நவம்பர் 6          

      “அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை” (லூக்கா 13:6).

      தேவன் என்ன நோக்கத்திற்கென்று நம்மை இந்த உலகத்தில் வைத்திருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறோமா? “நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?” (ஏசாயா 5:4) என்று தேவன் சொல்லுகிறார். அருமையானவர்களே! தேவன் உன்னைப்பார்த்து எவ்விதம் சாட்சி கொடுக்கிறார்? நீ எவ்விதமான கனிகளைக் கொடுக்கிறாய்? கசப்பான கனிகளை நீ கொடுப்பாயானால், தேவன் உன் வாழ்க்கையைத் துண்டித்துப்போடுவார். “இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது” (லூக்கா 13:7). நீ கசப்பான கனிகளைக் கொடுப்பாயானால் தேவன் உன்னை வெட்டிப்போடுவார்.

      தேவன் எதற்காக உன்னைத் தெரிந்து கொண்டார்? “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” (யோவான் 15:16) என்று வேதம் மிகத்தெளிவாக சொல்லுகிறது. தேவன் உன்னைத் தெரிந்து கொண்டதன் நோக்கம் ‘நீ தேவனுக்கென்று நல்ல கனிகளைக் கொடுக்கும்படி’. தேவனுடைய மகிமைக்கென்று தேவன் உன்னை இந்த உலகத்தில் வைத்திருக்கிறார். நீ நல்ல கனிகளைக் கொடுக்கும்போது உன் மூலம் மற்றவர்களும் தேவனை ருசிபார்ப்பார்கள். அப்பொழுது தேவனுடைய நாமமும் மகிமைப்படும். நீ எந்தக் கனியைக் கொடுக்கிறாய்? நல்ல கனியா? (கலாத்தியார் 5:22-23) கசப்பான கனியா? (கலாத்தியார் 5:19-21).