கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 10                உங்கள் பிள்ளைகள்             ஏசாயா 54:1-13

உன் பிள்ளைகள் எல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்,

உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாயிருக்கும் (ஏசாயா 54:13)

    அருமையான பெற்றோர்களே இந்த வாக்குத்தத்தத்தை முழுமையாய் நம்புகிறீர்களா? ஆம்! இது தேவன் உங்களுக்குக் கொடுத்த உன்னதமான வாக்குத்தத்தம். இன்றைக்கு அநேக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக்குறித்து அதிகமாய் சலித்துக் கொள்ளுகிறார்கள். ஒருவேளை நீங்களும் அப்படியிருக்கலாம். அன்பானவர்களே! இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, தேவனிடத்தில் உங்கள் பிள்ளைகளுக்காக மன்றாடி ஜெபியுங்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

    பெற்றோர்களாகிய உங்களுக்கு உங்கள் பிள்ளைகளைக்குறித்த உத்திரவாதம் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக உண்மையான பாரத்தோடு ஜெபிக்கிறீர்களா? அப்படியானால் தேவன் நிச்சயமாக செயல்படுவார் என்று நம்புங்கள். அவர்கள் நிலை எவ்வளவு மோசமானதாக காணப்பட்டாலும் மனந்தளராதிருங்கள். தேவன் அவர்களை மாற்ற வல்லவராய் இருக்கிறார். உங்கள் பிள்ளைகள் மாறுவது உலக அதிசயத்திலும் அதிசயம் என்று எண்ணுகிறீர்களா? தேவன் கேட்கிறார், என்னால் கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?’

    அன்பானவர்களே! ஒவ்வொரு நாளும் இந்த வாக்குத்தத்தத்தை தேவசமூகத்தில் வைத்து மன்றாடுங்கள். நீங்கள் வெட்கப்பட்டு போகமாட்டீர்கள். நீங்கள் அவர்களுக்கு எவ்வளவுதான் புத்தி சொன்னாலும் அல்லது எவ்வளவுதான் போதித்தாலும் ஒருவேளை அவர்கள் கேட்கமாட்டார்கள். ஆனால் கர்த்தர் அவர்களுக்குப் போதிப்பார். அவர் சத்தத்திற்கு அவர்கள் ஒருபோதும் எதிர்த்து நிற்கமுடியாது. அப்பொழுது அவர்கள் ஞானத்தைப் பெறுவார்கள். இன்றைக்கு அவர்கள் சமாதானமற்றவர்களாக, மற்றவர்களின் சமாதானத்தை குலைக்கிறவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் சமாதானம் பெரியதாய் இருக்கும். ஒருக்காலும் உன் பிள்ளைகளுக்காக ஜெபிப்பதை விட்டுவிடாதே. தேவன் உன்மையுள்ளவர். அவரை முற்றிலும் சார்ந்துகொள்.