கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 1                                           மனவிருப்பம்                                         சங் 21 : 1 – 13

அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தை தள்ளாதிருக்கிறீர்’. (சங் 21 : 2)

            மனவிருப்பம் என்பது எல்லா மனிதர்களும் பெற்றிருப்பது. அது பலவிதமானது. ஆனால் இங்கு தேவனுடைய பிள்ளைகளின் மனவிருப்பத்தைக் குறித்துச் சொல்லப் படுகிறது. இதைக்குறித்து நாம் தெளிவாய் அறிந்திருத்தல் அவசியமானது. இன்றைக்கு அநேக ஊழியர்கள், வீடுகளில் சென்று ‘கர்த்தர் உன் மன விருப்பத்தின்படி தந்தருளுவாராக’ என்று ஜெபிப்பதும், ஆசீர்வதிப்பதும் சகஜமாய்க் காணப்படுகிறது.

            தேவ பிள்ளைகளின் மனதில் ஏற்படும் விருப்பங்கள் எல்லாம் எப்போதும் சரியானதாக இருக்குமா? நாம் அப்படி சொல்லமுடியாது. அது நம்முடைய ஆவிக்குரிய நிலையைப் பொறுத்தும் இருக்கிறது. அது ஒரு வேளை மாம்சத்துக் குறியதாகவோ அல்லது ஆவிக்குறியதாகவோ இருக்கலாம். அது நன்மைக்கு ஏதுவானதாகவும் இருக்கலாம் அல்லது தீமைக்கு ஏதுவானதாகவும் இருக்கலாம். ஆகவே எந்த மனவிருப்பத்தைக்குறித்தும் நாம் நிதானமாய் தேவ வார்த்தையின் படியாக யோசித்துப்பார்க்கவேண்டும்.

            எந்த மனவிருப்பமாக இருந்தாலும் அதை தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து முதலாவதாக ஜெபிக்கவேண்டும். ‘ஆண்டவரே! நான் விரும்புகிற இந்தக் காரியம் உமக்குப் பிரியமானதா, ஏற்றதா, அது உமக்கு மகிமையாய் இருக்குமா? என்று தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்க வேண்டும். தேவனுக்காக கத்திருக்கவும் வேண்டும். சில மக்கள் விடாப்பிடியாக ஜெபித்து எப்படியும் அதை நான் பெற்றே ஆகவேண்டும் என்று செயல்படுவது சரியா? அது சரியல்ல. ஒப்புக்கொடுத்து ஜெபித்து செயல்படுவது நம்முடைய மனதையும் தேவனுக்குள்ளாக பக்குவப்படுத்தும். மேலும் தேவன் ஆம் என்று சொன்னாலும், இல்லை என்று சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும்படியான மனதுள்ளவர்களாய்க் காணப்படவேண்டும். தேவன் தம்முடைய சர்வ ஞானத்தைக் கொண்டு அந்த காரியத்தில் செயல்படுகிறார். இது தேவ வார்த்தையின்படி சரியான விருப்பமா என்பதை வேத வசனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கஏண்டும். இதுவே சரியான வழி.