ஆகஸ்ட் 18                        

“தேவனலே கூடாத காரியம் ஒன்றுமில்லை” (லூக்கா 1 : 37)

      நமது தேவன் சர்வவல்லவர். அவரால் கூடாதது எதுவும் இல்லை. மரியாள் கர்ப்பவதியானாள் என்பதை தேவன் அவளிடத்தில் சொன்னபோது ‘இது எப்படியாகும்? என்று கேட்டாள். அப்பொழுது அவளுக்கு இந்த பதில் கொடுக்கப்பட்டது. யோபு இவ்விதம் சொல்லுகிறார். தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்’ (யோபு 42:2). ஆம்! இந்த தேவன் செய்வதைத் தடுப்பவன் யார்? (ஏசாயா 43:13) என்று தேவன் கேட்கிறார். இவரே சர்வத்தையும் உண்டாக்கினவர், சர்வத்தையும் ஆளுகிறவர்.

  ஆனால் இந்த வசனம் அநேக மக்களால் தவறாக விளங்கிக் கொள்ளப்படுகிறது, அதே சமயத்தில் அநேக ஊழியர்களாலும் தவறாக விளங்கிக்கொள்ளப்படுகிறது. முக்கியமாக ஜெபத்தில் இந்த வசனத்தை உபயோகப்படுத்தி தாங்கள் விரும்புகிற எந்த காரியமாக இருந்தாலும் அதை கைகூடிவரபண்ணுவார் என்று பலவிதமாக இந்த வசனம் உபயோகப்படுத்தப்படுகிறது. மெய்யாலும் தேவன் அற்புதங்களை செய்யவல்லவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் தேவாதி தேவன், கர்த்தாதி கர்த்தர், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். ஆகவே தேவன் அவ்விதம் உன் வாழ்வில் அற்புதம் செய்யமுடியும் என்று எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை. அப்படியானால் இதில் இருக்கும் தவறு என்ன? நம்முடைய வாழ்க்கையில் தேவை, போராட்டம், சோதனை, நெருக்கம், பாடு ஆகிய இவைகளைத் தேவன் அனுமதிப்பாரானால், முதலாவது நாம் அறியவேண்டியது ஏன் என் வாழ்க்கையில் தேவன் இதை அனுமதித்திருக்கிறார், என்ன நோக்கத்தோடு இது எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும். தேவனிடத்தில் இந்த கேள்விகளோடு போய் ஜெபிக்கலாம். தேவன் நிச்சயமாக அதில் நம்மை நடத்துவார். அதில் ஏற்ற வழியில், ஏற்ற நேரத்தில், சரியான விதத்தில், அதற்குப் பரிகாரத்தை, விடுதலையை தேவன் கொடுப்பார். இவ்விதமான வேத அடிப்படையிலான விசுவாசம், வெறும் அற்புதங்கள், அடையாளங்களை நம்பி நம்மை ஏமாற்ற செய்யாது.