“நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது” (தானியேல் 9:23).
தாவீது என் இருதயத்திற்கு பிரியமானவன் என்று ஆண்டவர் சொல்லுகிறதையும் நாம் பார்க்கிறோம். தானியேலும் அவ்விதமாக ஆண்டவருக்குப் பிரியமானவன். நாம் வாழுகிற வாழ்க்கை என்பது கர்த்தருக்குப் பிரியமானதாக இருக்கின்றதா என்று சிந்திப்பது அவசியம். அநேக வேளைகளில் நம்முடைய வாழ்க்கை ஆண்டவருக்குப் பிரியமாயிருப்பதில்லை. அது மிக வருத்தமான காரியம். நம்முடைய பாவத் தன்மைகள் தேவனைத் துக்கப்படுத்தும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆனால் தேவனுக்கு நான் பிரியமானவனாய் இருக்கும்பொழுது தேவனோடு கொண்டிருக்கிற தொடர்பில் நான் சரியாக இருக்கிறதை அது காட்டுகிறது. மேலும் நம்முடைய ஜெபத்திற்கும் உடனே நாம் பதில் பெற்றுக்கொள்ள கூடியவர்களாய் இருக்கிறோம். தானியேல் வேண்டிக்கொள்ளத் தொடங்கின போதே பதில் வெளிப்பட்டது. ஒருவேளை அநேக சமயங்களில் நம்முடைய ஜெபம் பதிலளிக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம், நாம் ஆண்டவருக்கு பிரியமானவர்களாய் இல்லாததே. ஆண்டவரை துக்கப்படுத்துகிற காரியம் நம்மில் இருக்குமானால் அவருக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. ஆகவே நம்முடைய ஜெபம் தடைபடுகிறது. அவருடைய பதிலும் தடைபடுகிறது. ஆகவே மெய்யாய் ஆண்டவருக்குப் பிரியமாய் வாழுகிற வாழ்க்கைக்கும் நம் ஜெபம் கேட்கப்படுவதற்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம்முடைய ஜெபம் கேட்கப்பட வேண்டுமென்றால் நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு முன்பாகப் பிரியமானதாகக் காணப்பட வேண்டும்.