ஆகஸ்ட் 29                      

“பயப்படாதே நீ வெட்கப்படுவதில்லை” (ஏசாயா 54:4)

    நாம் இந்த உலகில் தேவனை அறியாத மக்கள் மத்தியில் தேவனுடைய பிள்ளைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  உலகம் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உலகம் முகாந்திரமில்லாமல் நம்மைப் பகைக்கிறது. நம்முடைய வீழ்ச்சியை உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இந்த விதமான காரியங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு அநேக சமயங்களில் நம்முடைய காரியங்கள் எப்படி ஆகுமோ, இந்த ஜனங்கள் முன்பு நாம் தாழ்த்தப்பட்டு போய்விடுவோமோ என்ற பயம் பீடிக்கிறது.

    அன்பானவர்களே, தேவன் சொல்லுகிறார் ‘பயப்படாதே’ அதை முழுமையாக நம்புவோம். எல்லாம் வித்தியாசமாகக் காணப்பட்டாலும் நாம் எப்போதும் மாறாத கர்த்தரை நம்புவோம். அவருடைய வார்த்தையை நம்புவோமாக. அவர் நம்மேல் நினைவுள்ளவராக இருக்கிறார் என்பதை மறவாமல் இருப்போமாக. நமக்கு முன்பாக இந்தப் பாதையில் கடந்து சென்ற மேகம் போன்ற திரளான பரிசுத்தவான்களின் சாட்சி நம்மை உற்சாகப்படுத்தட்டும். ‘நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர், சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கு ஒப்பாயிருக்கிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?’ (ஏசாயா  51:12) இந்த தேவாதி தேவனை, சர்வ வல்லவரை சார்ந்து வாழுவதை விட்டு மனுஷனுக்குப் பயப்படுவது நம்மைக் கொண்டுபோய் படுகுழியில் தள்ளிவிடும்.

    இஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டு கானான் தேசத்தை நோக்கிப் பிரயாணம் செய்தபோது, சிவந்த சமுத்திரத்தின் முன்பாக நின்ற வேளையில், பின்னால் துரத்திவந்த எகிப்தியரைக் கண்டு பயந்தார்கள். அப்போது மோசே பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள், இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை, இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்‘ (யாத் 14:13) இங்கு எகிப்தியர் அழிக்கப்பட்டுப் போனார்கள் இஸ்ரவேல் மக்களோ காப்பாற்றப்பட்டார்கள். மனித பயத்தை விட்டு தேவனை நம்புவோமானால் தேவன் நம் பட்சத்திலிருந்து நம்மை உயர்த்துவார்.