ஜூன் 26      

“முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்” (லூக்கா 8:14).

இந்த வசனத்தில் ‘ஐசுவரியத்தின் மயக்கம்’ என்று சொல்லப்படுகிறது. இந்த உலகத்தில் நாம் ஐசுவரியத்தின் மயக்கம் என்று சொன்னால், அதை நாடித் தேடி ஓடுகின்ற மனப்பான்மையோடு வாழுகிற வாழ்க்கையாக அது இருக்கிறது. அநேகருடைய எண்ணம் என்னவென்றால் மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தாங்களும் மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்ற மனநிலையோடு வாழுவது. அது மட்டுமல்ல கவலைகளினாலும் அதிகமாய் நெருக்கப்பட்டு வாழுகிற வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் எதைக் குறித்து அக்கறையோடும், கருத்தோடும் நாம் தேடுகிறோம்? கவலை என்று சொல்லும்பொழுது இப்பிரபஞ்சத்துக்கு உரிய கவலைகள் பெரிதாய் காணப்படும். ஆனால் வேதம் ‘கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லுகிற கட்டளையை நாம் ஒதுக்குகிறோம்.

மற்றொன்று சிற்றின்பங்களினால் நெருக்கப்பட்டு நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பொழுதும் நாம் பலன் உள்ளவர்களாக இருக்க முடியாது. நம்முடைய வாழ்க்கையில் இவ்விதமான காரியங்கள் முக்கியமான இடத்தைப் பெற்று இருக்கும்பொழுது, நாம் ஆண்டவரைப் பின்பற்றுகிறோம் என்றும் ஆலயத்துக்குப் போகிறோம் அல்லது ஜெபிக்கிறோம் என்று சொல்லுவது போதுமானதல்ல . நாம் மெய்யாலுமே தேவனுக்கு பிரியமாக வாழும்படியாக விரும்புகிறோமா?  அது இரட்சிப்பின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. மற்றொன்று தேவன் கொடுத்திருக்கிற காரியங்களில் போதுமென்ற மனதோடு கூட வாழுகிற ஒரு மனநிலையை நம் வாழ்க்கையில் கொண்டிருப்பது அவசியம். அது இரட்சிப்பின் ஒரு அம்சமாக இருக்கிறது. ஆகவே நாம் நம்முடைய வாழ்க்கையில் இந்த உலகத்தின் காரியங்களினால் நெருக்கப்படுகிறோமா என்பதை  சிந்தித்துப் பார்த்து, அதை தவிர்க்க வேண்டும். போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.(1 தீமோ 6:6)