கிருபை சத்திய தின தியானம்

மே 19                       அதிசயமான காரியம்                 எரே 32:17-27

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்;

என்னாலே செய்யகூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரேமியா 32:27)

     இந்த உலகில் மாம்சமான எல்லா மனிதர்களுக்கும் அவரே தேவன். அவருடைய ஆளுகையின் கீழ் இல்லாத மனிதனும் இல்லை. அவருடைய ஆளுகைக்கு ஒரு மனிதனும் விலகி செல்லமுடியாது. ஒவ்வொரு மனிதனின் சிந்தை, எண்ணம், செயல்பாடு,யோசனை, பார்வை, திட்டம் அனைத்தும் இந்த தேவாதி தேவனின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இதை நாம் ஆழமாக மனதில் கொள்ளவேண்டும். ஒருவேளை எந்த மனிதன் நமக்கு எதிராக திட்டமிட்டாலும், யோசித்தாலும் அது கர்த்தரின் பார்வைக்கு மறைவானதல்ல. அவருடைய ஆளுகைக்கு உட்பட்டே அவன் அதை சிந்தித்து செயல்படமுடியும். அவர் எல்லைக்கு உட்பட்டே ஆரம்பிக்கவும் செயல்படவும் முடியும். சர்வலோகத்திலும் அவருடைய அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு செயல்படுவது எதுவும் இல்லை.

    அதிசயம் என்று சொல்லப்படுவது இந்த உலகத்தின் தன்மை, வழக்கத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில்  நடக்கிற ஒரு காரியம். எத்தனையோ விதமான அதிசயங்கள் உண்டு. இந்த உலகில் எல்லா அதிசயங்களைக் காட்டிலும் ஒரு பாவி இரட்சிக்கப்படுவதே மிகப்பெரிய அதிசயம். பாவத்திலும் அக்கிரமத்திலும் வாழுகிற மனிதன் நீதிகென்று  உயிர்த்தெழுவதே பெரிய அதிசயம். தேவனுடைய காணியாட்சிக்கு புறம்பாய் வாழ்ந்துக்கொண்டிருக்கிற மனிதன் தேவனுடைய அன்பின் அரவணைப்புக்குள் இழுக்கப்படுவதே அதிசயம்.

    அன்பானவர்களே! உங்களுடைய வாழ்க்கையில், உங்களுக்கு அன்பானவர்கள் வாழ்க்கையில், தேவன் அவ்விதம் இரட்சிப்பின் அதிசயத்தைச் செய்வதைக் காட்டிலும் மேலான அதிசயம் ஒன்றுமில்லை. தேவன் என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ என்று கேட்கிறார். தேவனை சோதித்துப் பாருங்கள். தேவன் அதிசயம் செய்கிறவராக நீங்கள் காணமுடியும்.