“தேவபக்திகேதுவாக முயற்சிபண்ணு.” ( 1 தீமோ 4:7)

சீர்திருத்தத்தின்  ஐந்நூறாம் நூற்றாண்டை கொண்டாடுகிற  இவ்வேளையில், ​​இது  சம்பந்தமாக உருவாக்கிய அனைத்து ஆக்கங்கள், கட்டுரைகள், புத்தகங்கள்,கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றைக் கொண்டு, சீர்திருத்தம் எதைப் பற்றியது என்று கேட்பது மிகவும் அவசியமானது.  பிரதானமாக, விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்குதல் அல்லது இரட்சிப்பின் கோட்பாடுகளை குறித்து சிலர் சொல்லலாம். இன்னும் சிலர், வேதப்பூர்வமான ஆராதனை அல்லது கத்தோலிக்க மத போதனைக்கு எதிராக வேத அதிகாரத்தை குறித்து பேசலாம்.

சீர்திருத்தத்தைக்குறித்து நாம் அடிக்கடி மறந்து விடும் ஒரு காரியம் என்னவென்றால், “இருதய சீர்திருத்தத்தின் எழுப்புதல்.” (revival of a reformation of the heart) அல்லது ஜோன் கால்வின் கூறும் சொற்றொடர், biblical pietas (piety), வேதபூர்வ பக்தி. இந்த காரியம், குறிப்பாக சீர்திருத்தவாதிகளின் வாழ்விலும், அவர்களுடைய இறையியலிலும், பின்னால் எழும்பின தூய்மைவாதிகளின் வாழ்விலும் காணப்பட்டது. இந்த சிறிய ஆக்கத்தில், இருதயத்திலிருந்து வரும் பக்திக்கேதுவாக அல்லது “தேவ பக்திக்கேதுவாக”முயற்சிபண்ணு  (1 தீமோ 4:7) அதாவது வேதத்திற்கு ஒப்புக்கொடுத்து, ஐந்து முக்கியமான கிருபைகளை வளர்த்துக்கொள்வதை கால்வின் குறிப்பிடுகிறார். முதலாவது, கால்வின், பக்தியை (piety) குறித்து என்ன சொல்லுகிறார் என்று பார்த்து விட்டு, பிறகு அந்த ஐந்து முக்கியமான கிருபைகளை நாம் பார்த்து முடிப்போம்.

கால்வினை பொறுத்தவரைபக்தி என்பது இருதய சீர்திருத்தத்தின் மையத்தில் உள்ளது. இது கிறிஸ்தவ வாழ்வின் இருதயமாக இருக்கிறது.

கால்வின் கூறும் இருதய பக்தி  

Pietas(piety),  பக்தியானது, கால்வினுடைய பிரதானமான போதனைகளில் ஒன்றாய் இருந்தது. இது, கடவுள் பக்கமாக காண்பிக்கும் மனிதனுடைய சரியான இருதய பூர்வமான நடக்கையை காட்டுகிறது. மேலும் இது, உண்மையான அறிவு, இருதயப்பூர்வமான ஆராதனை, இரட்சிக்கும் விசுவாசம், தெய்வ பயம், ஒப்புக்கொடுக்கப்பட்ட ஜெபம் மற்றும் மரியாதைக்குரிய அன்பு போன்றவற்றை உள்ளடக்கியதாய் இருக்கிறது. கடவுள் யாராய் இருக்கிறார், எப்படியாய் இருக்கிறார் என்பதை குறித்ததான அறிவானது, சரியான விதத்தில் கடவுளண்டை நடப்பதும், அவருக்கு பிரியமான நடக்கையை கொண்டிருப்பதுமான வழியில் நடத்துகிறதாயும், காண்பிக்கிறதாயும் இருக்கிறது.(தெய்வ பக்தி). கால்வின் எழுதுகிறார், “நான் பக்தியை தேவ அன்போடு இணைக்கப்பட்ட கனத்துக்குரிய பக்தியாக அழைக்கிறேன். அது அவருடைய நன்மைகளைப் பற்றிய அறிவைத் தூண்டுகிறது”

கடவுள்மீதுள்ள இந்த அன்பும் பயபக்தியும் அவரைப் பற்றிய எந்தவொரு அறிவிற்கும் தேவையானதும், வாழ்க்கை முழுவதும் இடம்பெற செய்கிறதாய் இருக்கிறது. கால்வினை பொறுத்த வரையில், “கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கை முழுவதும், தேவ பக்திக்கேதுவான பயிற்சியை கொண்ட அவசியமான காரியமாய் இருக்கிறது.” என்று கூறுகிறார்.

