“நீதிமானுடைய வாய் ஜீவஊற்று” நீதி 10:11
நீதிமானுடைய வார்த்தைகள் ஜீவனைப் பிறப்பிக்கக்கூடிய வல்லமை உள்ளது. ஜீவ ஊற்றாக அது காணப்படும் என்று வேதம் சொல்லுகிறது. தேவனுடைய பிள்ளைகள் வாயின் வார்த்தைகளை எவ்விதம் உபயோகப்படுத்துகிறார்கள் என்பது மிக அவசியம். நம்முடைய வார்த்தை தேவனுடைய வார்த்தையை மகிமைப்படுவதாக, அவருடைய வார்த்தையை எடுத்துப் பேசுவதாக காணப்படுகிறதா? அல்லது அவருடைய வார்த்தைக்கும், சித்தத்துக்கும், விருப்பத்துக்கும் புறம்பானதாகக் காணப்படுகிறதா? “நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை” (சங்கீதம் 37:30-31) என்று நீதிமானைக் குறித்து வேதம் சொல்லுகிறது. தேவனுடைய வேதம் நம் இருதயத்தில் இருக்கும்பொழுது நாம் வேதத்தை பேசுகிறவர்களாகக் காணப்படுவோம். இது தேவனுடைய பிள்ளைகளின் அடையாளங்களில் ஒன்றாகும். நம் வாயின் வார்த்தைகள் அவ்விதமாகக் காணப்படுமானால் அது ஜீவ ஊற்றாகக் காணப்படும். “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” (எபேசியர் 4:29) என்று வேதம் கட்டளையிடுகிறது. நம் வாயிலிருந்து ஒருபோதும் கெட்ட வார்த்தைகள் மற்றும் தவறான வார்த்தைகள் வரக்கூடாது. மேலும் நாம் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு, அவர்களுடைய விசுவாசம் இன்னும் உறுதிப்படுத்துவதாகவும், ஊக்கத்தைத் தருவதாகவும் காணப்பட வேண்டும். அது பிறருக்கு பிரயோஜனம் உண்டாகும்படி பேசும்போது அதை மெய்யாலுமே ஜீவ ஊற்றாகும். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் நாவின் வார்த்தைகளை ஜாக்கிரதையாய் காத்துக் கொள்வது மிக அவசியமாகும். “ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்” (நீதி 13:14) என்று வேதம் சொல்லுகிறது. அன்பானவர்களே! நாம் ஏற்ற நேரத்தில் ஒரு ஆத்துமாவுக்கு சொல்லுகிற சுவிசேஷம் ஆத்துமாவை மரண கண்ணியிலிருந்து மீட்கிறது என்பதை உணரவேண்டும்.