ஆகஸ்ட் 31                      

“நானோ தேவனை நோக்கிக்கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்”(சங்கீதம் 55:16)

 மனிதர்கள் இந்த உலகத்தில் தேவனை நோக்கிக் கூப்பிடாமல் வாழுகிறார்கள். அவர்கள் பொய்யானவைகளை நம்பி அவைகளை பின் தொடர்கிறார்கள். முடிவில் ஏமாந்துபோவார்கள். ஆனால் நானோ என்னை இரட்சிக்கும் என் தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். அவர் என்னை எல்லா இக்கட்டிற்கும் நீங்கலாக்கி இரட்சிப்பார். அவர் என்னுடைய கூப்பிடுதலுக்குச் செவிகொடுப்பார். சங்கீதக்காரனின் நம்பிக்கையைப் பாருங்கள்.

    அடுத்த வசனத்தில் “அந்தி சந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன் அவர் என் சத்தத்தைக் கேட்பார்”(சங் 55:17). தாவீது ஒழுங்கான ஜெபவாழ்க்கையைக் கொண்டிருந்தான் என்பதை இதன் மூலம் அறிகிறோம். நாம்  வேலைச்செய்யும்படி அலுவலகத்திற்கு போவதானால் குறிப்பிட்ட நேரத்திற்குப் போகிறோம். அதைக்காட்டிலும் அதிக முக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இவ்விதமான குறிப்பிட்ட நேரங்களைக் கொண்டிராமல் இருப்போமானால் நாம் எவ்விதம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரமுடியும்.? ஒழுங்கான ஜெப நேரங்களை கொண்டிராதவர்கள் ஜெபத்தில் அதிகம் வளரமுடியாது. தாவீதைப் போல நம்முடைய இக்கட்டான நேரங்களில் நாம் அதிகமாய் ஜெபிக்கவேண்டும். ஆண்டவராகிய இயேசு சீஷர்களைத் தெரிந்தெடுப்பதற்கு முன் இராமுழுதும் ஜெபித்தார் என்று பார்க்கிறோம்.

    ‘மேலும் தாவீது, நான் தியானம் பண்ணி முறையிடுவேன்’ என்றும் சொல்லுகிறார். நாம் ஜெபிப்பதற்கு முன் தேவனுடைய வார்த்தையை தியானித்து ஜெபிப்பது, நாம் ஜெப ஆவியில் பிரவேசிப்பதற்கு அதிக துணையாக இருக்கும். தேவனுடைய வார்த்தையினால் நம் இருதயத்தை அனல் மூட்டி, தேவனைக் குறித்து தியானித்து நாம் தேவனுடைய சர்வவல்லமையை, மகத்துவத்தை உணர்ந்து ஜெபிக்கும் போது நமது ஜெபமும் வல்லமையுள்ளதாய் இருக்கும். அது நாம் ஊக்கமாக ஜெபிக்க நமக்கு உதவி செய்யும். இவ்விதமான ஒழுங்கான ஜெபவாழ்க்கை உங்களிடத்தில் உண்டா? இல்லையேல் இன்றே ஜெபியுங்கள். இது மிக அவசியமானது.