கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 17          எறும்பினிடத்தில் ஞானத்தைக் கற்றுக்கொள்ளுதல்         நீதி 6:1-11

“சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய்,

அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்” (நீதி 6:6).

       ஞானத்தை நாம் கற்றுக்கொள்ளும்படியாக பெரிய ஞானியை வைக்கவில்லை. எறும்பை வைத்திருக்கிறார். நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார். எறும்பினுடைய ஞானத்தைப் பார். எறும்பு சரியான காலங்களில் தனக்குத் தேவையான தானியங்களைச் சேர்த்து வைப்பதுண்டு. அந்த தானியங்களை சேர்க்கும்போது, அவைகள் முளைக்காமல் இருக்க விதையின் அந்தப்பகுதியைக் கடித்துவிட்டு, பத்திரமாய் சேர்க்கும். தேவன் படைத்த அந்த சிறிய எறும்பினிடத்தில் எவ்வளவு பெரிய ஞானம் உள்ளது என்பதைப் பாருங்கள்.

      அருமையான சகோதர, சகோதரியே இன்றைக்கு நாம் ஆவிக்குரிய சோம்பேறியாக இருக்கிறோமா? இன்றைக்கு அநேகர் ஆவிக்குரிய சோம்பேறியாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய மெய்யான ஆசீர்வாதத்தைப் பார்க்க முடிவதில்லை. நீதிமொழிகள் 6:9 –ல் “சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?” என்று வேதம் கடிந்து கொள்ளுகிறது. வேதம் சொல்லுகிறது அதிகாலையில் தேவனை தேட வேண்டும் என்று. ஆனால் அநேகர் படுக்கையிலிருந்து எழும்புவதை விரும்புவது கிடையாது. இன்றைக்கு எத்தனையோ வாலிபர்களும் அவ்விதம் இருக்கிறார்கள்.

    ஆகவே நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் கர்த்தருக்குரிய காரியங்களில் விழிப்பாய் காணப்படுவது நல்லது. நீ சோம்பேறியாக இருக்கும்பொழுது அநேக காரியங்களை விரும்பலாம், ஆனால் அது உனக்கு கிடைக்காது என்று வேதம் சொல்லுகிறது. “சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்” (நீதி 6:4). நண்பர்களே! நமக்கு ஆவிக்குரிய ஜாக்கிரதை தேவை. மேலும் வேதம் சொல்லுகிறது, “சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை” (நீதி 15:19). உன்னுடைய வாழ்வில் நீ சோம்பேறியாய் இருக்கும்போது, உன் வாழ்க்கை கரடுமுரடான முள்வேலிக்கு சமம். விழித்திரு. தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்.