டிசம்பர் 7
“அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்”(2 இராஜா 6:16).
எலிசாவை சுற்றியிருந்த ஆபத்தைப் பார்த்தப் பொழுது எலிசாவின் வேலைக்காரன் கேயாசி பயந்ததைக் குறித்து நாம் பார்க்கிறோம். இராணுவமும், குதிரைகளும், படைகளும் பட்டணத்தை சுற்றிருப்பதை பார்த்த வேளையில் எலிசாவின் வேலைக்காரன் கலங்கி ஐயோ என் ஆண்டவனே என்ன செய்வோம் என்றான்? அருமையானவர்களே எலிசா ஒரு விசுவாசமுள்ள ஒரு மனிதனாக இருந்ததினால், கர்த்தர் தன்னை நிச்சயமாக பாதுகாத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவன் விளங்கிக் கொண்டு விசுவாசித்தத்தைப் பார்க்கிறோம். ஆகவே தான் 2 இராஜா 6:16 -ல்”பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்”.
மெய்யாலுமே தேவன் தன்னுடைய பிள்ளைகளை சூழ பாளயமிறங்கி, கர்த்தருடைய தூதர்களைக் கொண்டு அவர் எப்பொழுதுமே பாதுக்காகிறவராகவே இருக்கிறார். இஸ்ரவேல் மக்கள் சிவந்த சமுத்திரத்தின் முன்னாள் நின்றபொழுது, மோசே அவர்களை நோக்கி “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்”என்று சொன்னான். அருமையானவர்களே தேவன் நம்முடைய வாழ்க்கையில் மெய்யான பாதுகாவலவராக, இரட்சகராக இருக்கிறார் என்பதை எந்த சூழ்நிலையிலும் மறந்து போய்விடக்கூடாது.
எலிசா விண்ணப்பம் பண்ணினபொழுது அவனுடைய வேலைக்காரன் “இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்”(2 இராஜா 6:17) என்று பார்க்கிறோம். மலை முழுவதுமாக தேவனுடைய சர்வ சேனைகள் நின்றுகொண்டிருப்பதை அந்த வேலைக்காரன் பார்த்தான். அருமையானவர்களே தேவன் தம்முடைய ஜனங்களை சூழ பாளயமிறங்கி விடுவிக்கிறார்.