ஜூன் 3        

“ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார்” (புலம்பல் 2:1).

நாம் எல்லா சமயங்களிலும் ஆண்டவர் அன்புள்ளவர், கிருபையுள்ளவர் என்பதாக எண்ணிக் கொண்டு, அந்த அன்பையும் கிருபையையும் மதித்து மரியாதையுடனும் பயபக்தியுடனும் நடக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். அவருடைய அன்பையும் கிருபையையும் நம்முடைய சுயநலனுக்காக அநேக வேளைகளில் பயன்படுத்திக்கொள்ள தந்திரமாய் செயல்படப் பார்க்கிறோம். அதை நம்முடைய பாவ வாழ்க்கைக்குக் கூட சாதகமான விதத்தில் பற்றிக்கொண்டு வாழுகிற வாழ்க்கையை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவனை நாம் ஒருக்காலும் ஏமாற்றி வாழ முடியாது.  தேவன் மோசம் போக்க விடமாட்டார் என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. ஆனால் மெய்யாலும் நாம் கர்த்தர் பயப்படத்தக்கவரும், பயங்கரமானவரும் என்பதை மறந்து விடுகிறோம். அவர் நீதியுள்ள தேவனாக இருக்கிறபடியால், அவர் பாவத்தை வெறுக்கிறவராக இருக்கிறார்.

இந்த இடத்தில் கோபத்தினால் தேவன் மந்தாரத்தினால் சீயோன் குமாரத்தியை மூடுகிறார் என்று பார்க்கிறோம். இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார் என்று வேதம் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கையில் நாம் தேவனுக்கு பிரியமில்லாமல் வாழும்பொழுது அவருடைய சத்தியத்தை அறிந்தும், நாம் துணிகரமாக நம்முடைய வாழ்க்கையில் அதற்குக் கீழ்ப்படியாமல் போகும்பொழுது தேவன் நம்மேல் கோபம் கொள்கிறவராக இருக்கிறார். நாம் தேவனுக்குப் பிரியமில்லாத விதத்தில் நடக்கும் பொழுது தேவன் நம்மேல் கோபம் கொள்கிறார். அநேக வேளைகளில் ஆண்டவர் தமது கோபத்தை நம்மேல் பலவிதங்களில் காண்பித்தாலும், இதை என் வாழ்க்கையில் அனுமதித்திருக்கிறார் என்றோ அல்லது செய்திருக்கிறார் என்றோ நாம் அறியாமல் நம்முடைய வாழ்க்கையில் வாழுகிறது இன்னொரு பரிதாபம். ஆகவே அன்பும் கிருபையுள்ள தேவன் கோபம் கொள்கிறார் என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். மனிதனுடைய கோபத்துக்கு நாம் அநேக வேளைகளில் பயப்படுகிறோம். ஆனால் தேவனுடைய கோபத்துக்கு நாம் பயப்படுகிறோமா என்பதை ஆழமாக சிந்திப்போமாக.