இரக்கத்தை சிநேகி | செப்டம்பர் 5
‘மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.’
மீகா. 6 : 8
மீகா தீர்க்கதரிசி தேவன் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இந்த வசனத்தில் சொல்லியிருக்கிறார். நியாயத்தைச் செய்வது என்பது தேவனுடைய வார்த்தையின்படி நாம் ஒவ்வொன்றிலும் செய்வதைக் குறிக்கிறது. நாம் செய்வது எதுவாக இருந்தாலும் அது தேவனுடைய வார்த்தையின்படியானதா என்பதை ஆராய்ந்து செய்யவேண்டும். ஏனென்றால் தேவனுடைய வார்த்தைக்குப் புறம்பானது எவ்வளவு நல்லதாகக் காணப்பட்டாலும் தேவன் அதை அங்கீகரிக்கமாட்டார். ஏனென்றால் தேவன் ‘தான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்‘ (மத்தேயு 7 : 24) என்று சொல்லியிருக்கிறார். மணலின்மேல் வீட்டைக் கட்டின மனுஷன் எப்படி விவரிக்கப்பட்டிருக்கிறான் பாருங்கள்! ‘ நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்யாதிருக்கிறவன்‘ என்று சொல்லப்படுகிறது. ஆகவே தேவன் சொன்னபடி செய்வதை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.
மேலும் நாம் இரக்கத்தை சிநேகிக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார். நாமும் தேவனிடத்தில் இரக்கத்தை எதிர்பார்க்கவேண்டும். நாம் மற்றவர்களிடத்திலும் இரக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும். நாம் மற்றவர்களிடத்தில் இரக்கமுள்ளவர்களாக இருக்கும்பொழுதுதான் தேவன் நம்மிடத்தில் இரக்கமுள்ளவராக இருப்பார். நாம் மற்றவர்களிடத்தில் இரக்கமில்லாதவர்களாய் இருக்கும் போது, நாம் எப்படி தேவனிடத்தில் இரக்கத்தை எதிர்பார்க்கமுடியும்? நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கு அளக்கப்படும் என்பதை மறவாதீர்கள். அடுத்ததாக நாம் மனத்தாழ்மை உள்ளவர்களாக நடப்பதை தேவன் நம்மிடத்தில் கேட்கிறார். பெருமை தேவனை நம்மைவிட்டு பிரிக்கிறது, தாழ்மை அவரோடு நம்மை இணைக்கிறது.