கிருபை சத்திய தின தியானம்
அக்டோபர் 8 தேவனுடைய வார்த்தை உபா 30:1-11
“நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை
உனக்கு மறைபொருளும் அல்ல,அது உனக்குத் தூரமானதும் அல்ல” (உபா 30:11)
தேவனுடைய வார்த்தையைக் குறித்தும், அதற்கு கீழ்படிவதைக் குறித்தும் அநேகர் பலவிதமான தப்பான எண்ணங்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகத்தில் நாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடப்பதென்பது முடியாது என்றும், எந்த ஒரு மனிதனும் அதன்படி வாழுவது என்பது கூடாத காரியம் என்றும் எண்ணுகிறார்கள். ஆகவே என்னாலும் அது முடியாது என்றும் சொல்லுவார்கள்.
அருமையானவர்களே அது அப்படிதானா? சாத்தான் நம்மை அவ்விதம் வஞ்சிப்பான். நம்முடைய சொந்த மனதும்கூட வஞ்சிக்கப்பட்டு அவ்விதம் எண்ணக்கூடும். ஆனால் வேதம் அதற்கு என்ன பதில் சொல்லுகிறது என்பதை பாருங்கள். ஏனென்றால் வேதம் சொல்லுவதே சரி. வேதத்தில் இல்லாத பதிலே இல்லை.
தேவனுடைய வார்த்தை முதலாவது மறைபொருள் அல்ல. மறைத்து வைக்கப்பட்டு வெளியரங்கமாகதப்படிக்கு, விளங்கிக்கொள்ளமுடியாதபடிக்கு தெளிவற்றதுமல்ல. தேவனுடைய வார்த்தை திறந்து வைக்கப்பட்ட புத்தகம். அதை நாடி வருகிறவர்களுக்கு அது ஒருபோதும் சத்தியத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதில்லை. நீ திறந்த மனதுடன், திறந்த இருதயத்துடன் தேவ வார்த்தையண்டை வரும்போது அது உன்னோடு பேசும். தேவனுடைய மக்கள் ஒவ்வொரு நாளும் இதற்கு சாட்சி பகருகிறார்கள். வேதத்தின் மூலம் தேவ ஆவியானவர் உன்னதமான தேவ சத்தியத்தை நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.
இரண்டாவதாக, தூரமானதுமல்ல என்று சொல்லப்படும்போது அது பின்பற்றுவதற்கு கடினமானதுமல்ல. தேவ வார்த்தைக்கு உன்னால் உன் சொந்த பெலத்தால் கீழ்படிய முடியாது. ஆனால் உன்னில் உள்ள தேவ ஆவியானவர் உன்னில் விருப்பத்தையும், செய்கையையும் உண்டாக்கி அவர் பெலத்தால் நீ செயல்படச் செய்கிறார். நீ தேவனிடத்தில் ஜெபிப்பாயானால் தேவன் உனக்கு ஏற்ற பெலனைக் கொடுத்து அவர் வார்த்தையின் படி வாழ உனக்கு கிருபை செய்வார்.