“உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது” (உன்னதப்பாட்டு 4:10). 

என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மை தாமே ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசு என்று பவுல் சொல்லுகிறார், நம்முடைய வாழ்க்கையில் நாம் பவுலைப் போல இவ்விதமாய் சொல்ல முடியுமா? இது மிக முக்கியமானது. இயேசு கிறிஸ்து “பிதா என்னில் அன்பாயிருக்கிறதைப் போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிறார். மேலும் என் அன்பிலே நிலைத்திருங்கள் என்றும் சொல்லுகிறார். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் இந்த அன்பை ருசிப்பதே ஒரு சிறிய பரலோகம் என்றும் சொல்லக்கூடும். மெய்யாலுமே நம்முடைய வாழ்க்கையில் பாவத்திலிருந்து மீட்கப்பட்டு விடுதலை பெற்ற ஒரு வாழ்க்கையில் இருக்கும்படியான இன்பம் வேறெதிலும் இல்லை. அநேக வேளைகளில் பாவம் நமக்கு இன்பத்தைக் கொடுப்பதைப் போல பொய்யாய் காணப்படுகிறது. ஆனால் தேவன் நமக்கு இந்த உலகத்தில் இன்பமான அவருடைய அன்பைக் கொடுத்திருக்கிறார். இந்த அன்பை நாம் ருசிக்கும்பொழுது மாத்திரமே இந்த நேசத்தைப் போல வேறொரு நேசம் இல்லை என்று உணர்ந்துகொள்ள முடியும். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள், அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிறவன் பாக்கியவான் என்று வேதம் சொல்லுகிறது. அருமையானவர்களே இந்த உலகம் நம்மை வெறுமையாக்குகிறது. தேவனுக்குப் பிரியமற்றவர்களாய் போகும்படிச் செய்கிறது. நம்மை நாமே அழித்துக்கொள்ளும்படியாகச் செய்கிறது. ஆனால் ஆண்டவருடைய நேசம் அது மிக இனிமையானது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள் என்று. இதுவே ஒரு மெய்யான கிறிஸ்தவனின் வாஞ்சையாகவும் இருக்க வேண்டும்.