கால்வின், இங்கே கூறுகிறார், ஒரு தெய்வ பக்தி கொண்டுள்ள மனுஷன், தேவனுடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் வாழ்கிறவனாய் இருக்கிறான். அவன் தேவனில் மகிழ்கிறான் ஏனென்றால் தேவன் மகிழ்ச்சியுள்ளவராய் இருக்கிறார். தேவ பக்தி என்பது, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும், நடக்கை, ஐக்கியம், இருதயத்திலிருந்து வரும் தேவனை ஆராதிக்கும்படியான விஷயமாய் இருக்கிறது. ஆம், இருதயமானது, கட்டுப்பாடின்றி, எப்பொழுதும்,தொடர்ச்சியாகவும், உற்சாகமாகவும் தேவன் பேரில் அன்பும், பயபக்தியும் கொள்ள வாஞ்சிக்கிறது.

கால்வின் கூறுகிறார், 1 தீமோத்தேயு 4: 7-ல் பவுலைப் பொறுத்தவரை, பக்தி என்பது தெய்வபக்தி, மற்றும் தெய்வபக்தி என்பது பக்தி – இவை இரண்டும் கடவுளைப் பற்றிய பயத்திற்கு ஒத்தவை. பழைய ஏற்பாட்டில் பக்திக்கான முக்கிய விளக்கமான சொற்றொடர் “கர்த்தருக்குப் பயப்படுவது”, புதிய ஏற்பாட்டில் “தெய்வபக்தி” என்று ஒருவர் கூறலாம். சுவாரஸ்யமாக, 1 தீமோத்தேயு 4: 7-ல் கால்வின் செய்த பிரசங்கத்தில், கால்வின், “கடவுளுக்கு பயப்படுகிற பயத்தில் பயிற்சி பண்ணு.” என்று மொழிபெயர்க்கிறார்.  பக்தி, தெய்வபக்தி மற்றும் கடவுள் பயம் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பயிற்சி செய்ய வேண்டும் என்று தீமோத்தேயுவும் கால்வினும் வலியுறுத்துகின்றனர்.  இது தீமோத்தேயுவின் “சரியான, முக்கியமான அக்கறை மற்றும் பிரதானமான கரிசனையாய்” இருக்கிறது. வெளிப்ரகாரமான மதம் சார்ந்த சடங்குகளோ, துறவறம் போன்ற கடுமையான செயல்களோ, அல்லது உடற்பயிற்சி உட்பட எந்தவொரு மதச்சார்பற்ற செயலோ உண்மையான பக்திக்கு உண்டான இடத்தை ஆக்கிரமிக்காது. பவுல் தீமோத்தேயுவிடம் கூறுகிறதை கால்வின் இவ்விதமாக சொல்லி முடிக்கிறார், “அர்த்தமில்லாத அனேக காரியங்களுக்காய், நீங்கள் உழைத்து, சோர்வடைய அவசியமில்லை. உங்கள் வைராக்கியத்துடனும் திறமையுடனும் நீங்கள் தெய்வபக்திக்கு மட்டும் உங்களை அர்ப்பணித்தால், மிகப் பெரிய காரியங்களை செய்வீர்கள்.”

நினைவில் கொள்ளுங்கள், பவுல், தொடர்ந்து, தீமோத்தேயுவிடம் 8 வது வசனத்தில் பக்தி, தெய்வபக்தி மற்றும் கடவுளுக்குப் பயப்படுவது “எல்லாவற்றிற்கும் பிரயோஜனமுள்ளது” என்று கூறுகிறார். இந்த சொற்றொடரில், கால்வின் எழுதுகிறார்: “இதன் பொருள் தெய்வபக்தி கொண்ட மனிதனுக்கு எந்த குறைவும்  இல்லை. . . . தெய்வபக்தி [அல்லது பக்தி] என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஆரம்பம், மையம் மற்றும் முடிவாய் இருக்கிறது. எங்கு அது நிறைவாய் இருக்கிறதோ, அங்கு  குறைவு எதுவும் இல்லை. . . . ஆகவே, நாம் தெய்வபக்தியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் ஏனென்றால் அதை விட கடவுள் நம்மிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறார்.”

