“கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்” (சங்கீதம் 94:14).
தேவனுக்குத் தம்முடைய ஜனங்கள் விலையேறபெற்றவர்கள். தம்முடைய ஜனங்கள் அவருடைய விலையேறபெற்ற இரத்ததினால் மீட்கப்பட்டவர்கள். அவர்களை அவர் தள்ளிவிட மாட்டார். ஏனென்றால் அவரே மிகுந்த விலைக்கிரயத்தைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டவர். மேலும் தம்முடைய சுதந்திரத்தைக் கைவிடாமலும் இருப்பார் என்று வேதம் சொல்லுகிறது. அவரால் மீட்கப்பட்ட மக்கள் அவருடைய சுதந்திரம். அவர்களுக்காக மிக விலையேறபெற்ற கிரயத்தை செலுத்தின கர்த்தர், நிச்சயமாக ஒருநாளும் அவர்களைக் கைவிட்டுவிட மாட்டார். ஏனென்றால் அவர்களைப் பாதுகாப்பதும் போஷிப்பதும் வழிநடத்துவதும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடியவைகள். அவர்களுக்காக இந்த உலகம் உண்டாகுகிறதற்கு முன்பாகவே திட்டமிட்டவராய் அவர்களை மீட்டுக்கொண்டவர். அவர் முற்றும் முடிய இரட்சிக்கிறவர். ஒருக்காலும் தம்முடைய மக்களைத் தள்ளிவிடவும் மாட்டார் கைவிடவும் மாட்டார். தேவனுடைய வார்த்தையை ஒரு சிறு குழந்தையைப் போல ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாய் நாம் இருகிறோமா? அவ்விதமாய் தேவனுடைய வார்த்தையை நம்புவோமானால் அது என்ன ஒரு ஆசீர்வாதமான காரியம்! தேவனுடைய வார்த்தையைச் சார்ந்து வாழுகிற வாழ்க்கையைப் போல ஒரு மகிமையான வாழ்க்கை வேறில்லை.