கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 30                         குடும்ப சாட்சி                     யோசுவா (24 :1–15)

“நானும் என் வீட்டருமோவென்றால்,

கர்த்தரையே சேவிப்போம்யோசுவா (24:15)

    யோசுவா தன்னுடைய பணியின் கடைசி நாட்களில் இஸ்ரவேல் மக்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார். கர்த்தரைச் சேவிப்பது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரை சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துக்கொள்ளுங்கள். (யோசுவா 24:15). இந்த கேள்வியைக் கேட்டதோடு நின்றுவிடாமல் அந்த மக்களைப்பார்த்து சொன்னார்’ நானும் என் வீட்டருமோ வென்றால் கர்த்தரையே சேவிப்போம்.’  எவ்வளவு அருமையான குடும்ப சாட்சியை அவர்களுக்கு முன்பாக யோசுவா வைத்தான் பாருங்கள்! நீங்கள் அவ்விதம் சொல்லக்கூடுமா?

    குடும்பத்தை தேவப் பக்திக்குள்ளாக கட்டுவது சாதாரண காரியமல்ல. அதில் அநேக பொறுப்புள்ள காரியங்கள் உண்டு. அநேக வீடுகளில் குடும்ப ஜெபம் கிடையாது. அதை அற்பமாக அலட்சியப்படுத்துகிறார்கள். குடும்ப ஜெபத்தில் கர்த்தரைத் துதித்துப்பாடி, தேவனுடைய வார்த்தையை சிந்திப்பது எவ்வளவு அவசியம் என்பதை உணருவதில்லை. ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிற போதும் அவைகளைக்குறித்துப் பேசி.’ (உபாகமம் 6:6,7) அன்பான பெற்றோர்களே! நீங்கள் இந்த விசயத்தில் தவறும்போது தேவனுக்குக் கீழ்படிவதில்லை.

      இன்றைக்கு அநேக பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும், நல்ல வேலைக்கு போகவேண்டும் என்று வாஞ்சிக்கிறார்கள். ஆனால் கர்த்தருக்குள் வளரவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில்லை. ஓய்வு நாட்களில் தங்கள் பிள்ளைகள் ஆலயத்துக்குப் போவதையும் புறக்கணித்து டியூஷன்களுக்கு அனுப்புகிறார்கள். இவ்விதமானவர்கள் எப்படி கர்த்தருக்கேற்ற குடும்ப சாட்சியைக் கொடுக்கமுடியும்? உங்கள் குடும்ப சாட்சி எப்படி இருக்கிறது? தேவனிடத்தில் திரும்புங்கள்.