“இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்” (உபாகமம் 4:1).

 இன்றைக்குப் பொதுவாக தேவனுடைய வார்த்தையைக் குறித்த வாஞ்சையும் விருப்பமும் அற்ற ஒரு கிறிஸ்தவ சமூதாயம் உருவாகி வருகிறதை நாம் பார்க்கிறோம். அநேக மக்கள் ஆண்டவருடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டு வாழுகிற ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் இந்த இடத்தில் மோசே, தேவன் கொடுக்கிற ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்ளவும், பிழைத்திருக்கவும் தேவனுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள் என்று சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் நாம் தேவனுடைய வார்த்தையைச் சார்ந்து வாழாமல் இருப்பதின் நிமித்தமாகவே. தங்களுடைய வாழ்க்கையில் தேவ வார்த்தை நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்று அக்கறையைக் கொண்டிருப்பதில்லை. இதுவே நம்முடைய வாழ்க்கையின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. தேவன் தம்முடைய வார்த்தையை நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த வார்த்தையை நாம் பற்றிக்கொண்டு வாழும்பொழுது மாத்திரமே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மை சரியாய் வழிநடத்தக்கூடிய வேத வசனத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்களாய் நாம் வாழுவோம். அதே சமயத்தில் கர்த்தர் கொடுத்திருக்கின்ற ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களாகவும் நாம் காணப்படுவோம். ஆகவே தேவனுடைய வார்த்தையைக் குறித்த முக்கியத்துவத்தை மோசே தேவனுடைய ஜனங்களுக்கு உணர்த்துகிறதை நாம் பார்க்கிறோம். அவைகள் கர்த்தருடைய வார்த்தைகள் என்ற உணர்வோடும், இதன் மூலமாய் அவர் என்னோடு பேசுகிறார் என்ற எண்ணத்தோடும் நாம் அவருடைய வார்த்தைக்குச் செவிக்கொடுப்போமாக. கர்த்தருடைய வசனம் நம்முடைய வாழ்க்கையில் நம்மை எப்பொழுதும் வழிநடத்தும்படியாக நம்முடைய மனதில் காத்துக்கொள்ளப்பட வேண்டியது அவசியம். அப்பொழுது நாம் வழிதப்பிப் போக மாட்டோம். நாம் செம்மையாய் நடக்கக் கர்த்தர் உதவி செய்வார்.