களை பரிசுத்தப்படுத்துகிறவராக இருக்கிறார். மேலும் அவர்களிடத்தில் பரிசுத்தத்தை எதிர்பார்க்கிறவராக இருக்கிறார். பரிசுத்தத்தை நாடுவது ஒரு கிறிஸ்தவனின் அதிமுக்கியமான குணாதிசயமாகும். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது. தேவன்: “இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்” (யாத் 19:5-6). நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்தமில்லாமல் ஒருபோதும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கமாட்டார்.

      அதே வசனத்தில் தேவன்: “என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக” (லேவி 22:32) என்று சொல்லுகிறார். கிறிஸ்தவர்கள் பரிசுத்தமில்லாமல் வாழும் பொழுது தேவனுடைய பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தகுலைச்சலாக்குகிறார்கள். மேலும் தேவன்: “நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்” (லேவி 22:32) என்று சொல்லுகிறார். வாழுகிற இந்நாட்களில் ‘நாம் அதிக பக்தி உள்ளவர்கள்’ என்று எண்ணிக் கொண்டாலும் “பரிசுத்தம்” இல்லையென்றால் கர்த்தர் நம்மேல் பிரியமாயிரார். நாம் தேவனுடைய நாமத்தை பரிசுத்தகுலைச்சல் செய்கிறவர்களாகக் காணப்படுவோம். ஆகவே நாம் பரிசுத்ததுடன் வாழ்ந்து தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவோமாக.