“எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்” (நீதி 1:33).
ஆண்டவருக்கு நாம் எப்படி செவிகொடுக்கிறவர்களாகக் காணப்பட முடியும்? அவருடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு அதின் அடிப்படையில் வாழுகிற வாழ்க்கையின் மூலமாகவே. அவ்விதமாக வாழும்போது என்ன ஒரு அருமையான ஆசீர்வாதம் இருக்கிறது என்பதைக் குறித்து அருமையாய்ச் சொல்லுகிறார், விக்கினமின்றி வாசம்பண்ணி அதாவது ஒரு மெய்யான பாதுகாப்பு நமக்கு கிடைக்கின்றது. இதுவே இந்த உலகத்தில் கிடைக்கக்கூடாத மிகப்பெரிய பாதுகாப்பு. மேலும் ஆபத்திற்குப் பயப்படாமல் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக பயம் என்பது மனிதனுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு விதத்தில் அவனை அதிகமாக பாதிக்கின்றது. எதிர்பாராத பல திருப்பங்கள், ஏமாற்றங்கள் பலவிதமான பிரச்சனைகள் நெருக்கங்களை சந்திக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் நாம் ஆண்டவருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கும்பொழுது, இவ்விதமான ஆபத்திற்கு நாம் பயப்படாமல் இருப்பது மாத்திரமல்ல, அமைதியாயிருப்போம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த உலகத்தில் மெய்யான அமைதியுள்ள வாழ்க்கை நாம் தேவனில் நிலைத்திருக்கும்பொழுது மாத்திரமே. அது எவ்விதம் என்றால், ஆண்டவருடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு வாழுகிற வாழ்க்கையின் மூலமாகவே. இதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்வது அவசியம். இல்லையென்றால் நாம் மற்ற மனிதர்களைப் போல பயத்தினாலும் நெருக்கத்தினாலும் பல விதங்களில் நாம் பாதிக்கப்பட்டு ஒரு இளைபாறுதலற்ற ஒரு வாழ்க்கையைக் கொண்டிருக்கிறவர்களாக காணப்படக் கூடும். தேவனுடைய வார்த்தையை நாம் பற்றிக் கொள்வோம். அதில் நாம் சார்ந்து இளைபாறுதல் அடைந்து ஆபத்துக்கு பயப்படாமல் சுகமாய் வாழக் கற்றுக்கொள்வோம். அதுவே நமக்கு மெய்யான பாதுகாப்பு. தேவன் அவ்விதமான வழிகளில் பிரியமாய் இருக்கிறார்.