மார்ச் 8     

“தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்” (யோவான் 4:24).

கிறிஸ்தவ வாழ்க்கையில் அதி முக்கியமான ஒன்று தேவனோடு கொண்டிருக்கின்ற ஜீவனுள்ள தொடர்பு. நாம் இதைச் சரியாய் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால், ஆதியாகமத்தில் தேவன் சொன்னார், “பாவம் செய்கிற ஆத்துமா சாகவே சாகும்.” ஆண்டவர் மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கி, அவனுக்குள் ஜீவ சுவாசத்தை ஊதினார். அவன் ஜீவ ஆத்துமவானான் என்று வேதம் சொல்லுகிறது. அதாவது ஆவியாயிருக்கிற தேவனோடு தொடர்பு கொள்கிற மனிதனாக அவன் மாறினான். தேவன் உண்டாக்கின சகலவிதமான பறவைகள் விலங்குகளை ஆதாமிடத்தில் கொண்டு வந்து அவைகளுக்குப் பெயரிடும்படிச் செய்தார். தேவனுக்கும் மனிதனுக்கும் ஒரு ஜீவனுள்ள தொடர்பு அங்கு காணப்பட்டது. ஆனால் அவன் பாவம் செய்தபொழுது தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டது. நம்முடைய வாழ்க்கையில் இரட்சிப்பு என்பது தேவன் ஏற்படுத்தின ஒரு மகத்துவமான திட்டம். தேவன் ஒரு ஆத்துமாவைத் தெரிந்துகொண்டு அழைத்து அந்த ஆத்துமாவில் மனந்திரும்புதலின் விசுவாசத்தைக் கொடுக்கிறார். அப்பொழுது மனிதன் தேவன் பக்கமாகத் திரும்புகிறான். மறுபடியும் பிறக்கும்படியான காரியத்தைத் தேவன் செய்கிறார். அப்போது தேவனோடு கொண்டிருந்த உறவு மறுபடியும் புதுப்பிக்கப்படுகிறது. இது கிறிஸ்தவ வாழ்க்கையின் அதி முக்கியமான காரியம். ஒருவேளை நாம் வேதத்தை வாசிக்கலாம், ஜெபிக்கலாம், ஆனாலும் தேவனோடு ஒரு ஜீவனுள்ள தொடர்பு அற்ற வாழ்க்கையும் வாழ வாய்ப்புண்டு. ஜீவனுள்ள தொடர்பு என்பது தேவனோடு முற்றிலும் இணைந்த ஒரு வாழ்க்கை. இந்த ஜீவனுள்ள தொடர்பில் சிறிய அளவில் பாதிக்கப்படும் பொழுதும் அவர்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் செயல்படுவதின்மூலமாக,  அவர்கள் மறுபடியும் இந்தத் தொடர்பைப் புதுப்பித்துகொள்ளும்படியான ஒரு மனந்திரும்புதலுக்கான காரியம் அவர்களில் காணப்படும். பவுல் சொல்லுகிறார், “கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?” ஆகவே இரட்சிப்பு என்பது ஒரு மகத்துவமான காரியம். தேவனுடைய அன்பின் மிகப்பெரிய ஈவே இரட்சிப்பு.