பிப்ரவரி 24       தேவனுக்குப் பிரியமான ஆராதனை      1 யோவான் 4:7-21

“ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்” (எபிரேயர் 12:28).

      நாம் அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்கள். இன்றைக்கு அசையும் ராஜ்யத்துக்கு மனிதர்கள் போராடுகிறார்கள், ஆசைப்படுகிறார்கள். ஒருவருக்கொருவர் பொறாமையோடும், போட்டியோடும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள். ஆனால் ஒருநாள் அவர்களின் மூச்சு எடுக்கப்படும் பொழுது எல்லாம் மறைந்துவிடும். இது நிலையான ராஜ்ஜியம் அல்ல. ஆனால் தேவ மக்களாகிய நாம் அசைவில்லாத ராஜ்ஜியத்தைப் பெறப்போகிறவர்கள். தேவனுக்குப் பிரியமாயிராமல், உலகத்தின் முறைகளைத் தெரிந்து கொண்டு, உலகத்துக்குப் பிரியமாய் வாழ்வது நம்முடைய வாழ்க்கையில் அசைவில்லாத ராஜ்ஜியத்தின் சரியான வழிமுறை அல்ல.

      ஆண்டவர் கிருபையாக நமக்கு இந்த தேவ வசனங்களைக் கொடுத்து, அதன் மூலமாக அசைவில்லாத ராஜ்யத்தை குறித்தக் காரியத்தையும், நம்பிக்கையையும் நம்முடைய இருதயத்தில் வைக்கிறார். இதை நாம் பற்றிக் கொள்ளாமல் மற்றதைப் பற்றி கொள்ளுவோமானால் நாம் எவ்விதம் நித்திய ராஜ்ஜியத்தின் பிரஜைகளாகக் காணப்பட முடியும்? ஆகவேதான் “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபிரேயர் 4:16) என்று வேதம் சொல்லுகிறது. எவ்வளவு உன்னதமான ஸ்தலம் கிருபாசனம். அப்படியே ஆண்டவருடைய சமூகத்தில் நாம் சென்று கிருபாசனத்தின் முன்பு நம்முடைய எல்லா காரியங்களையையும் விவரித்துச் சொல்லுவோமானால், அவர் நமக்கு இரங்குகிறவரும், நம்மை அருமையான வழியில் நடத்திச் செல்பவராக இருக்கிறார்.       தேவனுக்குப் பிரியமான ஆராதனைசெய்ய மக்களிடம் வாஞ்சை இல்லை. இன்றைக்கு ஆராதனை என்ற பெயரில் மக்கள் பலவித சுய இஷ்ட  ஆராதனை செய்கிறார்கள். தங்கள் விருப்பப்படி ஆடியும் பாடியும் ஆராதனை என்ற பெயரில் செயல்படுவது கர்த்தருக்குப் பிரியமில்லாத பொய்யான ஆராதனையாகும். நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்ய நம் இருதயத்தைத் தாழ்த்துவோமாக.