“தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்” (சங்கீதம் 51:4).

நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு பாவமும் தேவனுக்கு விரோதமானது. அது சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். ஆனால் அது தேவனுக்கு விரோதமான பாவம். நாம் நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் காணப்படுவோமானால், அவருக்கு விரோதமாக பாவம் செய்கிறவர்களாக எவ்விதமாக வாழ முடியும்? நம்முடைய ஒவ்வொரு பாவமும் அவருடைய அன்புள்ள இருதயத்தை வேதனைப் படுத்துகிறது. இந்த உணர்வை நாம் அநேக வேளைகளில் கொண்டிருப்பதில்லை. ஆகவே நாம் துணிகரமாகவும் பாவம் செய்கிறோம். பாவம் செய்யும்போது எனக்கும் தேவனுக்கும் இருக்கும் உறவை அது பாதிக்கின்றது. நம்முடைய வாழ்க்கையில் நாம் பாவம் செய்வதற்குப் பயப்பட வேண்டும். தேவனுக்கு முன்பாக நம்மை குற்றமுள்ளவர்களாக நிறுத்தும்படியானவைகள் எதுவாக இருந்தாலும் அவைகளை நாம் உதறித்தள்ளி, பாவத்தை விட்டு விலகி ஓடுகிறவர்களாகக் காணப்பட வேண்டும். நாம் ஆண்டவருக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி? தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்தேன் என்று தாவீது சொல்லுகிறான். நாம் செய்யும் எந்தப் பாவமும் தேவனுக்கு விரோதமானது. இது எவ்வளவு ஒரு ஆபத்தான நிலை என்பதை நாம் விளங்கிக்கொள்வது அவசியம். தேவன் தாமே நம்மை அந்த நிலைக்கு விலக்கி காப்பாராக.