“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்” (யோவான் 8:12).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறார். ஒரே ஒரு சூரியன் இந்த உலகம் முழுவதற்கும் வெளிச்சத்தைக் கொடுப்பதைக் குறித்து நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் என்றைக்கு ஆதாம் ஏவாள் பாவம் செய்தார்களோ, அன்றைக்கே ஆவிக்குரிய இருள் பிரவேசித்தது. ஆவிக்குரிய இருளுக்கு ஆண்டவருடைய வெளிச்சம் தேவை. இது மிகப் பெரிய ஒரு ஆவிக்குரிய ஆசீர்வாதம். ஒரு மெய்யான கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில், அவன் இனிமேலும் இருளில் தடுமாறுகிறவன் அல்ல. அவனுடைய வாழ்க்கையில் நிச்சயமில்லாதவனாகவும் ஓடுகிறவனும் அல்ல. ஏனென்றால் அவன் ஒளியில் நடக்கிறவனாக இருக்கிறான். மேலும் அவன் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்று வேதம் சொல்லுகிறது. உலகத்தில் ஒளி வந்திருந்தும் ஜனங்கள் இருளை நேசிப்பதினால் ஒளியைப் பகைக்கிறார்கள். ஆனால் ஒரு மெய்யான ஆவிக்குரிய மனிதன் இருளை அவன் வெறுத்து, ஒளியை நேசித்து அதைப் பின்பற்றுகிறவனாக இருக்கிறான். ஏனென்றால் தேவனே அவனை வழிநடத்திச் செல்கின்றார். முற்றும் முடிய இரட்சிக்கிறவராக இருக்கிறார். நித்தியத்திற்கு நம்மைக் கொண்டு செல்லுகிறவராய் இருக்கிறார். என்ன ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை! தேவன் அவ்விதமாக நம்மை ஆசீர்வதிப்பாராக.