கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 10                  புத்தியுள்ள ஸ்திரீ            நீதி 14:1-12

“புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத

ஸ்திரீயோ தன் கைளினால் அதை இடித்துப் போடுகிறாள்” (நீதி. 14 : 1)

               ஒரு குடும்பத்தில், ஒரு சமுதாயத்தில், ஒரு வீட்டில் ஸ்திரீயின் பங்கு மிக முக்கியமானது. வேதம் பல தேவ பக்தியுள்ள ஸ்திரீகளைக் குறித்துச் சொல்லுகிறது. அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை எவ்வளவு பெரிய ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்திருக்கிறதென்பதைக்குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்திரீ ஞானமுள்ளவளாயிருந்தால், அந்த வீட்டில் பெரிய ஆசீர்வாதத்தின் கருவியாக இருக்கிறாள். அவளுடைய கணவனுக்கும், பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளாய் இருக்கிறாள். கணவன் சோர்ந்துபோகிற வேளையில், கர்த்தருக்குள்ளாக உற்சாகப்படுத்துகிறவளாய் இருக்கிறாள். மற்றவர்கள் அந்தக் குடும்பத்தைப் பார்க்கும்பொழுது தேவன் மெய்யாலும் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார் என்று சொல்லக்கூடிய குடும்பமாயிருக்கிறது. ஒருவேளை பணம், பொருள் அதிகம் இல்லையென்றாலும் விலையேறப் பெற்ற தேவ சமாதானம் அந்தக் குடும்பத்தில் காணப்படுகிறது. தேவனுடைய நாமமும் அதினால் மகிமைப்படுகிறது.

         ஆனால் புத்தியில்லாத ஸ்திரீயைப் பற்றி என்ன சொல்லுகிறது? ‘அவள் தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.’ அவள் கணவன் சோர்ந்திருந்தால் இன்னும் அதிகம் சோர்வுக்குட்ப்படுத்துகிறாள். பிள்ளைகளை கர்த்தருக்குள் வழிநடத்தி அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்று வாஞ்சிப்பதில்லை. கோபமும், எரிச்சலுமாய் பேசுகிறாள். அவள் குடும்ப வருமானம் அறிந்து அதற்கேற்ற வண்ணமாக சிக்கனமாக செலவிடுவதில்லை. அந்தப் பொருள், இந்தப் பாத்திரம்  அந்த உடைகள், இந்த நகை, அந்த நகை பொன் நகைவேண்டும் என்று வாஞ்சித்து புன்னகையை இழக்கும்படி கடன் வாங்கியாகிலும் அவைகளைப் பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறாள். பிறகு அந்த கடனை எப்படிக் கட்டுவது என்பதை யோசிக்கமாட்டாள். நீ எவ்விதம் இருக்கிறாய்? தேவ ஞானத்தைத் தேடு. அது உன் வீட்டைக் கட்டும் .