“இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார்” (மத்தேயு 15:28).
அநேக வேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் திடீரென்று கைவிடப்பட்ட ஒரு நிலையும் வெறுமையும் காணப்படுவதைப் போல இருக்கலாம். தேவன் என்னைக் கைவிட்டுவிட்டாரோ என்று பல விதமான உணர்வுகளில் நாம் கடந்துபோகிறோம். நம்முடைய வாழ்க்கையில் ஒரு நோக்கமில்லாமல் தேவன் எதையுமே அனுமதிக்கிறதில்லை. நம்முடையப் பார்வையைத் தேவன் பேரில் திரும்பும்படியாக ஒருவேளை அவர் நம்முடைய வாழ்க்கையில் இதை அனுமதிக்கலாம். தேவனின் சர்வ ஏகாதிபத்தியத்தை நாம் அங்கீகரிக்கும் படியாக இதை அனுமதிக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் அநேகர் நம்மைப் புறக்கணிக்கலாம். பல சோர்வுகளின் வழியாய்க் கடந்து செல்லலாம். ஆனாலும் நாம் அவ்விதமான வேளைகளிலும் தேவனை நோக்கிச் சார்ந்திருப்பது நல்லது. இதோ சதா காலங்களிலும் நான் உங்களோடே இருக்கிறேன் என்று சொன்ன ஆண்டவர், இன்றும் நம்மோடு கூட இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தேற்றவும் பெலப்படுத்தவும் கிறிஸ்துவண்டை வழிநடத்தவும் அவர் எப்போதும் நம்மோடுகூட இருக்கிறார். அநேக வேளைகளில் தேவன் அமைதியாக இருக்கிறார் என்றால், அவர் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்பதல்ல. அவரை இன்னும் அதிகமாக நாம் சார்ந்துகொள்ளவும் தேவன் தம்முடைய சர்வ ஞானத்தைக் கொண்டும் திட்டத்தைக் கொண்டும் நம்மை உருவாக்கும்படியாக அவரை நோக்கிப் பார்க்கவே இதை அனுமதிக்கிறார். நம்மை நாம் சார்ந்துகொள்ளுகிறதை விட்டு அவரைச் சார்ந்துகொள்ளுகிறதற்காக தேவன் இவ்விதமான காரியங்களை அனுமதிக்கிறார். கானானிய ஸ்திரி தன் மகள் சொஸ்தமாகும்படி இயேசுவினிடத்தில் வேண்டிக்கொண்டாள். ஆனால் அவளுக்கு எந்தவிதமான பதிலும் கொடுக்கப்படவில்லை. ஒரு நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் அவள் அமைதியாக தேவனைச் சார்ந்துகொண்டாள். நம் வாழ்க்கையிலும் எந்தச் சூழ்நிலையிலும் அவரை நோக்கிப் பார்த்து வாழுவோம். இயேசு அந்த ஸ்திரியைப் பார்த்து உன் விசுவாசம் பெரிது என்று சொன்னார். தேவன் நம்முடைய வாழ்க்கையில் அமைதியாக இருக்கிறார் என்றால், அதின் பின்னால் அவருடைய மகிமையும் கிருபையும் விளங்கவும், நம்முடைய விசுவாசத்தில் நாம் பெருகவும் தேவன் இதை அனுமதித்திருக்கிறார்.