கால்வின் 1 தீமோத்தேயு 4: 7-ல் தனது பிரசங்கத்தில்,  இருதய சீர்திருத்தத்தின் நோக்கமானது, உண்மையான பக்தி, மற்றும் கடவுளைப் பற்றிய பயம், அத்துடன் முழு கிறிஸ்தவ வாழ்க்கை இவை அனைத்தும் நம் மத்தியில் கடவுளை கனப்படுத்தும்படியான பயபக்தியை கொண்டுள்ளது. ஒரே வார்த்தையில் சொல்லுவோமானால், நம்முடைய ஒரே குறிக்கோள் தேவனை மகிமைப்படுத்துவதே. அதாவது, இப்பிரபஞ்சத்தின் கட்டமைப்பிலும், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் பிரகாசிக்கும் கடவுளுடைய குணங்களை ஒப்புக்கொள்வதும், அவைகளை உயர்த்திபிடிப்பதில் அடங்கி இருக்கிறது.  கடவுளை மகிமைப்படுத்துவது, என்பது  ஒவ்வொரு உண்மையான பக்தியுள்ள மனிதனின்  தனிப்பட்ட இரட்சிப்பை தாண்டிய செயலாய் இருக்கிறது. கால்வின் கூற்றுப்படி, ஒவ்வொரு பக்தியுள்ள மனுஷன் சொல்லுவது, “நாங்கள் தேவனுடையவர்கள்: ஆகவே அவருக்காக வாழ்வோம், அவருக்காக மரிப்போம். நாங்கள் தேவனுடையவர்கள்: ஆகவே, எங்களுடைய எல்லா நடக்கைகள் அனைத்தும் அவருடைய ஞானம், சித்தம் ஆளுகை செய்யட்டும். நாங்கள் தேவனுடையவர்கள்: ஆகவே, வாழ்வின் அனைத்து பகுதிகளும், அவரை மட்டுமே மகிமைபடுத்துகிற நோக்கத்தோடு பிரயாசப்படட்டும்.”

ஆனால் நாம் கடவுளை எவ்வாறு மகிமைப்படுத்துகிறோம்? கால்வின் எழுதினார், “தேவன் நம்மூலமாய் மகிமைப்படும்படியான ஒரு வழியை நமக்கு எழுதிகொடுத்துள்ளர். அதுவே அவருடைய வார்த்தையின் கீழ்ப்படிதலில் அடங்கியுள்ள பக்தி. இந்த எல்லைகளை மீறி செயல்படுகிற அனைவரும் தேவனை  மதிக்காதவராயும் மாறாக அவரை அவமதிப்பவர்களாயும் இருப்பர்.”

பக்தியை குறித்ததான ஐந்து முக்கிய கிருபைகள்

கால்வினைப் பொறுத்தவரை, இத்தகைய பக்தி இருதய சீர்திருத்தத்தின் மையத்தில் உள்ளது. இது கிறிஸ்தவ வாழ்வின் இதயம் போன்றது. அதே போல் தொடக்கமும் முடிவும் ஆகும். இத்தகைய பக்தி கடைப்பிடிக்கப்பட வேண்டியதாயும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதாயும், தேவனுடைய வார்த்தைக்கு அடிபணிந்து வாழ வேண்டியதாயும் இருக்கிறது. இது கால்வின் அவர்களுக்கு, அன்றாட கிறிஸ்தவ வாழ்வின் பல நடைமுறை காரியங்கள் உள்ளடக்கியதாய் இருந்தாலும், இதயத்திலிருந்து வெளிவரும், ஜெபம், மனந்திரும்புதல், சுயத்தை வெறுத்தல், சிலுவை சுமத்தல் மற்றும் கீழ்படிதல் ஆகிய ஐந்து முக்கியமான கிருபைகளை வலியுறுத்திய பக்தியாய் இருந்தது. என்றைக்கு ஒருவர் இருதயத்தின் உண்மையான சீர்திருத்தத்தை அனுபவிக்கிறாரோ, இந்த கிருபையின் பகுதிகள் எதிலும் குறைவுடன் இருக்க முடியாது.                                                                                                                                                                                                   

