ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்? | ஏப்ரல் : 15
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்?
தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என்
தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.’
(சங்கீதம் 43 : 5 )
வேத பகுதி | சங்கீதம் 43 : 1 – 5
2. என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?
3. உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.
4. அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
5. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
தாவீது தன்னுடைய கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்ட நிலையில் சோர்ந்துபோகிற தன்னுடைய உள்ளத்தைப் பார்க்கிறான். அநேக சமயங்களில் பரிசுத்தவான்கள் இந்த பாதையில் கடந்து செல்லுகிறார்கள். அவர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாத கலக்கமும் திகைப்பும் அவர்களுக்குள் ஏற்படுகிறது. இருதயம் மெழுகுபோல் உருகுகிறது. ஏன் இவ்விதமாக நேரிடுகிறது? இது எல்லா பரிசுத்தவான்களும் கடந்து செல்லும் பாதையா? ஆம்! இது ஒவ்வொரு மெய் விசுவாசியும் கடந்து செல்லும் பாதைதான். தேவன் இந்தப் பாதையை நமக்கு அவ்விதம் தம்முடைய நித்திய ஞானத்தினால் நியமித்திருக்கிறார்.
இவ்விதமான நேரங்களில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவென்றால், நம்மில் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இல்லாத காரியங்கள் உண்டு என்பதை முதலாவது விளங்கிக்கொள்ளவேண்டும். அநேகர் தனக்கு இவ்விதம் சோர்வு ஏற்படுகிறதே என்று இன்னும் அதிகமாக சோர்ந்துபோகிறதுண்டு. அநேக காரியங்கள் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்கிற அறிவு, நம்முடைய இந்த நிலையை ஒத்துக்கொள்ளச்செய்கிறது. அதுவே இவ்விதமான சோர்வு நிலை நாம் வெற்றி பெறுவதற்கு முதல்படியாக இருக்கிறது. தாவீதும் அதைக்குறித்து முதலில் விளங்கவில்லையென்றாலும், அதை ஏற்றுக்கொண்ட பிறகு அதற்கு மேலாகச் செல்லுகிறதைப் பார்க்கிறோம்.
இரண்டாவதாக, தேவன் நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கிறதெல்லாம் அவர் தம்முடைய சர்வ ஞானத்தைக்கொண்டு அனுமதிக்கிறார் என்பதும் நமக்கு அனுமதிக்கப்படுகிற எதுவும் நம்முடைய நன்மைக்கென்றே அனுமதிக்கிறார் என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். ‘தேவனிடத்தில் அன்புகூறுகிறவர்களூக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.’ (ரோமர். 8 : 28 ) மூன்றாவதாக இந்தச் சூழ்நிலையிலும் தேவனையே நோக்கி அமர்ந்திருக்க வேண்டும். இருதயத்தில் சோர்வாக இருந்தாலும், தேவனை உன் உதடுகளினால் துதி. அநேக தேவ மக்கள் கண்ட விடுதலையை நீயும் காண்பாய்.