உயிர்தெழுதல் | ஏப்ரல் :25
‘என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை
அழிவை காணவொட்டீர்’
(சங்கீதம் 16 : 10)
வேத பகுதி | சங்கீதம் 16 :1 – 11
2. என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்,
3. பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.
4. அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
5. கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
6. நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.
7. எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.
8. கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
9. ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.
10. என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.
11. ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. சங்கீதம் 16 :1 – 11
ஆண்டவராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலை இந்த வசனம் குறிக்கிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல் சுவிசேஷத்தின் மையமாக இருக்கிறது. ‘கிறிஸ்து எழுந்திருக்கவிலயென்றால், என் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா’ 1 கொரிந்தியர் 15 : 14) என்று பவுல் சொல்லுகிறார். உயிர்த்தெழுதல் என்பது அசாதாரணமான காரியம். எந்த வல்லமையினாலும் எந்த மனிதனாலும், எந்த விஞ்ஞானத்தினாலும் இது செய்யப்பட முடியாது. மரித்துப் போனது, ஜீவன் பெற்று எழுவது தேவனால் மாத்திரமே முடியும். இதே உயிர்தெழுதலின் வல்லமைதான் ஒரு மனிதனின் இரட்சிப்பிலும் செயல்படுகிறது. ‘இயேசு நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்’ (யோவான் 11 : 25)
ஆதாம், ஏவாளை தேவன் உருவாக்கி நீ இந்தக்கனியை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்றார். அப்படியே அவர்கள் அந்தக் கனியை புசித்தப்போது உடனடியாக அதே இடத்தில் விழுந்து செத்துவிட்டார்களா? இல்லை. அப்படியானால் தேவன் சொன்ன சாகவே சாவாய் என்பதின் அர்த்தம் என்ன? ஆம்! அவர்கள் தேவனுக்கு கீழ்படியாமல் போனபோது அவர்கள் ஆத்துமாவில் மரித்துப்போனார்கள். தேவனோடு கொண்டிருக்கும் தொடர்புக்கு மரித்தவர்களானார்கள். தேவனோடு உள்ள உறவு துண்டிக்கப்பட்டது. ஒரு மனிதன் சரீரத்தில் மரிக்கும்போது அவனுடைய உயிரானது சரீரத்திலிருந்து பிரிந்து, அவன் உலகத்திற்கு மரித்தவனாயிருக்கிறானோ அவ்விதமே அவன் ஆத்துமாவில் நித்திய ராஜ்யத்திற்கும் மரித்துப்போனான். சரீரத்திலும் மரணத்தின் செயல்பாடு ஆரம்பமாயிற்று. அதுவே சரீர மரணத்தை உண்டாக்குகிறது.
இவ்விதமாக மரித்துப்போன ஆத்துமாவில் தமது பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு தேவன் ஜீவனுக்குள் கொண்டு வருகிறார். ஆகவேதான் தேவனுடைய வார்த்தை ‘அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்பித்தார்’ எபேசியர் 2 : 1) என்று சொல்லுகிறது. ஆகவே இரட்சிக்கப்படுகிற ஒவ்வொரு மனிதனிலும் இந்த ஆவியின் உயிர்த்தெழுதல் தான் மறுபிறப்பு என்றும் அழைக்கப்படுகிறது. உன்னில் இந்த உயிர்த்தெழுதல் நடைபெற்றிருக்கிறதா?
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.