“நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்” (யோவான் 15:16).

கிறிஸ்துவத்தில்  இரண்டுவிதமான போதனைகள் உண்டு. ஒன்று ஆர்மீனியக் கொள்கை மற்றொன்று கால்வின் கொள்கை. ஆர்மீனிய போதனை என்னவென்றால், நான் இயேசு கிறிஸ்துவைத் தெரிந்துகொண்டேன் என்று போதிக்கின்ற போதனை. ஆனால் கால்வின் போதித்த போதனை என்னவென்றால், நான் ஆண்டவரைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் வழிதப்பிப் போன ஒரு பாவி. ஆனால் ஆண்டவர் என்னைத் தெரிந்துகொண்டார். கால்வின் போதனையே வேதத்திற்கு ஏற்புடையது என்பதை நாம் பார்க்க முடிகிறது. இயேசு கிறிஸ்து தெளிவாகச் சொல்லுகிறார், “நீங்கள் என்னைத் தெரிந்துக்கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்” என்று. இந்த உலகத்தில் பாவத்தினாலும் அக்கிரமத்தினாலும் மரித்துப்போயிருந்த என்னை அவர் தெரிந்துகொண்டார். அவர் உயிர்ப்பித்தார். அவரே இதற்கு முற்றிலும் காரணம். இந்த சத்தியம் நம்மை தாழ்த்துவது அவசியம். என்னுடைய நீதி கந்தையும் குப்பையுமாயிருக்கிறது. ஆனால் என்னை அவர் தெரிந்து கொண்டார். நான் அழிவுக்கும் நரகத்திற்கும் பாத்திரமான ஒரு பாவி. இந்த உலகத்தில் எத்தனையோ மக்கள் இருக்கும்பொழுது, அவர் என்னை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? என்னில் எதாகிலும் நன்மை இருப்பதினாலா? இல்லை. அவர் தம்முடைய அளவில்லாத அன்பின் நிமித்தம் முற்றிலும் தகுதியில்லாத என்னை தெரிந்துக்கொண்டார். இந்த சத்தியம் ஒரு மனிதனில் இரண்டு காரியங்களைச் செயல்படுத்துகிறது. ஒன்று தாழ்மையை வெளிப்படுத்துகிறது. மற்றொன்று ஆண்டவருடைய அன்பைக் குறித்து வியப்படையச் செய்கிறது. இந்த அன்பினால் ஆண்டவரை நேசிக்கச் செய்கிறது. அவரே நம்மில் முந்தி அன்புகூர்ந்தார் என்று வேதத்தில் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் இதைப் போல ஆறுதலும் தேறுதலும் கொடுக்கக்கூடிய சத்தியம் வேறுண்டோ!