“என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங்கீதம் 66:18)

இந்த இடத்தில் சங்கீதக்காரன் தன்னுடைய வாழ்க்கையில் அக்கிரமசிந்தை இருக்குமானால் தேவன் தன்னுடைய ஜெபத்திற்கு பதில் அளிக்க மாட்டார் என்பதை குறித்து தெளிவாக உணர்ந்து பேசுவதை பார்க்கிறோம். நம்முடைய சிந்தையைக் குறித்து எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அநேக நேரங்களில் நம்முடைய எண்ணங்கள் சரியாக இருப்பதில்லை. நம் மனதில் பொறாமைகளும் மற்ற தீமையான எண்ணங்களையும் நாம் கொண்டிருந்தோமானால் நம்  ஜெபமானது தேவனால் கேட்கப்பட முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் ஒன்று தேவனுக்கும் நமக்கும் இடையில் எந்த பாவம் இருந்தாலும் அது தேவனோடு நம்மை இணைக்க வொட்டாது. இந்த இடத்தில் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருப்பதை குறித்து சொல்லுகிறார். அது  தேவனுக்கு அருவருப்பானதும், நம் ஜெபம் தேவனால் நிராகரிக்க  போதுமானதாக இருக்கிறது. இன்றைக்கு அநேக மக்கள் ஜெபிக்கிறார்கள். ஜெபிப்பது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய இருதயத்தைக் குறித்து சிந்திப்பதில்லை. அடுத்த வசனத்தில் மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார் என்று சொல்லுகிறார்.  நம் வாழ்க்கையில் ஆண்டவருக்கு முன்பாக நம் இருதயத்தில் எண்ணங்கள் சரியானதாக இல்லை என்று நாம் உணர்வோமானால், நாம் கர்த்தருடைய சமூகத்தில் நம்மை தாழ்த்தி ஜெபிப்பது மிக முக்கியமானதொரு காரியம். நாம் சரியான விதத்தில் ஜெபிக்கும் பொழுது நம்முடைய ஜெப வாழ்க்கையானது இன்னும் அதிக பிரகாசமாக இருக்கும். நம்முடைய ஜெபமானது தேவனால் அங்கீகரிக்கப்டும். அதில் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பார்க்க முடியும்.