மே 19                  

‘இதோ நான் உங்கள் பட்சத்திலிருந்து உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள் ‘(எசேக்கியேல் 36:9)

    தேவன் நம்மைக் கண்ணோக்குவது அவருடைய கோபத்தோடே அல்ல, நமது பட்சத்திலிருந்து நம்மை அவ்விதம் கண்ணோக்குவேன் என்று சொல்லுகிறார். தேவாதி தேவன் நம் பட்சத்திலிருப்பாரானால் அது எவ்வளவு பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது! மனிதர்கள், சூழ்நிலைகள், மற்றும் அநேகக்காரியங்கள் நம் பட்சத்தில் இல்லாததைப் போல காணப்படலாம், சோர்ந்து போகாதிருங்கள். தேவன் என் பட்சத்திலிருந்தால் அது எனக்குப் போதும் என்று சொல்லுங்கள். அதோடுமாத்திரமல்ல, நம்மைக் கண்ணோக்குவேன் என்றும் சொல்லுகிறார். நம்மை தேவன் நோக்கிப் பார்ப்பாரானால், நமது மேல் அவர் கொண்டிருக்கிற அக்கரையைக் அது காண்பிக்கிறது. அன்பானவர்களே!  இந்த தேவ வசனத்தைப் பற்றிக்கொண்டு ‘ஆண்டவரே! என் பட்சத்தில் இருந்து நீர் என்னை   கண்ணோக்குகிறதற்காக ஸ்தோத்திரம். நீர் அவ்விதம் எனக்காக இந்த தயையைக் காண்பிக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்று சொல்லுங்கள்.

    ‘நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்’ உங்கள் வாழ்க்கை இந்த நாள் மட்டும் எந்தவிதமான பலனைக் காணக்கூடாத பாழ் நிலமாக இருக்கலாம். அது விதைகள் விதைக்க ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். நீ பண்படுத்தப்படாத நிலத்தைப்போல பிரயோஜனமற்ற வாழ்க்கையைக் கொண்டிருக்கலாம். ஆனால் தேவன் உன்னைப் பண்படுத்துவார். தேவன், உன்னால் முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறதை அற்புதமாக மாற்றிப் பண்படுத்துவார். ‘மேலும் விதைக்கப்படுவீர்கள்’ பலன் தருகிற, ஒரு பிரயோஜனமான நிலமாக நிங்கள் மாற்றப்பட்டு, ஆசீர்வதிக்கப்படுவீர்கள். எந்த விவசாயியாவது நிலத்தை பண்படுத்தி விதைத்து அப்படியே விட்டுவிடுவானா? இல்லை அதற்குண்டான நீரைப்பாய்ச்சி அதை விளையச் செய்வான். அவ்விதமாகவே தேவன் அதற்குத்தேவையான நீரைப்பாய்ச்சி, அதில் நன்றாக விளையும்படியும் செய்வார். நீ இந்த விதமாக கர்த்தரால் ஆசீவதிக்கப்படுவாய் என்பதை விசுவாசிக்கிறயா? அப்படியானால் தேவன் உன்னை பலன்கொடுக்கிற நிலமாக மாற்றுவார்.