கிருபை சத்திய தின தியானம்
ஜனவரி 3 கைவிடாமலிருப்பேன் ஏசாயா 41 : 10 – 17
‘சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடைக்காமல், அவர்கள் நாவு தாகத்தால் வரளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிக்கொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்’. ( ஏசாயா 41 : 17 )
ஆவியில் எளிமையுள்ள மக்களாய், மெய்யான வெளிச்சத்தை, சமாதானத்தை தேடுகிறவர்களுக்கு இவ்விதமான அருமையான வாக்குத்தத்தத்தை தேவன் வாக்குப் பண்ணியிருக்கிறார். மெய்யான விடுதலையைத் தேடியும் கண்டடையாமல் சோர்ந்துப்போனவர்களைப் பார்த்து தேவன் இரங்குகிறார். ஒருவேளை நீ தேவனுக்காக வாழவிரும்பியும், உன்னுடைய வாழ்க்கையில் அநேக ஆவிக்குரிய தோல்விகள் இருக்கலாம். சங்கீதக்காரன் தன்னுடைய வறண்ட நிலையில் கொண்டிருந்த வாஞ்சையை இவ்விதமாய் வெளிப்படுத்துகிறான். ‘தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.’ (சங் 63 : 1 ). நீ தேவனுக்கு ஏற்றவாழ்க்கை உன்னில் இல்லையே என்று எண்ணுவாயானால் அது நல்ல ஆவிக்குரிய அடையாளம். உன்னுடைய இருதய வாஞ்சைகளை தேவனிடத்தில் சொல்லு, ஜெபி. தேவன் அவ்விதமானவர்களின் கூப்பிடுதலுக்குச் செவிகொடுப்பேன் என்று சொல்லுகிறார். தேவன் சொல்லுவாரானால் அவர் அவ்விதமாகவே செய்வார் என்பதை உறுதியுடன் நம்பு. ஆகவே நீ உன் ஜெபத்தை இன்னும் உறுதியான நம்பிக்கையோடே ஏறெடுக்கலாம்.
’நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்’ என்றும் சொல்லுகிறார். இந்த உலகத்தில் மனிதர்கள், மிகவும் நெருங்கியவர்கள், நண்பர்கள் உன்னைக் கைவிடலாம். ஆனால் தேவன் ஒருபோதும் கைவிடமாட்டார். ‘என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்.’ (சங் 27 : 10 ). மெய்யான விசுவாசம் என்பது இவ்விதமாக தேவனை நம்புவதுதான். ‘கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.’ (சங் 94 : 14 ). தாம் சொன்னதைத் தேவன் நிறைவேற்றுவார். உன்னைக் கைவிடமாட்டார் என்று நம்பு.