“எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” (மாற்கு 8:33).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பேதுருவைப் பார்த்துச் சொன்ன இந்த பதில் ஒருவேளை கடுமையாகக் காணப்படலாம். சாத்தான் இவ்விதமான சிந்தையைப் பேதுருவுக்குக் கொடுத்து அவனைப் பேச வைக்கிறான் என்பதை இயேசு அறிந்துகொண்டார். ஆகவேதான் எனக்குப் பின்னாகப் போ சாத்தானே என்று சொல்லுகிறார். மனிதர்களின் எண்ணங்களை சாத்தான் பாதிக்கக்கூடுமா? ஆம் கூடும். ஒருவேளை நீங்கள் சந்திக்கும் உங்கள் அருமையான மக்களிலும் சாத்தான் தூண்டிப் பேச வைப்பதற்கு வாய்ப்புண்டு. ஆனால் இவ்விதமான சூழ்நிலைகளில் நாம் சோர்ந்துபோக வேண்டிய அவசியமில்லை. இயேசு இங்கு சொல்லுகிறார், தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று. ஒருவேளை உங்கள் சொந்த மக்களும் தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்கக்கூடாதபடி உங்கள் சிந்தைகளை திசைதிருப்பச் செயல்படக் கூடும். நாம் அவர்களிடத்தில் எதிர்த்து நின்று பேச வேண்டிய அவசியமில்லை. இந்தக் காரியங்களை நாம் விளங்கிக்கொண்டு ஞானமாய் நடந்துகொள்வது அவசியம். நாம் அந்த சமயங்களில் அமைதியாகவும் ஜெபத்தோடும் சந்திப்போமானால், நாம் சாத்தானுக்கு எதிர்க்கிறவர்களாகவும் தேவனுக்கு ஏற்றவைகளை சிந்தித்துச் செயல்படுகிறவர்களாகவும் காணப்படுவோம். ஒருவேளை நாம் அந்த சூழ்நிலையில் கோபப்பட்டு பேசும்போது நாம் நம்முடைய ஆவிக்குரிய நிதானத்தை இழந்துவிடுவோம். ஆகவே அதில் ஜாக்கிரதையாக இருப்போம்.