மார்ச் 24           

“ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்”

1 யோவான் 1:1

      இயேசு கிறிஸ்துவே ஜீவ வார்த்தையாக இங்கு சொல்லப்படுகிறார். தேவனுடைய வார்த்தை இயேசுகிறிஸ்து என்பதை நாம் மறந்து விடுகிறோம். ‘வார்த்தை மாம்சமாகி’ என்று யோவான் சொல்கிறார். வேதத்தில் இயேசுவைப் பார்க்கிறோம் என்பதைவிட, இயேசுவாகவே இருக்கிற தேவ வார்த்தையை நாம் பார்க்கிறோம் என்பதுதான் உண்மை. தேவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்காத மங்கிப்போன காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு மிக அழகாக யோவான் ‘நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தை’ என்று சொல்கிறார்.

              நாம் தேவ வார்த்தையைப் பார்த்து, கேட்டு, உணர முடியுமா? ஆம் இயேசு கிறிஸ்துவை துல்லியமாகப் பார்க்க முடியும். கேட்கவும், காணவும், நோக்கிப் பார்க்கவும் முடியும். இதுவே கர்த்தருடைய வார்த்தை. இந்த உலகத்தில் மட்டுமல்ல பரலோகத்திலும் தேவனுடைய வார்த்தை இருக்கிறது. “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” (1 யோவான் 5:7). இங்கு திரித்துவத்தினுடைய பிரதிபலிப்பாக மூவரும் ஒருவரே என்றும், பரிசுத்த ஆவியின் மூலமாக இயேசு கிறிஸ்துவை வார்த்தை என்றும் சொல்லப்படுகிறது. இது எவ்வளவு உன்னதமான சாட்சியாக இருக்கிறது.           ஆகவேதான் “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவான் 1:14) என்று யோவான் சொல்லுகிறார். அவருடைய வார்த்தையின் மகிமையானது நம் வாழ்க்கையில் உணரக்கூடிய தேவ குமாரனே.