(மத்தேயு 7 : 7)
மத் 7 : 1 – 12
1. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
2. ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
3. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
4. இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
5. மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
6. பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
7. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;
8. ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
9. உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
10. மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா?
11. ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
12. ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
ஆண்டவராகிய இயேசு இந்த மலை பிரசங்கத்தில் அநேக ஆவிக்குரிய முத்துக்களை அள்ளித்தருகிறார். அவைகளில் ஒன்று ஜெபத்தைபற்றினது. ஜெபம் எவ்வளவு முக்கியமானது என்று வேதத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் எல்லோரும் அறிந்திருக்கிறது என்னவென்றால் ஜெபம் சாதாரணமான காரியமல்ல. அது அற்பமானதோ, சுலபமானதோ அல்ல, உண்மைதான். நம்முடைய இருதயம் தேவன் பேரில் வாஞ்சையாக இருக்கும்பொழுது ஜெபம் தானாக நம் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும் ஊற்றைப்போல் இருக்கும். நீரானது புரண்டு வருவதுபோல் பிரவாகித்து ஓடும். ஆனால் எல்லா சமையங்களிலும் அவ்விதம் இருக்கும் என்று சொல்லமுடியாது. அநேக சமையங்களில் ஜெபிக்க சுயாதீனமற்றவர்களாய் காணப்படுவோம். ஜெபிக்க விரும்பினாலும் பல தடைகள், இருதயத்தில் கலக்கம், அமைதியின்மை, சாத்தானின் தாக்குதல் என்று பலவிதமான இடற்பாடுகள் எழும்புவதும் உண்டு.
மேலே சொல்லப்பட்ட வசனத்தில் மூன்று விதங்களைப் பார்க்கிறோம் ஒன்று கேட்பது இதற்கு அதிகமான பிரயாசம் தேவையில்லை. அடுத்து தேடுவது, இதில் முந்தையதைக் காட்டிலும் அதிகமான பிரயாசம் தேவை. மூன்றாவதாக தட்டுவது, இதற்கு இன்னும் கொஞ்சம் அதிகமான பிரயாசம் தேவைப்படுகிறது. அதாவது முதல் விதத்தில் பார்க்கும்போது ஜெபிப்பது உணக்கு சுலபமாக இருக்கும். ஜெபத்தின் ஆவியை தடையில்லாமல் கொண்டிருப்பாய். அப்பொழுது நீ ஜெபிப்பது அதிக கஷ்டமாயிருக்காது. அடுத்தது கொஞ்சம் சிரமமெடுத்து நீ ஜெபிக்கவேண்டும். இந்த வேளையில் ஜெபம் சுலமாக வராது. ஜெபிக்கும் சுயாதீனமானது அதிகம் இல்லாமல் இருக்கும், இந்த வேளையில் நீ ஜெபிக்கமுடியவில்லை என்று ஜெபத்தை விட்டு விடாமல் இன்னும் கொஞ்சம் பிரயாசம் எடுத்து ஜெபிக்க வேண்டும். மூன்றாவதாக ஜெபிக்கவே முடியாது போல இருக்கும். அப்பொழுது நீ பலமாய் ஜெபக் கதவை தட்டவேண்டும். வலுவாய் நின்று ஜெபிக்கவேண்டும் அப்போது நீ வெற்றி பெறுவாய். அநேகர் இந்த விதங்களில் ஜெபிக்காததால் ஜெபவாழ்க்கையில் தோல்வியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.