“எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்” (சங்கீதம் 32:1).

நாம் நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் பாவத்தைக் குறித்த உணர்வைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அநேக வேளைகளில் நம்முடைய சுய நீதியைக் கொண்டு வாழுகிற வாழ்க்கையைக் கொண்டிருக்கும்பொழுது, நாம் பாவத்தைக் குறித்த உணர்வற்றவர்களாக வாழுவோம். நாம் நம்முடைய மீறுதல்களை தேவனிடத்தில் அறிக்கையிட்டு அவரோடு ஒப்புரவாகும்போது மிகுந்த சந்தோஷம் காணப்படும். இரண்டு காரியங்கள் கர்த்தர் நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். ஒன்று அவருடைய சமாதானம், மற்றொன்று அவருடைய மகிழ்ச்சி. இது நமக்கு அளவு கோலாக இருப்பது அவசியம். தேவனுடைய பிள்ளைகளில் இந்த இரண்டு காரியங்களும் எப்பொழுதும்  காணப்படும். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவரிடத்தில் மனந்திரும்ப எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாக இருப்போம். எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான் என்று வேதம் சொல்லுகிறது. நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிடும்பொழுது, ஆண்டவர் அந்தப் பாவங்களை மன்னிக்கிறார். அதை மறந்துவிடுகிறார். அநேக வேளைகளில் நமக்குப் போராட்டங்கள் நெருக்கங்கள் வரும்பொழுது, நாம் மறுபடியுமாக நம்முடைய பழைய பாவங்களைக் குறித்து அறிக்கையிட்டுக் கொண்டிருப்போம். நம்முடைய பாவங்களை ஏற்கனவே ஆண்டவர் மன்னித்து அதை மூடிவிட்டார். ஆகவே அவைகளை நாம் மறுபடியுமாக அறிக்கையிட வேண்டிய அவசியமில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமை மிகப் பெரியது. அதை நாம் மறுபடியும் நினைவுகூர்ந்து குற்றவுணர்வினால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆண்டவர் என்னை அந்த பாவத்திற்காக தண்டிப்பாரோ என்று எண்ண வேண்டிய அவசியமில்லை. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது வேறு. ஆனால் நம்முடைய பாவத்தின் விளைவை நாம் சந்திக்க நேரிடலாம். மது அருந்துபவன் தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டாலும் தன்னுடைய சரீரம் பாதிக்கின்ற விளைவை அனுபவிக்கிறான். ஆகவே இந்த வித்தியாசத்தை நாம் விளங்கிக்கொள்வோம். நம்முடைய மன்னிக்கப்பட்ட பாவங்களைக் குறித்து குற்றவுணர்வு இல்லாமல்  அதை ஆண்டவர் மூடிவிட்டார் என்ற மகிழ்ச்சியோடு வாழ்கின்ற வாழ்க்கையைக் கொண்டிருக்க அவர் நமக்கு உதவி செய்வாராக.