ஜெபம்

முதலாவது, கால்வின் கூறுகிறார், இருதயப்பூர்வமான ஜெபம், பக்திக்குரிய வாழ்விற்கு பிரதானமான அம்சமாயும், தொடர்ச்சியான விசுவாச வாழ்விற்கு அடிப்படையாய் இருக்கிறது.  விசுவாசி கடவுளைத் துதித்து, அவருடைய மாறாத உண்மை தன்மையை அண்டிக்கொள்ளும்போது, ஜெபமானது, தேவனுடைய கிருபையை கான்பிக்கிறதாய் இருக்கிறது. மேலும் பொதுவான ஜெபமும், தனிப்பட்ட ஜெபமும் பக்தியை வெளிப்படுத்துகிறதாய் இருக்கிறது.

மனந்திரும்புதல்

ஜெபமானது,  கிறிஸ்துவோடு நெருங்கி ஜீவியம் பண்ணவும், ஐக்கியப்படவும், நம்மை வைப்பதினால், இதிலே நாம் உறுதியாய் தரித்திருக்கவும், அதை ஒழுங்காய், தவறாமல் கடைபிடிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். ஜெபமானது, தேவனுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள வழியாய் இருக்கிறது. இவ்வழியின் மூலமாக மட்டுமே, ஒரு கிறிஸ்தவன், தேவனுக்கு மகிமையும், துதியையும் ஏறெடுக்கிறவனாயும், அவருடைய வார்த்தைக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய உதவியை பெறுகிறவனாய் இருக்கிறான்.

இரண்டாவதாக, உண்மையான மனந்திரும்புதல், ஜெபம் மற்றும் விசுவாசத்திற்குண்டான கனியாய் இருக்கிறது. லூத்தர், தன்னுடைய 95 கட்டுரையில், கிறிஸ்தவ வாழ்வின் அனைத்து பகுதியிலும், மனந்திரும்புதல் முக்கிய அம்சமாக காணப்பட வேண்டும் என்று சொல்லுகிறார். கால்வின் கூட, மனந்திரும்புதல், வாழ்க்கை முழுவதுமே காணப்படும் காரியம். அது மாத்திரமல்ல, இருதய சீர்திருத்தத்திற்கு மிக முக்கியமான அம்சமாய் இருக்கிறது என்று சொல்லுகிறார். ஆம், மனந்திரும்புதல், வெறும் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பம் மாத்திரமல்ல, இது கிறிஸ்த்தவ வாழ்க்கையாகவே இருக்கிறது. இதில், பாவத்தை அறிக்கை செய்கிற காரியமும், பரிசுத்தத்தில் வளருகிற காரியமும் உள்ளடக்கியதாய் இருக்கிறது. மனந்திரும்புதலானது, ஒரு விசுவாசி, அவனுடைய வாழ்க்கை முழுவதும் சுவிசேஷத்திற்கு செவிசாய்க்கும் வண்ணமாக, அவனுடைய மனதிலும், இருதயத்திலும், நடத்தையிலும், சித்தத்திலும், வாழ்விலும் காணப்படுகிறது.

