“அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு” (எபிரெயர் 5:7).
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாம்சத்தில் இருந்த நாட்களில் உரத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபித்தார் என்று வேதத்தில் பார்க்கும்போது நம்முடைய வாழ்க்கையில் இன்னுமாக நாம் ஜெபத்தில் எழும்ப வேண்டிய அவசியத்தை உணர முடிகிறது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக, “எனக்காக அழாதேயுங்கள், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்று சொன்னார். என்னுடைய வாழ்க்கை மெய்யாலுமே மற்றவர்களுக்கு ஆசீர்வாதமுள்ளதாய் இருக்கிறதா? என்னுடைய வாழ்க்கை ஆண்டவருடைய ராஜ்யத்திற்கு ஒரு பிரயோஜனமுள்ளதாகக் காணப்படுகிறதா? மேலும் இயேசு கிறிஸ்து உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று சொல்லுகிறார். நம்முடைய பிள்ளைகளுக்காக நாம் கண்ணீரோடே ஜெபிப்பது மிக அவசியமாயிருக்கிறது. ஆகவே நமக்காகவும் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருக்காகவும் நாம் ஜெபிக்கக் கடமைபட்டுள்ளோம். சங்கீதம் 126:5-6 “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.” கெம்பீரத்தோடே அறுக்க விரும்புகிறோம் ஆனால் கண்ணீரோடே விதைக்கின்றோமா? விதை என்பது கர்த்தருடைய வசனம் என்று சொல்லப்படுகிறது. அநேக மக்கள் கர்த்தருடைய வசனத்தைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் மெய்யாய் அதினால் பாதிக்கப்படுவதோ, ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பதோ அவர்களில் காணமுடிவதில்லை. நம்முடைய வாழ்க்கையை எந்தளவுக்கு ஆவிக்குரிய பிரகாரமாகச் செலவிடுகிறோம் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. கண்ணீரோடு ஜெபிக்கின்ற ஜெபம் என்பது இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்து, வைத்துப்போன முன்மாதிரியான ஜெபமாய் இருக்கிறது.