ஏப்ரல் 13
“வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்” (லூக்கா 16:17).
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வேதத்தைக் குறித்து இவ்வளவு அழுத்தமாக சொல்லி இருந்தும், நாம் ஏன் வேதத்தை முழுமையாக விசுவாசிக்கத் தவறுகிறோம்? இன்றைக்கும் கர்த்தர் இந்த வேத வசனங்களின் மூலமாகத் தம்மை வெளிப்படுத்தி நம்மோடு கூட பேசுகிறார். அதைக் குறித்த உறுதியான மனநிலையும், விசுவாசமும் நமக்குத் தேவை. இந்த காலங்களில் ஆண்டவருடைய வார்த்தை புறக்கணிக்கப்பட்டு, வெறும் மாயையை சார்ந்த கிறிஸ்தவ வாழ்க்கையை நாடும்படியான பெரும் கூட்டத்தின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இந்த வேதத்தில் ஒரு எழுத்தின் பகுதி ஒழிந்து போவதைப் பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிது என்று சொல்லுகிறார்.
நம்முடைய வாழ்க்கையில் வேதத்தைக் குறித்த ஆழமான உறுதியைப் பெறும்படியாக நாம் வேதத்தை வாசிக்க வேண்டும். வேதத்தை வாசிப்பது மட்டும் போதாது, அதை எந்த அளவிற்கு விசுவாசிக்கிறோம் என்பதே முக்கியமான கேள்வி. அநேகர் வேதத்தை வாசிக்கிறார்கள். ஆனால் அதை எந்த அளவுக்கு அதை நம்புகிறார்கள் என்பது கேள்விக்குறியே. “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” (லூக்கா 21:33) என்று தேவன் சொல்லுகிறதை நாம் அறிந்திருக்கிறோம். கர்த்தருடைய வசனத்தை நாம் ஆழமாக பற்றிக்கொள்ளவில்லை யென்றால் நாம் அவருடைய வார்த்தையை நம்பத் தவறுகிறோம். “கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே” (1 பேதுரு 1:25) என்று பேதுருவும் சொல்லுகிறார். ஆண்டவருடைய வசனம் நம்முடைய வாழ்க்கையில் தேவை. அதை நாம் உறுதியாக பற்றிக்கொள்வது மிக அவசியம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.