“நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்” (ஏசாயா 62:4).

தேவன் தம்முடைய மக்களை எவ்வளவாக ஆறுதல் படுத்துகிறார்! எப்சிபா என்றால் அவள் என் பிரியம் என்று அர்த்தம். பியூலா என்றால் நீ உடன்படிக்கைக்கு உட்பட்டாய் என்று அர்த்தம். கைவிடப்பட்ட நிலையில் வாழுகிற உன் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். அவர் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டார். உன் தேசம் வாழ்க்கைப்படும் என்றும் சொல்லுகிறார். உன்னுடைய வாழ்க்கை கட்டப்படும். நீ தனிமையின் சூழ்நிலையில் கடந்துபோன நாட்களளெல்லாம் மாறிவிடும். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கும்படியான இந்த வார்த்தை என்ன ஒரு ஆறுதலாக இருக்கிறது! நாம் இன்னும் ஏன் தேவனை நம்முடைய வாழ்க்கையில் அலட்சியப்படுத்துகிறோம்? ஏன் அவரை கனப்படுத்தத் தவறுகிறோம்? அதுவே நம்முடைய பிரச்சனையாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் அவர் செயல்படும்படியாக அவருடைய கரத்தில் நம்மை ஒப்புவித்து நம்மைத் தாழ்த்துவோமானால், அவர் நம்முடைய வாழ்க்கையைக் கட்டுவார். மனிதனை நோக்கிப் பார்த்து ஏமாற்றம் அடைந்தது போதும். இனி கர்த்தரை நோக்கிப் பார்க்கக் கற்றுக்கொள்வோம். அவருடைய மகத்துவமான அன்பை நோக்கிப் பார்ப்போம். அது ஆண்டவருக்குப் பிரியமாகக் காணப்படும். நம்முடைய வாழ்க்கைக் கட்டப்படுவதின் நிமித்தமாக அவருடைய நாமம் மகிமைப்படும்.