சுயத்தை வெறுத்தல்

மூன்றாவதாக, கடவுள் மையமாக கொண்ட சுய-வெறுப்பு, தியாகத்தோடுகூடிய பக்தி வாழ்க்கையாய் இருக்கிறது. உண்மையான பக்தி, கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட விசுவாசியின் வாழ்க்கையில் ஆழமாய் பதிந்த ஒன்றாகும். அப்படியான இணைக்கப்பட்ட வாழ்வில் காணப்படும் கனி, சுயத்தை வெறுத்தல் ஆகும். இதை குறித்து கால்வின் மூன்று முக்கியமான காரியங்களை வலியுறுத்தி பேசுகிறார். முதலாவது, நாம் வாழுகிற நம்முடைய வாழ்க்கை, நம்முடையது அல்ல, முற்றிலுமாய் கடவுளுடையது என்ற உணர்வு. அவருடைய வார்த்தையின்படி, நாம் அவருக்காக வாழ்கிறோம், மரிக்கிறோம். இரண்டாவதாக, சுயத்தை வெறுத்தல் என்பது, நம்முடைய வாழ்க்கை முழுவதும் ஆண்டவரை பிரியப்படுத்துகிற நோக்கத்தை கொண்டுள்ளதாய் இருக்கிறது. சுயத்தை வெறுத்தல் என்பது, சுயத்தை நேசிக்கிறதற்கு எதிரான காரியம். ஏனென்றால், இது நமக்கு மேலாக தேவன் மேல் அன்பு கூறுகிற காரியமாய் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முழுவதும் தேவனை நோக்கியே இருக்க வேண்டும். மூன்றாவதாக,சுயத்தை வெறுத்தல் என்பது, ஜீவ பலியாக, நம்மையும், நம்முடையது எல்லாவற்றையும் அவருக்காக முழுமையாய் ஒப்புக்கொடுத்து வாழ்வதே ஆகும். அப்பொழுது, மற்றவர்களை நாம், நம்மைகாட்டிலும், அன்பு செலுத்துவோம், மதிப்போம். அவர்களை அப்படிப்பட்டவர்களாகவே பார்க்காதபடி, அவர்களுக்குள்ளும், தேவ சாயலை கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அவர்கள் மீது அன்பு செலுத்துவோம்.

சிலுவை சுமத்தல்.

நான்காவதாக, சுயத்தை வெறுத்தல், ஒரு பக்கம், நம்முடைய உள்ளான வாழ்க்கையில், கிறிஸ்துவுக்கு ஒப்பாகுதலை வலியுறுத்தி சொல்லும்போது, மறுபக்கம், கிறிஸ்துவைப்போல சிலுவையை சுமத்தலானது, கிறிஸ்துவுக்கு ஒப்பான வெளிப்புற வாழ்க்கையை காட்டுகிறது. கால்வின், யாரெல்லாம் கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருக்கிறார்களோ, அவர்கள் தங்களை தாங்களே பல விதமான தீமைகள் நிறைந்த, பாடுகள், கஷ்டங்கள் கொண்ட வாழ்க்கைக்காக ஆயத்தப்பட வேண்டும் என்று கற்பிக்கிறார். இதற்கு காரணம், இந்த வீழ்ந்து போன உலகத்தில் உள்ள பாவத்தின் பாதிப்பினால் மட்டுமல்ல, விசுவாசி கிறிஸ்துவோடு கொண்டுள்ள ஐக்கியத்தினாலும் ஆகும். இயேசுவானவருடைய வாழ்க்கையும் தொடர்ச்சியான பாடுகள் கொண்டதால், நம்முடைய வாழ்க்கையும் அதற்கு விதி விலக்கு அல்ல. இந்த காரியத்தில் நாம் பார்ப்பது என்னவென்றால், நாம் அவருடைய சிலுவை மரணத்தினால் உண்டாகும் பிராயச்சித்த பலியில் நாமும் பங்கடைவது மாத்திரமல்ல, ஆவியானவரின் பணியாகிய கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாய் மாற்றப்படுவதற்கும் பங்கடைகிறோம். இந்த வழியில்தான், சிலுவை சுமத்தல், நம்முடைய பக்தியை சோதிக்கிறது. சிலுவை சுமத்தல் என்ற பாதையின்  வழியாக, நாம் நம்பிக்கையில் எழும்புகிறவர்களாயும், பொறுமையில் கற்றுக்கொள்ளுகிறவர்களாயும், கீழ்படிதலில் பயிலுகிறவர்களாயும், பெருமையில் சிட்சிக்கப்படுகிறவர்களாயும் காணப்படுவோம்.

