கிருபை சத்திய தின தியானம்

ஜனவரி 1                              நம்பிக்கையின் புத்தாண்டு                        ஆதி 17 : 1 – 10

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது,

கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்;

நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. (ஆதி 17:1)

      ஆபிரகாம் தொண்ணூறொன்பது   வயதை முடித்து தற்போது நூறாவது வயதில் காலடி எடுத்து வைத்துள்ளான். அவன் தன் சொந்த தேசத்தை, மக்களை விட்டு வரும்போது எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். கர்த்தர் ஆபிரகாமை அழைத்து நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (ஆதி 12 : 2 ) என்றார். ஆனால் இருபத்து நான்கு ஆண்டுகளாகியும் தேவன் அவனுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறவில்லை. ஈசாக்கு கொடுக்கபடவில்லை, ஜாதியாக வாய்ப்பில்லை. இப்பொழுது அவன் தன்னுடைய 100வது ஆண்டுக்குள் பிரவேசிக்கிறான். இவ்வளவு ஆண்டுகளாக நிறைவேறாத வக்குத்தத்தம் இந்த ஆண்டிலாகிலும் நிறைவேறுமா? ஆம், நிறைவேறிற்று. அவனுடைய வாழ்க்கையில் உண்மையிலேயே தேவன் பெரிய அற்புதத்தைச் செய்தார். ஈசாக்கு பிறந்தான்.

     அன்பான சகோதரனே! சகோதரியே! நீ ஒருவேளை இந்த ஆண்டில் நுழையும்போது, இத்தனை வருடங்களாக என் வாழ்வில் நிறைவேறாமலேயே போய்கொண்டிருக்கிறக் காரியம் நிறைவேறுமா? இவ்விதமான சிந்தனையோடு கூட இந்த ஆண்டில் நுழைவாயானால், ஆபிரகாமின் வாழ்க்கையை நோக்கிப்பார். ஆபிரகாமை அவ்விதம் ஆச்சீர்வதித்த தேவன் ஏன் உன்னையும் ஆசீவதிக்கமாட்டார்?

     ஆபிரகாமைப் பார்த்து தேவன், ’நான் சர்வவல்லமையுள்ள தேவன்’ என்று சொன்னார். இந்தப் புதிய ஆண்டில், தேவன் சர்வவல்லவர் என்ற விளங்குதலோடு நீ பிரவேசி. அவர் சகலத்தையும் உண்டாக்கி அனைத்தையும் ஆளுகை செய்கிற தேவன். ஆபிரகாமைப் போல், இந்த புதிய ஆண்டில் தேவன் விஷேசித்த விதத்தில் உன்னை ஆசீர்வதிப்பார். தேவனுக்கென்று வாழவும், அவருடைய மகிமைக்கென்று பிழைக்கவும் உன்னை ஒப்புக்கொடு. இந்த ஆண்டில் பெரிய காரியங்களை கர்த்தர் உனக்குச் செய்வார். தேவனுடைய நாமம் மகிமைப்படும்.