அக்டோபர்  15       

“உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி” (சங்கீதம் 103 :4)

                          தேவன் நம்முடைய ஆத்துமாவில் செய்திருக்கிற மகத்துவமான காரியத்தை அடிக்கடி நினைவு கூற வேண்டும். அது நம்முடைய இருதயத்தை நன்றி உணர்வினால் நிரப்பும். உன் ஆத்துமாவை அழிவுக்கு விலக்கி மீட்டிருக்கிறார். நரக ஆக்கினைக்கு, பாவத்தின் தண்டனைக்கு, பாவத்தின் ஆளுகையால் பாவத்தின் அடிமைத்தனத்தினால் சீர்கெட்டு அழிந்து போகாதபடிக்கு, தேவன் நம்மை மீட்டிருக்கிறார். இந்நாளில் தேவன் அவ்விதம் மீட்காதிருப்பாரானால்  மற்ற கோபாக்கினையின் பிள்ளைகளைப் போலவே நீயும் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பாய். பரிசுத்த பாதையை அறியாதிருப்பாய். உன் வாழ்க்கை அநேகருக்கு இடறலாகவும், ஏன் உன் சொந்தக் குடும்பத்தாருக்கும், ஜனங்களுக்குமே சாபமாகவும் இருந்திருக்கும். உன்னில் இன்று பாவத்தின் விடுதலையினால் கிடைக்கும் சமாதானத்திற்கு பதிலாக, கலவரமும் குழப்பமுமே மிஞ்சியிருந்திருக்கும்.

“அவர் நம்மை சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குச் சொந்த ஜனங்களாகவும், நற்கிரியகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மை சுத்திகரிக்கும்படி, நமக்காக தம்மைதாமே ஒப்புக்கொடுத்தார்.” (தீத்து 2:14) அவர் உன்னை மீட்டது மாத்திரமல்ல, உன்னை தமக்கு சொந்தமாக்கிக் கொண்டார். அநேகர், ஒருவேளை உன்னை சொந்தமென்று சொல்லக்கூட வெட்கப்பட்டிருக்கலாம். ஆனால் பாவியாகிய ஒரு மனிதனை உரிமையோடு தமக்குச் சொந்தமாக்கிக்கொள்வதுதான் கிருபை அதோடு மாத்திரமல்ல, முடிசூட்டி என்று சொல்லப்படுவது தம்முடைய கிருபையை, இரக்கத்தைத் தொடர்ந்து உன் மேல் பொழிந்தருளுகிறார். கிருபையினால் இரட்சித்த தேவன், தொடர்ந்து கிருபையினால் உன்னைக் காத்து வழிநடத்துகிறார். இந்தக் கிருபை உன்னில் உன்னத மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நீ நற்கிரியை செய்கிறவனாய் மாற்றப் படுகிறாய் . துர்கிரியையின் மனிதனாக இருந்த உன்னை, இவ்விதம் புதிய மனிதனாக தேவன் உருவாக்கினதே கிருபை.