கீழ்படிதல்

கால்வின் கூற்றுப்படி, பக்திக்கு மிக அவசியமான ஒன்று, தேவனுடைய சித்தத்திற்கு நிபந்தனையற்ற கீழ்படிதல் ஆகும். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிதல் என்பது, நம்முடைய பாவத்திற்குண்டான மன்னிப்பை கிறிஸ்துவில் பெறுவதும், அவருடைய வார்த்தையில் அவரை அறிவதும், அன்பான இருதயத்தோடு அவரை சேவிப்பதும், அவர் காண்பித்த நன்மைக்கு நன்றியாக, நற்செயல்களை செய்வதும், நம்முடைய எதிராளிகளை அன்பு காட்டும் நோக்கத்தோடு, நம்முடைய சுயத்தை வெறுப்பதுமே கீழ்படிதல் ஆகும். இவ்விதமான காரியம், அவருடைய வார்த்தைக்கும், அவருடைய சித்தத்திற்கும், அவருக்கே முழுமையாய் ஒப்புக்கொடுக்கிறதில் உள்ளடங்கியிருக்கிறது. கால்வின், தான் வைத்திருந்த முத்திரையில் பதிக்கப்பட்ட வார்த்தை, “ஓ தேவனே! என் இருதயத்தை உண்மையும், உத்தமத்தோடும் உமக்கே அர்பணிக்கிறேன்.” இதுதான் உண்மையான பக்திக்குரிய ஆசையும், அடையாளமும். பக்தி என்பது அன்பு, சுதந்திரம், மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றோடு இணைக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தைக்கும், சித்தத்திற்கும் கீழடங்கிப்போகிற காரியமாயிருக்கிறது. அன்பு ஒன்றே தேவ பக்தியை சட்டவாதத்திற்கு சிதைத்துவிடாதபடி காத்துக்கொள்ளுகிறது.

கால்வினை பொறுத்த வரையில், ஜெபம், மனந்திரும்புதல், சுயத்தை வெறுத்தல், சிலுவை சுமத்தல், மற்றும் கீழ்படிதல் போன்ற அனைத்தும் கவனமாக கையாளப்படும் பொழுது உண்மையான பக்தியின் இருதயத்துடிப்பை சரியாக வைத்துக்கொள்ளலாம்.

முடிவுரை

 இருதய சீர்திருத்தத்தின் பக்தியை கடைபிடிக்கும் விஷயத்தில்  தீமோதேயுவுக்கும், அந்நாட்களில் இருந்த சபைகளுக்கும் பவுலுடைய பிரதானமான கட்டளையாக  இருந்தது. ஆம், இது இந்நாட்களிலும் மிக மிக அவசியமான ஒன்றாய் இருக்கிறது. நாம் இவ்விதமான பக்தியை அனுதினமும் வேதம் போதிக்கும் ஆரோக்கியமான உபதேசத்தின் அடிப்படையிலும், ஜீவனுள்ள வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவின் பரிகார பலியின் அடிப்படையிலும் ஆவியானவரின் கிருபையினால் பயிற்சி செய்ய வேண்டும்.  இது நம்முடைய பலத்தினால் கூடாததும், நாம் அனுதினமும் போராட வேண்டியதாகவும் இருக்கிறது.  தொடர்ச்சியாக ஆண்டவராகிய இயேசுவை நோக்கிப்பார்த்தும், மேலே கண்ட ஐந்து கிருபைகளை கவனமாய் கையாளும்போது, நாம் ஆண்டவருக்கு நன்றியுள்ளவர்களாயும், இப்படியான உண்மையான பக்தியிலே தொடர்ந்து முன்னேறி செல்பவர்களாய் இருப்போம்.

கால்வின், தன்னுடைய பக்திக்குரிய வாழ்க்கை வாழுவதில் மிகவும் பிரயாசப்பட்டார். இயேசு கிறிஸ்துவில், அவருடைய கிருபையும், நன்மையையும் ருசி பார்த்த அவர், ஒவ்வொரு நாளும், தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில், தன்னுடைய இருதயத்திலிருந்து தேவனுடைய சித்தத்தை அறிவதும், அதின்படி செய்வதுமான பக்திக்குரிய வாழ்வை கொண்டிருந்தார். அவருடைய இறையியல் பணி அனைத்துமே கிறிஸ்துவை மையமாக கொண்ட இருதய சீர்திருத்தத்தை கொண்டதாய் இருந்தது. இவ்விதமான இருதய சீர்திருத்தத்தை கொண்ட பக்தியே சபையையும், சமுதாயத்தையும், உலகத்தையும் மிகவும் ஆழமாய் பாதித்தது. தேவன் தாமே இவ்விதமான ஆசீர்வாதத்தை இன்றைக்கு நமக்கும், உலகலாவிய சபைக்கும் தந்தருள்வாராக.

Download PDF