“உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்” (யோபு 34:16).

ஆவிக்குரிய உணர்வு என்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிக அவசியம். ஆவிக்குரிய உணர்வு இருந்தால் மாத்திரமே, தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவர்களாக வாழ முடியும். நம்முடைய வாழ்க்கையின் காரியங்களை நாம் நிதானித்து உணர்ந்து அறிந்து கொள்ளமுடியும். அநேகர் இந்த ஆவிக்குரிய உணர்வற்றவர்களாக வாழுகிறவர்களாக இருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையில் தேவன் செயல்படுகிற காரியங்களைக் குறித்து எண்ணி, இவைகள் ஏன் என்னுடைய வாழ்க்கையில் அனுமதிக்கப்படுகிறது? இவைகளின் நோக்கம் என்ன? என்பதைக் குறித்து ஒரு ஆவிக்குரிய உணர்வுள்ள மனிதன் சிந்திப்பான். ஆனால் இந்த உணர்வு இல்லாதவன் அதைக் குறித்து சிந்தித்துப்பார்ப்பதில்லை. நோவாவின் காலத்தில் அந்த ஜனங்கள், வெள்ளம் தங்களை வாரிக்கொண்டு போகும் வரை உணர்வில்லாமல் இருந்தார்கள் என்பதை வேதத்தில் பார்க்கிறோம். ஆவிக்குரிய உணர்வின்மை மிக ஆபத்தானது. ஒரு குஷ்டரோகி தனக்கு உணர்வில்லாததினால், தனக்குக் காயம் ஏற்பட்டாலும் அதைக் குறித்து உணர்வில்லாமல் இருப்பதைப்போல, ஆவிக்குரிய உணர்வில்லாத மனிதனும் அவ்விதமாகவே இருக்கிறான். நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் உணர்வடைவோம். வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. நாம் ஆவிக்குரிய உணர்வடையும்போதுதான் தேவனுடைய வார்த்தைக்கு நாம் செவிக்கொடுப்போம். வார்த்தைக்குச் செவிக்கொடுத்தால் நாம் அதன் மூலமாக பிழைப்போம். இல்லையென்றால் நாம் இன்னுமாக ஆத்துமாவில் மரித்தவர்களாகவே இருப்போம். தேவனுடைய வார்த்தைக்குச் செவிக்கொடுப்போம். அப்பொழுது நாம் பிழைத்திருப்போம்.