“நான் கர்த்தர் என்று அறியும், இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்” (எரேமியா 24:7). 

நம்முடைய வாழ்க்கையில் இவரே தேவன் என்பதை அறியும் இருதயத்தைக் கொடுப்பார் என்றால் அது எவ்வளவு ஆச்சரியம்! இந்த உலகத்தில் எத்தனையோ மக்கள் ஆண்டவரை அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிருபையாக தேவன் இந்த மகத்துவமான காரியத்தை நம்முடைய வாழ்க்கையில் செய்வேன் என்று சொல்வார் என்றால் அதைப் போல மகிமையான காரியம் ஒன்றுமில்லை. மேலும் அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்றும் தேவன் சொல்லுகிறார். முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புவார்கள் என்றும் சொல்லுகிறார். தேவனுடைய மகத்துவமான செயல் என்பது இந்த உலகத்தில் அவரை அறிகிற அறிவைக் கொண்டு வாழுகிற வாழ்க்கை மட்டுமே. மற்ற எல்லாம் வீண். இந்த உலகம் மாயை. இந்த உலகத்தின் காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும். ஆனால் ஆண்டவரை அறிகிற அறிவு ஒரு மனிதனுக்குள் இருக்குமானால் அவன் இந்த உலகத்தில் எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கிறவனாய் இருக்கிறான்! அவன் மெய்யாலுமே ஆசீர்வாதமுள்ள ஒரு வாழ்க்கையை வாழுகிறவனாகக் காணப்படுவான். தேவனை அறியாமல் மாயைப் பின்பற்றிப் போகிற இந்த வேளைகளில், தேவன் நமக்கும் இன்னும் அதிக அளவில் அவரை அறிகிற அறிவை நமக்குக் கொடுப்பாராக. மேன்மேலும் அவரை அறிவதே நித்திய ஜீவன். எந்தளவுக்கு ஒரு மனிதன் தேவனையும் அவர் குணாதிசயங்களையும் அறிந்திருக்கின்றானோ அந்தளவுக்கு அவன் தன் வாழ்க்கையில் விசுவாசத்தில் பெலப்படுவான். அந்தளவுக்கு அவன் தேவனுக்கென்று வாழுகிற அர்ப்பணிப்பைக் கொண்டவனாய் காணப்படுவான். அவருக்குப் பிரியமானவனாய் வாழுவான்.